வில்லுப்பாட்டு  வித்தகி  பூங்கனி!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையின் சார்பில் நடந்த வில்லுப்பாட்டு  நிகழ்ச்சியில் பாடி  அசத்திய பூங்கனிக்கு வயது எழுபத்திநான்கு. 
வில்லுப்பாட்டு  வித்தகி  பூங்கனி!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையின் சார்பில் நடந்த வில்லுப்பாட்டு  நிகழ்ச்சியில் பாடி  அசத்திய பூங்கனிக்கு வயது எழுபத்திநான்கு. 

பல்  போனாலும்,   பாடுவதில்   சொல் சேதம்  இல்லை. குரல்  பிசிறு தட்டவில்லை. வில்லின் முன் அமர்ந்து விட்டால் உற்சாகமாகக் கணீர்  குரலில்    பாடுகிறார்.  கோல்கள்  கொண்டு  வில்லின்   நாணை அதிரவைக்கிறார். இன்றோ தமிழக அரசு  வழங்கிவரும்   முதியவர்களுக்கான  ஓய்வூதியம்  மாதம் ஆயிரம்தான் வருமானம்!  பூங்கனி அம்மாவின் "நேற்று' மிகவும் செழிப்பானது வளமையானது. 

தனது மலரும் நினைவுகளை பங்கு வைக்கிறார் பூங்கனி:
"வில்லை அடிப்படையாக வைத்து  பாடப்படுவதால்  இதற்கு வில்லுப்பாட்டு  என்ற பெயர் வந்தது.  வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பெரும்பாலும்  புராணக் கதைகளை   பாடல் மூலம் சொல்வோம்.  விளக்கம்  இடை இடையே  வசனமாகவும்  இருக்கும்.  

வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படும்  வில்  பெரிதாக இருக்கும்.  வில்லின் இருமுனையையும்  இணைக்கும் நாணில் (கயிறு)  சின்னச் சின்ன மணிகள் கோர்க்கப் பட்டிருக்கும்.  நாண் அதிரும் போது  மணிகள் குலுங்கி  கால் சலங்கை குலுங்கும்  சப்தத்தை ஏற்படுத்தும். நாணை அதிரவைக்க  இரண்டு வீசுகோல் பாடுபவர் கையில் இருக்கும்.   ராக தாளத்திற்கு ஏற்றவாறு  வீசு கோலால்  நாணை  அடித்து  அதிரச் செய்வார்.  இன்னொரு இசைக்கருவி   மண் பானை. 

கடம் போல் மண்பானையை   பயன்படுத்துவார்கள்.  மண் குடத்தின் வாயில் தட்டுவதற்காக  கை விசிறி  போன்ற  பத்தை இருக்கும். மண்பானையைப்  பக்கவாட்டில் கொட்டி  சப்தம்  உண்டாக்க  சொட்டுக்கட்டையும்  உண்டு.   வில்லின் பக்கவாட்டில் மண்பானையின் கழுத்து  கட்டப்பட்டிருக்கும்.  தாளத்திற்கு  ஏற்றமாதிரி  பின்னால் இருந்து  கொண்டு தட்ட  இரண்டு சின்ன கட்டைகள், ஜால்ரா இரண்டு   உடுக்கை  ஒன்று.  இவைதான்  வில்லுப்பாட்டில்  பயன்படுத்தப்படும்  இசைக்க கருவிகள்.  பின்னால் உள்ளவர்கள் முன்னணிப் பாடகருடன்  இணைந்து  பின்பாட்டு பாடுவார்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில்  அகஸ்தீஸ்வரத்திற்கு  பக்கத்தில் சரவணசேரி கிராமத்தில் பிறந்தேன். நான் ஐந்தாவது  குழந்தை.   எனது  சகோதரருக்கு  வில்லுப்பாட்டு கற்று கொடுக்க  கலைஞர் வேதமாணிக்கம்  எங்கள் வீட்டிற்கு வருவார்.   எனக்கும் வில்லுப்பாட்டில்   ஈர்ப்பு ஏற்படவே.. நானும்  வில்லுப்பாட்டு படிக்க ஆரம்பித்தேன்.  அப்போது எனக்கு வயது  பதினொன்று.  

