சாதனைப் பெண்மணிகள்-7: இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி!

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி, கர்நாடகத்தின் முதல் பெண் பொறியாளர் ஆகிய பெருமைகளுக்கு உரியவர் ராஜேஸ்வரி சட்டர்ஜி.
சாதனைப் பெண்மணிகள்-7: இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி!

இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிர் பலர் உள்ளனர். அவர்களை அறிமுகம் செய்யும் தொடர் இது:
இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி, கர்நாடகத்தின் முதல் பெண் பொறியாளர் ஆகிய பெருமைகளுக்கு உரியவர் ராஜேஸ்வரி சட்டர்ஜி. நுண்ணலைகள் (microwave engineering), உணர் பொறியியலில் (antennae engineering) அவர் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறார்.

கன்னட இலக்கிய உலகில் புகழ் பெற்ற கமலம்மா தாசப்பாவின் மகன் பி.எம்.சிவராமையாவின் மகளாக, 1922 -ஆம் ஆண்டு ஜனவரி
24-இல் ராஜேஸ்வரி பிறந்தார். பெங்களூரு மத்தியக் கல்லூரியில் கணிதத்தில் பி.எஸ்.சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தொடர்ந்து எம்.எஸ்.சி பட்டமும் பெற்றார்.

அதைத் தொடர்ந்து, இந்திய நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் சர்.சி.வி.ராமனை, ராஜேஸ்வரி சந்தித்து தன்னை இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்) ஆராய்ச்சியாளராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர் கணிதம் படித்திருந்ததால் ராமன் தவிர்த்துவிட்டார். இயற்பியலில் பட்டம் பெற்றவரே தேவை என்றார் ராமன். ராஜேஸ்வரி மனம் தளராமல் அதே கல்வி நிறுவனத்தின் மின்னியல் துறையில் 1943- இல் ஆராய்ச்சியாளராக இணைந்தார்.

ஐ.ஐ.எஸ்.-இல் (மின்னியல்)துறையில் சேர்ந்த அவர், அங்கு திறம்படப் பணியாற்றினார். அதன் விளைவாக வெளிநாடு சென்று ஆராய்ச்சிப் படிப்பு பயில இந்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற்ற அவர் 1947-இல் அமெரிக்கா சென்றார். 1949-இல் நாடு திரும்பிய ராஜேஸ்வரி, 8 மாதங்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தேசிய தர நிர்ணய நிறுவனத்தில் வானொலி அதிர்வெண் அளவீடுகள் (Radio Frequency Measurements) பிரிவில் செய்முறைப் பயிற்சி பெற்றார். 1952- இல் மெக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ராஜேஸ்வரி, மின்னியல் பொறியியலில் எம்.எஸ்.சி பட்டமும், அதே துறையில் பி.எச்.டி பட்டமும் பெற்றார். 1953 -இல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின (ஐ.ஐ.எஸ்) மின்னியல் தொடர்பியல் துறையில் ஆராய்ச்சியாளராக இணைந்தார்.

அங்கேயே பேராசிரியராக உயர்வு பெற்று 1982 வரை பணியாற்றிய அவர், மின்னியல் தொடர்பியல் துறையில் தலைவராக ஓய்வு பெற்றார். 1953- இல் ஐ.ஐ.எஸ்.-இல் பேராசிரியராகப் பணியாற்றி வந்த சிசிர்குமார் சட்டர்ஜியை, ராஜேஸ்வரி திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து நுண்ணலைப் பொறியியலில் (microwave engineering), ஆய்வுகள் நிகழ்த்தினர். இத்துறையில் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதன்மை ஆய்வுகள் அவை.

மிக விரைவில் நுண்ணலை ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தையும் அவர்கள் நிறுவினர். தனது பணிக்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ராஜேஸ்வரி, நுண்ணலைகள், உணர் பொறியியலில் 6 நூல்களையும் எழுதியுள்ளார். 2010 செப்டம்பர் 3-ஆம் தேதி ராஜேஸ்வரி
காலமானார்.
- ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com