இப்படியும் ஓர் அப்பா! வழக்கறிஞர் எஸ். தமிழ்ப்பூங்குயில்மொழி

அந்த அதிர்ச்சி தரும் தகவல் இதுதான்... மாப்பிள்ளையிடம், அஞ்சலியின் அப்பா, தன் பெண்ணை பொங்கலுக்கு வந்து அழைத்துச் செல்லும்படியும்,
இப்படியும் ஓர் அப்பா! வழக்கறிஞர் எஸ். தமிழ்ப்பூங்குயில்மொழி

அந்த அதிர்ச்சி தரும் தகவல் இதுதான்... மாப்பிள்ளையிடம், அஞ்சலியின் அப்பா, தன் பெண்ணை பொங்கலுக்கு வந்து அழைத்துச் செல்லும்படியும், அழைத்துச் சென்ற உடன் அவரது செல்போனை வாங்கி உடைத்துப் போட்டுவிடும்படியும், தன் அம்மாவுடனோ, உறவினர்களுடனோ, தோழிகளுடனோ பேசவிடவேண்டாம் என்றும், வாய்க்கு வந்தபடி அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைப் பிரயோகித்து, அஞ்சலிக்கு வேலைக்கு இன்டர்வியூ வந்திருப்பதாகவும், இன்டர்வியூவிற்கோ, வேலைக்கோ அனுப்ப வேண்டாம் என்றும், அஞ்சலியின் அம்மா மகளின் வாழ்க்கையைக் கெடுப்பதாகவும் பல பொய்யான தகவல்களை மாப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்து தன் மனைவியைப் பழிதீர்ப்பதாக நினைத்து, மகளின்  வாழ்க்கையை வெற்றிடமாக்கிக் கொண்டிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல், மாப்பிள்ளை தயார் என்றால், மகளையும் தாயையும் வீட்டைவிட்டே துரத்தி விடக்கூடத் தான் தயாராக இருப்பதாகவும் பேசியிருக்கிறார். 

மகளின் வாழ்க்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய பாசமுள்ள தந்தைகளைப் பார்த்திருக்கிறேன்; இவரோ மாப்பிள்ளையோடு சேர்ந்துகொண்டு மகளின் வாழ்க்கையைப் பாழாக்க இப்படிப் போராடிக்  கொண்டிருக்கிறார். 

இந்த வினையின் பின்புலம் என்ன என்று கேட்டேன்.

இளவயது முதலே அஞ்சலியின் தாயார், ஒரு நல்ல உடை உடுத்த முடிந்ததில்லை, தலையைவாரி பின்னல் போட்டால் அதற்கு ஒரு அதட்டல்; வாசலில் நின்று யாருடனாவது பேசினால் அதற்கொரு மிரட்டல் என்று, பாதி நேரம் மங்கிப்போன உடையிலேயே, படிய வாரிக்கொள்ளாமல் கொண்டை போட்டுக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்வது ஒன்றையே வாடிக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.

மனைவியைப் போலவே மகளும் வாழவேண்டும் என்று மாப்பிள்ளைக்கும் தன் பாடத்தைப் புகட்டுகிறார்...என்றார் அஞ்சலி. எனக்குப் பெரும் அதிர்ச்சி. இப்படியும் ஓர் அப்பாவா..?
தாய் பட்ட கஷ்டங்கள், சிரமங்களையெல்லாம் சிறு வயதிலிருந்தே கண்ணுற்று வந்த அஞ்சலி, தன் கணவனிடம், தாய் பட்ட அவலங்களைச் சொல்லி, வேலைக்குப் போய் தன் தாயையும் தன்னுடன் வைத்து, நல்லபடியாகக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டு, அனுமதியையும் தாலி கட்டுவதற்கு முன்பாகவே தன் கணவரிடம் பெற்றிருக்கிறார். அப்போது சரி என்று சொன்ன கணவன், இப்போது மறுப்பதற்குக் காரணம் அஞ்சலியின் அப்பாதான்!  

அதற்குக் காரணம் என்ன தெரியுமா? தாய்வழி உறவுகள், தன்னுடைய மகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, செலவிடக் கொடுக்கும் தொகைகளை தன்னிடம் நேரடியாகத் தராமல் தன் மனைவியிடம் தருவதும், தன் மனைவியும் பணத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு, மகளின் படிப்பு முதல் திருமணம் வரையில் வரவு செலவுகளைப் பார்த்து வந்ததும் அவரைப் பொறுத்த வரையில் கொலைக் குற்றமாம்!

அந்தக் கோபம் எல்லாம் சேர்ந்து அவர் மனதில் வன்ம எரிமலையாய்க் கனன்று கொண்டிருந்தது இப்போது வெடித்திருக்கிறது என்றார் அஞ்சலி! 
எந்த கணவனுக்கும், மனைவியோ, அவரது உறவினர்களோ மதிப்பு மரியாதை கொடுக்கவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும், அதுவும் அவரது இயலாமையால்தான் மதிப்பும் மரியாதையும் குறைகிறது என்ற முடிவிற்கு அவர் வந்திருக்கலாம் இல்லையா? நான் கேட்டேன்.

அதற்கு அந்தப் பெண், மதிப்பு மரியாதையில் எந்தக் குறைவும் வைத்ததில்லை. 

