பொருளும் ஆதாரமும் இல்லா தாரம்! - வழக்குரைஞர்   சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

பணியிடத்திலும் சரி, குடும்பங்களிலும் சரி பலவகைத் துன்புறுத்தல்கள், தீங்குகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பொருளும் ஆதாரமும் இல்லா தாரம்! - வழக்குரைஞர்   சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

பணியிடத்திலும் சரி, குடும்பங்களிலும் சரி பலவகைத் துன்புறுத்தல்கள், தீங்குகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லா சம்பவங்களுமே புகார்களாகின்றனவா என்றால்... பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பலப் பல இன்னல்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருப்போர் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சில பொய்யான புகார்களும் பதிவாகிக் கொண்டுதானிருக்கின்றன.  

குடும்பங்களை எடுத்துக்கொண்டால், பிரச்னைகளின் வீரியத்தைப் பொறுத்துதான் புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்படுகின்றன என்றால்... அது பொய்யான கருத்து. வீரியம் பெரிதெனினும், சிறிதெனினும் அதனைக் கையில் எடுக்கும் பெண்களின் மனநிலையைப் பொறுத்தே புகார்கள் பதிவாவதும், தவிர்க்கப்படுவதும் அமைகின்றன என்பதுதான் என்னுடைய அனுமானம். 

புகார் செய்யாமலே புழுங்கிக்கொண்டிருக்கும் பெண்கள் புகுந்த வீட்டில்தான் இருக்கிறார்கள் என்றில்லை; பிறந்த வீடுகளிலும் கூட அவர்கள் கொடுமைகளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

உதாரணம், சோமநாதன்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பம். சோமநாதனுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மனைவியுடனும், பிள்ளைகளுடனும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்துக் கொண்டிருக்கிறார். 

காலையில் எழுந்தவுடனேயே குளித்துவிடும் நல்ல பழக்கம் அந்தக் குடும்பத்தில் அத்தனை பேருக்குமே இருந்தது. குளித்து மேல் சட்டை அணியாமல், நெற்றியிலும், மார்பிலும் திருநீற்றுப் பட்டையிட்டு, நெற்றியில் திருநீற்றுப் பட்டையின் நடுவில் குங்குமத் திலகமிட்டு சோமநாதன்  சூரிய நமஸ்காரம் செய்வதைப் பார்க்காதவர்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இல்லை என்றே சொல்லலாம். 

அதே போன்று சோமநாதனின் மனைவி கனகம் அன்றாடம் குளித்து முடித்து, பூஜை செய்து விட்டு, ஒரு தட்டில் சிறிதளவு அரிசியும், வெல்லமும் கொண்டுவந்து ஓர் ஓரமாய்க் கொட்டி விட்டுச் செல்வார். பலருக்கு அவர் செயல் விநோதமாகத் தெரிந்தாலும், ஒருசிலரிடம் மட்டுமே அவர் விளக்கம் சொல்லியிருக்கிறார். ஜீவராசிகளுக்கு உணவளிப்பது ஒரு வகை தர்மம். அரிசியையும் வெல்லத்தையும் எறும்புகள் சாப்பிடுவதால் தன் குடும்ப வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்பது அவரது நம்பிக்கை.

தந்தை சோமநாதனைப் போன்றே அவரின் மகன் விஸ்வநாதன் தன் நெற்றியில் சிறு கீறல் மட்டும் திருநீறால் இட்டிருப்பார். விஸ்வநாதனின் மூத்த சகோதரி பூங்கொடி முதிர் கன்னி. தன் நெற்றி முழுக்க மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி என கலர் கலராக கோடுகளை இட்டிருப்பார். அத்தனை கோடுகளுக்கும் கீழாக சிறிதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்திருப்பார். டிகிரி முடித்த கையோடு படிப்பை நிறுத்திவிட்ட அவருக்கு  வீட்டு வேலைகளே பிரதானமாகி இருந்தது.

இளைய சகோதரி கஸ்தூரி கல்லூரி மாணவி. நடுவில் பிறந்த மகன் விஸ்வநாதன் பல ஆண்டுகளாக பி.ஏ. பைனல் செமஸ்டரை எழுதிக் கொண்டிருந்தான். இந்த மூவரும் ஒரு நாளேனும் நல்ல உடையணிந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்களிலும்கூட அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைப் பார்த்தால் யாரும் புதிது என்றே சொல்ல மாட்டார்கள். வெளுத்துப் போனது போன்ற தோற்றமுடைய வெளிர் நிறங்கள்; அவை பழைய ஆடை போன்றே தோற்றமளிக்கும். 

உடை மட்டுமல்லாது, உணவு விஷயத்திலும் கூட பெற்றவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்று யாருமே நினைத்துப் பார்க்கமுடியாது. காலை உணவு காபி மட்டுமே. பிறகு பகல் ஒரு மணிக்கு சாப்பாடு. அந்த சாப்பாடும் அப்பா எது சொல்கிறாரோ அதைத்தான் சமைக்க வேண்டும். பிறகு மாலை நான்கு மணிக்கு ஒரு காபி. இரவுக்கு, மதியம் சமைத்த உணவை சூடு பண்ணிச் சாப்பிடவேண்டும். உணவு விஷயத்தில் இது அந்தக் குடும்பத்திற்கு சோமநாதன் விதித்த எழுதப்படாத கட்டுப்பாடு. ஆனால், சோமநாதனைப் பொருத்தவரை காலையில் அவருக்கு ஹோட்டலில் டிபன். மதியம் மட்டும் வீட்டு உணவு. மறுபடி மாலையில் வடை அல்லது பஜ்ஜி கடையில் சாப்பிட்டு விடுவார். 

