பருத்தி துணியாலான அணையாடை!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் குறிப்பாக வளரிளம் பெண்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் குறிப்பாக வளரிளம் பெண்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே மனரீதியாகவும் சமூகரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மாதந்தோறும் வியாபார நோக்கத்துடன் தரமற்ற வகையில் விற்பனையாகும் சானிட்டரிநாப்கின்களை (அணையாடைகள்) வாங்கி பயன்படுத்தியபிறகு, அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதற்கு பகீரதபிரயத்தனம் மேற்கொள்ளும்நிலை ஏற்பட்டுள்ளது. அவை சரியான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்படாததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. அவற்றில்உள்ள நெகிழிப்பொருட்கள் (பிளாஸ்டிக்) பல ஆண்டுகள் மக்காமல் மண் மற்றும் தண்ணீரை மாசுப்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தி அழிக்கும் வகையில் பொதுக்கழிப்பிடங்களில் எரியூட்டிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டநிலையில், அவற்றை செயல்படுத்துவதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் திட்டங்கள் ஏட்டளவிலேயே உள்ளன. அங்கொன்றும்இங்கொன்றுமாக தற்போதுதான் மாநகராட்சி பகுதிகளில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சானிட்டரி நாப்கின்களை அழிப்பதில் மட்டும்தான் பிரச்னை என்றால், அவற்றை பயன்படுத்துவதிலும் பிரச்னைகள் இருப்பது அண்மையில்கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, சானிட்டரி நாப்கின்களில் 90 சதவீதம் பாலிபுரொப்லின் என்ற பிளாஸ்டிக் பொருளும் ஒருவிதமான ரசாயனமும் கலந்துள்ளதாம். எனவே, சானிட்டரிநாப்கின்களை பயன்படுத்தும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக,நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், தொற்றுகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதிருச்சியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர் " கிராமாலயா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், புதிய வகையான, பருத்தித்துணியால் தயாரிக்கப்பட்ட, இந்த அணையாடையை " ஃபீல்ஃப்ரீ' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அமிர்தமதி கூறுகையில்:

"பருத்தித் துணியாலான இந்த அணையாடைகளை குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் தற்போது புதியதாக கண்டுபிடித்து சந்தையில்
அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை ஓராண்டு காலத்துக்கு நன்கு துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதும் எளிது. இவற்றை 8 மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றினாலே போதுமானது. உபயோகித்த பிறகு நன்குதுவைத்து வெயிலில் உலர்த்தியபிறகு மீண்டும் பயன்படுத்தலாம்.

அண்மையில் புதுதில்லியில், வாட்டர் எய்டு மற்றும் தஸ்ரா நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாதவிடாய் சுகாதாரம் குறித்த நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனஆலோசகர் கீதா தலைமையில், மகளிர் குழுவினர் இதை அறிமுகம் செய்தனர்'' என்றார்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் செல்வம் ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது:
"பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அணையாடை மகளிருக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். உடல் உபாதைகள் இருக்க வாய்ப்பில்லை.

முக்கியமாக, இதில் பிளாஸ்டிக் இல்லை என்பது மிகவும் வரவேற்கக் கூடியது. மேலும் எளிதாக அழியும் தன்மையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அணையாடை நிச்சயமாக பெண்களுக்கு வரப்பிரசாதம்'' என்றார்.
- ஆர்.எஸ். கார்த்திகேயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com