திருமணத்தின் போது கூட "இதெல்லாம் செய்கிறோம்... இதையெல்லாம் செய்யப்போகிறோம், நீங்கள் கவலைப்படாதீர்கள்' என்று சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள். மொத்த தொகையையும் அவர் கையில் கொடுத்துத் திருமண செலவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான் அவரது கோபத்துக்கு உச்ச கட்டமானது. உறவினர்கள், தொகையை தந்தையின் கையில் கொடுத்திருந்தால், பத்தில் ஒரு பங்கு கூட இந்தப் பெண்ணுக்கோ, அவரது தாய்க்கோ போய்ச் சேர்ந்திருக்காது என்று அந்தப் பெண் சொன்னபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது... 

நிஜமாகவே இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா..? 
ஒரு கட்சிக்காரராக அவர் சொன்ன, கேட்ட, அந்த தந்தையின் உரையாடலை அறிய நேர்ந்திருந்தால், ஒருவேளை இந்தப் பெண்ணும் அம்மாவும்தான் தவறிழைத்திருப்பார்கள் என்று நினைத்திருப்பேன். மாறாக, அந்த இரண்டு குடும்பங்களுமே நான் அறிந்த குடும்பங்கள். நெருங்கிய தொடர்பிலும் இருப்பதால், புரிகிறது. இரண்டு அப்பாவிப் பெண்கள், எதிராளிகள் போல் நடந்து கொள்ளும் தங்கள் கணவர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிகிறது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தை மாரடைப்பால் காலமாகிவிட்டார். மற்றவர்கள் தன் அப்பாவின் அன்பை சிலாகிக்கும்போது நான் இழந்தவை நிறைய என்ற ஏக்கம் இன்றுவரை என்னுள் உண்டு.

முதன் முதலில் இப்படி ஒரு அப்பாவை ஒரு பெண்ணாக மட்டுமல்ல, வழக்கறிஞராகவும் கேட்டறியும் போது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் "வன்முறை' என்பதனை மாற்றி வேறு வார்த்தையைப் பிரயோகித்திருக்கலாம் என எண்ணியதுண்டு. "வன்முறை' என்பது மரணம் விளைவிக்கும் ஆயுதங்களால் தான் ஏற்படவேண்டியதில்லை. வார்த்தைகளை விட வேறு பெரிய கருவி தேவையில்லை என்பதை உணர்த்தும் விதமாகத்தான் சட்டத்தின் பெயர் சரியான சொல்லால்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைசார் வன்முறை என்பது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ இருக்கலாம். ஆயுதம் கொண்டு தாக்கியிருந்தாலும், நிராயுதபாணியாக இந்தக் காரணங்களால் அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து, தண்டனை பெற்றுத்தரமுடியும். ஒரே ஒரு நிபந்தனை; குற்றம் புரிந்தவர் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும். அது கணவர் வீட்டாராக இருந்தாலும் சரி, கடமை தவறிய, கீழ்த்தரமான அப்பாவே என்றாலும் சரி.

இது போன்ற பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கெல்லாம் வழக்கறிஞராக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கையில் பிரச்சினைகளைக் கண்டு பயந்து துவண்டு விடாதீர்கள். எதிர்த்துப் போராடும் மனதிடத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு வேலையைத் தேடிக்கொண்டீர்களானால் மன திடம் தானாகவே கிட்டிவிடும். 

திருமணத்தின் போது உங்களுக்கெனத் தரப்படும் சொத்துக்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் அனைத்து பொருட்களுமே உங்களது தனிப்பட்ட சொத்து. அதனை யாரும் தட்டிப்பறிப்பதற்கு உரிமையில்லை. அது கணவனே ஆனாலும் உங்கள் அனுமதியோ விருப்பமோ இல்லாமல் எடுத்துக் கொண்டால் அதனைத் திரும்பப் பெறுவதற்கும் சட்டத்தில் வழி உண்டு. 

அன்பினால் தாமாக முன்வந்து கொடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயத்தில் மருமகள்களுக்கு புகுந்த வீட்டில் அங்கீகாரம் வரும் காலம் வரையும், இன்சொல்லும் அன்பும் பரிமாறப்படும் காலம் வரும் வரையும் இதுபோன்ற குற்றச் செயல்களால் குடும்பங்கள் சிதறிக்கொண்டிருப்பதை தவிர்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவே. 

இந்தப் பெண்ணைப் பொருத்தவரை, இவரது அப்பா, மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வன்முறையைப் பிரயோகித்திருக்கிறார்.  கணவரைப் பொருத்தவரை உடல், மனம், பொருளாதார ரீதியாக குற்றம் இழைத்தவர் ஆகிறார். இவர்கள் இருவர் மட்டுமல்ல, இந்தப் பெண்ணின் மாமனார், மாமியார், கணவரின் சித்தப்பா, சித்தி  இவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியும். இந்த சம்பவம் இந்திய தண்டனைச் சட்டம் 498-அ, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள்.

இந்தப்பெண்ணின் தாயும் தாராளமாகத் தன்னுடைய கணவர் மீது புகார் கொடுத்து சட்டத்தின் துணையோடு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர இயலும். அதற்கு பாதிப்புக்கு உள்ளான இந்த இரண்டு பெண்களில் ஒருவராவது  புகார் கொடுக்க முன்வரவேண்டும். அவர்கள் தயங்கினால் நீதி கிடைக்காது. 

மகப்பேறு விடுப்பு, வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் தனிமைப்படும் குழந்தைகள் நிலை, குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் நிலையும், அதனால் பதிவாகும் வழக்குகள் பற்றியும் அடுத்த இதழில் பார்க்கலாம்.   
 (தொடரும்)
படம்: அண்ணாமலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com