வீட்டில் யாரும் டி.வி. பார்க்கக்கூடாது. முதல் மாடியில் குடியிருக்கும் அவர்கள் துணி காய வைப்பதற்கு மட்டும்தான் கீழே இறங்கி வரவேண்டும். அதுவும் இருவராக வந்து உலர்த்த வேண்டும்; தனியே கீழே வரக்கூடாது. ஏன்? ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்துகூட வெளியில் வேடிக்கை பார்த்துவிடக்கூடாது. மீறி நடந்தால், உடனே, மொத்த குடியிருப்பும் அதிரும்படிக்கு அச்சிடமுடியாக் கெட்ட வார்த்தைகளால், மகளென்றும் மனைவியென்றும் பாராமல், விலைமாதுவிற்கு உண்டான வெவ்வேறு பெயர்களால் உச்சஸ்தாயியில் ஒவ்வொரு நாளும், அர்ச்சனை செய்வார்.

அபூர்வமாக என்றாவது ஒருநாள் சோமநாதன் ஊருக்குச் செல்கிறார் என்றால், பிள்ளைகளுக்குப் படு குஷியாகிவிடும். ஹோட்டலில் இருந்து சைவம்; அசைவம் என வகை வகையாக வாங்கி வந்து ஒரு பிடி பிடிப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும், அதன் சுவடே தெரியாமல் சுத்தம் பண்ணி வாடை வராமல் இருக்கும்படி செய்துவிடுவார்கள்.

அதையும் மீறி, சோமநாதன் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டால் அனைவருக்கும் அடி... உதைதான்... இப்படி உணவு, உடை என்றில்லாமல், உணர்வுகளையும், அவர்கள் உள்ளத்தையும் கூட ஒவ்வொரு நொடியும் கொன்று கொண்டிருந்தார் சோமநாதன். சிலசமயம், மனைவியையும் பிள்ளைகளையும் காரணமே இல்லாமல் அடித்து உதைப்பது... என்று எப்போதும் அந்த வீட்டில் யாராவது ஒருவருடைய ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கும். 

இத்தனையும் கண்ணுற்ற பெண் ஒருத்தி ஒருநாள் இதுகுறித்து சோமநாதனின் மனைவியிடம் கேட்டபோது, "நான் என்னம்மா செய்யறது. இங்கே பாருங்க...' என்று தன் கழுத்திலிருந்த மஞ்சள் நிறக் கயிற்றை எடுத்துக் காண்பித்தார். அதில் பேருக்குத் தாலி மட்டுமே எஞ்சியிருந்தது. தங்கத்தால் கோர்த்திருந்த குண்டுகளையெல்லாம் ஒவ்வொன்றாக விற்று விற்று, கிடைத்த பணத்தை பத்திரமாக வைத்திருந்து, துணி உலர்த்த வரும் இருவரில் ஒருவர் பக்கத்திலுள்ள கடைக்குப் போய் தின்பண்டங்களை வாங்கி வந்து, துணி எடுத்து வந்த பக்கெட்டில் மறைத்து எடுத்துச் சென்று கணவர் வெளியில் செல்கையில் பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதாய்ச் சொன்னார். 

தன்னை மீட்டெடுக்க ஒரு ராஜகுமாரன் வரமாட்டானா என்று காத்திருந்த பூங்கொடியின் கூக்குரலும், சோமநாதனின் அருவருக்கத்தக்க வார்த்தைகளும், அக்கம்பக்கத்தினருக்கு தொல்லை தருவதோடல்லாமல் அங்கிருந்த குழந்தைகள் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு விடுவார்கள் எனப் பதறும் அளவிற்கு பலவருடங்களாகத் தொடர்ந்ததால் சோமநாதனை வீட்டைக் காலி செய்யும்படி வற்புறுத்தினார் வீட்டின் சொந்தக்காரர்.

சோமநாதன் இந்த அளவிற்குக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடக் காரணம், அவரின் சந்தேக புத்தி. முந்நூறு சதுர அடியில் சிறிய ரெடிமேட் கடை வைத்து நல்லபடியாக இருந்த அவரை, அவரின் உடன் பிறந்தோர் ஏமாற்றியதால் எல்லாவற்றையும் இழந்து கையில் இருந்த பணத்தைக் கொண்டு வட்டித் தொழில் செய்து வரும் அவர் மனைவியையும், பிள்ளைகளையும் கூட நம்பிவிடத் தயாராக இல்லாததோடு, எங்கே ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தினால் ஆரம்பித்த சச்சரவு பின்னாளில் சோமநாதனின் இயல்பாகவே மாறிப்போயிருந்தது.

இத்தனை சித்ரவதைகளையும் அனுபவித்த கனகம் ஒருநாள்கூட காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்று சொன்னதில்லை. ஏன்? அதற்கு அவர் சொன்ன காரணம்:  "போலீஸ் ஸ்டேஷன் போனாலும்... போயிட்டுத் திரும்பவும் நாங்க இங்கேதானே வரணும். எங்களுக்குச் சோறுபோட யாரும் இல்லம்மா. தராதரமின்றி கொடுமைகளை அனுபவிச்சாலும், ரெண்டு வேளை சோறு கிடைக்குதே. வயிற்றுப் பாட்டுக்காகத்தான் இவ்வளவையும் அனுபவிக்கிறோம்' என்றார். தரத்தோடு வாழ பொருளாதாரம் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. எனினும் அதுவே முதன்மையான காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. அதுபற்றி அடுத்த இதழில்..!
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com