இன்னும் வேகமாக ஓடுவதற்கான எரிபொருள்...!

"நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. தனித்துவமான அடையாளங்களாக என் படங்கள் இருக்க வேண்டும் என
இன்னும் வேகமாக ஓடுவதற்கான எரிபொருள்...!

"நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. தனித்துவமான அடையாளங்களாக என் படங்கள் இருக்க வேண்டும் என மனசுக்குள் ஒரு எண்ணம் இருக்கும். அதன் தொடக்கமாக "துருவங்கள் 16' படத்தை பார்க்கிறேன். நிறைய பாராட்டுகள்... வாழ்த்துகள்... என வந்து சேரும் இந்த தருணம் இன்னும் அழகு. இத்தனை ஆண்டு பயணத்துக்கான அர்த்தம் இது. இந்த நிமிஷம்தான் ஒரு கலைஞனுக்கு ரொம்ப முக்கியம். "முகத்திரை', "பகடி ஆட்டம்' என அடுத்து வருகிற என் சினிமாக்களும் இப்படித்தான் இருக்கும். இனி இப்படியான நிலையான என் காத்திருப்புகள் தொடரும்.'' ஆழ்ந்து பேசத் தொடங்குகிறார் ரகுமான். இத்தனை கால சினிமா பயணத்தில் "துருவங்கள் 16' கொடுத்திருக்கும் வெளிச்சம் ரகுமானுக்கு புத்தம் புதுசு.
ரகுமானுக்கு இது அடுத்த கட்டம்... இந்த திருப்பு முனையை எதிர்பார்த்தீர்களா...?
இருக்கலாம். உண்மைதான். பூங்கொத்து... பாராட்டு... எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆஃப் குறுஞ்செய்தி என தேடி வருகிற எல்லா வாழ்த்துகளும் அப்படியான எண்ணத்தைத்தான் உருவாக்கி இருக்கிறது. சினிமாவை வெறும் கால்ஷீட் வாழ்க்கையாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு, இது புது அனுபவம்தான். ஒரு சினிமா நல்ல அனுபவமாக மாறின தருணம் இது. எதையும் அனுபவங்களாக பார்க்க வேண்டும் என இந்த சினிமா புரிய வைத்திருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேன் தேடி வந்த போது கூட, நான் இன்னொரு படப்பிடிப்பில் போலீஸ் உடையில்தான் இருந்தேன். "சார் இந்தப் படத்திலும் நீங்க போலீஸ்தான்...' என்று ஆரம்பித்ததும், எனக்கு சலிப்புதான் வந்தது. மனசு பிடி கொடுக்கவில்லை. "பார்க்கலாம்...' என சொல்லி அனுப்பி வைத்தேன். அதன் பின்னும் தேடி வந்து கதை சொன்னார். ஏதோ ஓர் இடத்தில் ஞானம் வந்தது போன்று இருந்தது. பட்டென்று இதை சேர்ந்து செய்யலாம் என்றேன். வருவேன், வேலையை முடிப்பேன் என எல்லா படங்கள் மாதிரி இதில் வேலை பார்க்கவில்லை. சின்ன நம்பிக்கை மனசையும், உழைப்பையும் கதைக்குள் கொண்டு போனது. உண்மையாக இருந்தால் நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.    
முழுப் படத்தையும் தாங்கி பிடிப்பது போன்ற கதைகள் இனியும் வந்தால், அதை சுமையாக நினைப்பீர்களா...?
எதையும் சுமையாக நினைக்கக் கூடாது. அதுதானே என் வேலை. முன்பு மாதிரி இல்லை. சினிமாவை வேறு மாதிரி அணுக வைத்திருக்கிறது இந்த வெற்றி. வயது, அனுபவம், கசப்புகள், உண்மை இப்படி நிறைய விஷயங்கள் இந்த சினிமா பயணத்தில் இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி, ஒரு நல்ல விஷயம் இதில் தொடங்கியிருக்கிறது என்பது எளிமையான உண்மை. அதை தக்க வைத்து அடுத்தடுத்து பயணிக்க வேண்டும்.  100-க்கும் அதிகமான படங்கள், 30 ஆண்டு சினிமா பயணம், எத்தனை விஷயங்கள், எத்தனை இயக்குநர்கள், ஆயிரக்கணக்கான கோஆர்ட்டிஸ்ட்களோடு பல மொழிகள் என பயணமாகி வந்திருக்கிறேன். யாரையும் குறை சொல்லவில்லை. இப்போதுதான் என்னை புரிஞ்சுக்கங்க... என்று கத்திச் சொல்ல தோன்றுகிறது. 
வலிகள் அதிகமாக இருக்கும் போல... இத்தனை வருஷ சினிமா அனுபவத்தை திரும்பிப்பார்க்கும் போது எப்படி இருக்கிறது...?
வலிகள் இல்லாமல் எப்படி இருக்கும்? ஆனால், அதைத் தாண்டி கிடைத்திருக்கிற அனுபவங்கள் அற்புதமாக இருக்கின்றன. எப்படிப்பட்ட டிராவல் இது. வலிகள் இருப்பது போல, சந்தோஷமும் இருக்கிறது. என் சினிமாக்களை மாற்றிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் "துருவங்கள் 16' முக்கியமானது.  என்னை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயம் இது. விமர்சனங்கள், கேலிகள் என என்னை கீழே தள்ளிய விநாடிகளும் உண்டு. "சார் ரொம்பவே புதுசா இருக்கீங்க...' என்று சொல்லிப் போகிற பாராட்டுதான் என்னை உயிர்ப்பாக வைத்திருக்கிறது. 
இதுவரைக்கும் கிடைத்த பாராட்டில் எது பெஸ்ட்...?
நிறைய பேர் பேசினார்கள். மோகன் சார் பேசினார். ஒரு வகையில் பார்த்தால், அவர் என் செட். "உங்களைப் பார்க்கப் பெருமையாக இருக்கு... இது, சினிமாவில் உங்கள் விசிட்டிங் கார்டு...' என சொன்னார். சந்தோஷமாக இருந்தது, அந்த பாராட்டு. ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிவகார்த்திகேயன் இப்படி பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்தது. இது எல்லாம் எனக்கு உத்வேகம். இன்னும் வேகமாக ஓடுவதற்கான எரிபொருள். எல்லோருக்கும் நன்றிகள் பல. 
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com