சமையல்... சமையல்... சமையல்...!

ரோஸ்மில்க், மில்க் ஷேக், தர்பூசணி பானம், ஆரஞ்சு, திராட்சை லஸ்ஸி, ஆரஞ்சு, கேரட் பானம்

ரோஸ்மில்க்

தேவையானவை:
பால் - 1 டம்ளர்
பொடித்த சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் மில்க் எசன்ஸ் - 2 தேக்கரண்டி
சப்ஜா விதை - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை: பாலை நன்கு காய்ச்சி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். பால் ஆறியதும் அத்துடன் பொடித்த சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், விரும்பினால் ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.  பின்னர், மிக்ஸியில் அடித்த ரோஸ் மில்க்குடன் அரைமணி நேரம் ஊற வைத்த சப்ஜா விதையை சேர்க்கவும். அத்துடன் தேன் சேர்த்து கொடுக்கவும். சுவையான ரோஸ் மில்க் தயார்.
(குறிப்பு: சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம் இது. மலச்சிக்கலைப் போக்கும்.)

மில்க் ஷேக் 

தேவையானவை:
பேரீச்சம்பழம் - 2 
காபி டிக்காஷன் - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
பால் - 1 டம்ளர்
வெண்ணிலா ஐஸ்க்ரீம் - 1 தேக்கரண்டி
செய்முறை: ஊறவைத்த பேரீச்சம்பழம், காபி டிக்காஷன், பால், பொடித்த சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து ஒரு கண்ணாடி குவளையில் ஊற்றி அதன்மீது வெண்ணிலா ஐஸ்கிரீம், தேன் வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

தர்பூசணி பானம்

தேவையானவை:
தர்பூசணி பழம் - 1 துண்டு
கருப்பட்டி பாகு - 2 தேக்கரண்டி
புதினா இலை - 2 இலை
மிளகு - 1 சிட்டிகை
செய்முறை: தர்பூசணி பழத்தின் தோலை சீவிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அத்துடன் புதினா இலை, கருப்பட்டிப் பாகு சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். பருகும்போது 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும்.
( குறிப்பு: கருப்பட்டி அதிகம் இருந்தால் அதனை பாகாக காய்ச்சி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துக்  கொள்ளலாம்)

ஆரஞ்சு, திராட்சை லஸ்ஸி

தேவையானவை: 
ஆரஞ்சு பழம் - 1
திராட்சை பழம் - சிறிது
பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப
புளிக்காத தயிர் - 2 கிண்ணம்
தேன்- 2 தேக்கரண்டி
செய்முறை: முதலில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்து அத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து ஐஸ் க்யூப்களாக செய்து கொள்ளவும்.
திராட்சை பழத்தை நன்கு மசித்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்து காய்ச்சினால், கலர் கிடைக்கும் அது ஆறிய பின்பு வடிக்கட்டி சர்க்கரை சேர்த்து முன்பு போலவே ஐஸ் ட்ரேயில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து ஐஸ் க்யூப்களாக செய்து வைத்துக் கொள்ளவும். 
பின்னர், புளிப்பில்லாத கெட்டி தயிர், பொடித்த சர்க்கரை, தேன் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். பின்னர், அதனை டம்ளரில் மாற்றி அத்துடன் ஆரஞ்சு, திராட்சை ஐஸ் க்யூப்களைச் சேர்த்து பரிமாறவும்.

ஆரஞ்சு, கேரட் பானம்

தேவையானவை:
கேரட் - 1
ஆரஞ்சு - 1
புதினா - 2 இலை
கருப்பட்டி - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை: கேரட்டை தோல் சீவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் புதினா இலை சேர்த்து மிக்ஸியில் லேசாக அடிக்கவும். அவற்றுடன் கருப்பட்டி பாகு, ஆரஞ்சு சாறு சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை வடிக்கட்டி ஒரு டம்ளரில் மாற்றி அத்துடன் தேன் கலந்து பரிமாறவும். சுவையான ஆரஞ்சு, கேரட் பானம் தயார். 

யோகட்

தேவையானவை:
கெட்டிதயிர் - 1 கிண்ணம்
தேன் - 2 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை - தேவையான அளவு
செவ்வாழை - 1
ஆரஞ்சு பான பவுடர் - 1 தேக்கரண்டி
எள், ஆலிவிதை - சிறிதளவு
செய்முறை: புளிப்பில்லாத கெட்டி தயிர், அதில் நறுக்கிய செவ்வாழை துண்டுகள், ஆரஞ்சு பான பவுடர், தேன், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அதன் மீது வறுத்த எள், ஆலி விதையை தூவி பரிமாறவும். சுவையான சத்தான யோகட் தயார்.  

ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஜெல்லி

தேவையானவை:
சைனா கிராஸ் - சிறிதளவு
சர்க்கரை - 1 கிண்ணம்
ஆப்பிள், மாதுளை - துண்டுகள் சிறிதளவு
பேரீச்சம்பழம், பாதாம்,
திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
செய்முறை: ஜெல்லி செய்வதற்கு என்று கேட்டால் நாட்டுமருந்து கடைகளில் சைனா கிராஸ் கிடைக்கும்.  அதை துண்டு துண்டாக நறுக்கி அலசி சுத்தம் செய்துவிட்டு, அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு அதை வாணலியில் இட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். சைனா கிராஸ் முழுவதும் கரைந்ததும் அத்துடன் சர்க்கரை சேர்க்கவும். அதுவும் கரைந்ததும், ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துகள், பேரீச்சம்பழம், பாதாம், திராட்சை, ஏலக்காய் சேர்த்து அதில் கரைந்த சைனா கிராஸ் பாகுவை ஊற்றி ஆற விடவும். சிறிது நேரத்தில் அது கெட்டியாகி ஜெல்லிப் போன்று ஆகிவிடும். அதை ஒரு தட்டில் கவிழ்த்தால் தனியாக வந்துவிடும். ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஜெல்லி தயார்.  குழந்தைகள் விரும்பிய வடிவத்தில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக உண்ணுவார்கள்.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் கு.பத்மபிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com