வில்லுப்பாட்டை  சரிவரக் கற்றுக்கொண்டு  நிகழ்ச்சிகளில்  பாட ஆரம்பித்தேன். அப்போது  ஒரு  நிகழ்ச்சிக்கு பத்து  ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம். 

நான் பிரதான பாடகி என்பதால்  இருபது வரை கிடைக்கும்.   அது பின்னாளில்  இருபதாயிரம்  வரை உயர்ந்தது.

வில்லுப்பாட்டுக் கலைஞரான தங்கப்பாண்டி என்பவரை எனது பதினைந்தாவது வயதில்    திருமணம் செய்து  கொண்டேன்.  கணவர் தங்கப்பாண்டி.

வில்லுப்பாட்டில் "குடம்' வாசிப்பவர்.  ஒரே கலையில் ஈடுபட்டிருந்ததால்  மனமும்  சிந்தனையும் ஒத்துப் போனது.    வில்லுப்பாட்டில்  எனக்குப்  பேரும் புகழும் கிடைத்தன. தென் தமிழகம்  முழுவதும் சுற்றி வந்தேன்.  வெளியூர்  போகும்போது  வில் வண்டியில்தான் போவோம். எந்த ஊர் போனாலும்  அங்கு எனக்கு ரசிகர்கள்  உருவாகிவிடுவார்கள். 

பெண்களின் மத்தியிலும்  நான் பிரபலமாக இருந்தேன். விதம் விதமான சேலைகள் .. பல  தினுசு  நகைகள் போட்டுக் கொண்டு  நிகழ்ச்சிகளுக்குப்   போவேன். கன்னியாகுமரி மாவட்டத்தில்  பூங்கனி தோடு, ஜிமிக்கி, கம்மல் என்று பெண்கள் கேட்டு வாங்குவார்கள்.  வில்லுப்பாட்டுன்னா  பூங்கனின்னு ஒரு காலம் இருந்திச்சு. அது ஒரு மகரந்தக் காலம். சின்ன வயதில்  மனப்பாடமான நூற்றுக் கணக்கான  பாடல்கள்  இப்போதும் என்னிடத்தில் புதைந்து கிடக்கின்றன. 

மூப்பு வந்து விட்டாலும்  மூச்சாக அந்தப் பாடல்களை  நேசிக்கிறேன். அவற்றை  அடுத்த தலை முறைக்காக ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு வசதிகள் இல்லை. அதுதான்  சஞ்சலப்படுத்துகிறது. 

ஒரு கட்டத்தில், வில்லுப்பாட்டுக்கு   வரவேற்பு   குறைய ஆரம்பித்தது.  அதனால், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை   முழுமையாக  நிறுத்தி விட்டேன். வில்லுப்பாட்டிலிருந்து   நான் விலகியதால்... என் பெயரும்  மக்களின் நினைவிலிருந்து  விடை வாங்கியிருக்க வேண்டும். அப்போது, வசதியாக வாழ்ந்த நான்  ஒரு குடிசையில் ஒதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.  எனக்குக்  குழந்தைகள் பிறக்கவில்லை. கணவர் இறந்த பிறகு, இப்போது நான் அநாதை. என் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் சுதா  என்பவர்தான் இப்போது என்னைப் பார்த்துக் கொள்கிறார்.

நான்  அன்றைக்குப் பிரபலமாக இருந்தாலும், சொல்லிக்கிற மாதிரி விருது  ஏதும் வழங்கப்படவில்லை. சென்னைப்பல்கலைக்கழக இதழியல்  துறைத்  தலைவர் ரவீந்திரன் அய்யா  தான்  இந்த  வயதிலும்  பாட   சந்தர்ப்பம்  தந்திருக்கிறார்'' என்றார்.

பூங்கனி  தற்சமயம் வசிப்பது  கொட்டாரம் ராமச்சந்திர நகரில்  ஒரு சிறிய வீட்டில்.   
- பனிமலர்
படம் உதவி:  சென்னைப்  பல்கலைக்கழக  இதழியல்  துறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com