வாரத்தில் ஐந்து நாட்கள் தாய்ப்பால் தானம்! சொல்கிறார் சரண்யா

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைவிட சிறந்த உணவு உலகில் வேறெதுவும் இல்லை. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்த தாய்மார்கள்
வாரத்தில் ஐந்து நாட்கள் தாய்ப்பால் தானம்! சொல்கிறார் சரண்யா

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைவிட சிறந்த உணவு உலகில் வேறெதுவும் இல்லை. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்த தாய்மார்கள் சிலர், பிறர் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகிறார்கள். தாய்ப்பால் தானம் செய்து வருபவர்களில் ஒருவர்தான் சரண்யா. சென்னையைச் சேர்ந்த சரண்யா இந்த தாய்ப்பால் தானத்தை ஏன், எப்படி தொடங்கினார் என்பதை விளக்குகிறார்:

"இந்தியாவில் தினந்தோறும் சுமார் ஐம்பதாயிரம் சிசுக்கள் பிறக்கின்றன. அதே சமயம் தாய்ப்பால் சேமிப்பு வங்கிகள் இந்தியாவில் மொத்தம் பதினான்கு மட்டுமே உள்ளன. பல தாய்மார்களுக்கும் தாய்ப்பால் வங்கி உள்ளதே தெரியாது. பசியைப் போக்குவதுடன், நோய்களை எதிர்க்கும் சக்தியைத் தரும் புரதச் சத்து நிறைந்த தாய்ப்பால் நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அவசியம். நான் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டு மாத காலமாக தாய்ப்பாலை தானம் செய்து வருகிறேன். முதல் குழந்தை பெற்றபோது தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. இரண்டாவதாக கருவுற்றபோது முகநூலில் குழந்தை வளர்ப்பு தொடர்பான குழுவில் சேர்ந்தபோதுதான் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம்வரை தாய்ப்பால் மட்டும்தான் உணவாகத் தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

அப்போதுதான், முதல் குழந்தைக்கு முதல் ஆறு மாதம் சரியாக தாய்ப் பால் தரவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டாவது குழந்தைக்கு முதல் ஆறுமாதம் தாய்ப்பால் மட்டும் கொடுப்பது என்ற உறுதியுடன் செயல்பட்டேன். தாய்ப்பால் கிடைக்காமல் அவதிப்படும் குழந்தைகளை பற்றியும் தெரிந்து கொண்டேன். என்னாலான பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன்.

எனது கணவர் கோவிந்தராஜூலு தொடர்ந்து ரத்ததானம் செய்து வருபவர். என்னையும் ரத்ததானம் செய்ய ஊக்குவித்தார். ஆனால் எனக்கு ஊசி என்றால் பயம். ரத்தத்தை என்னிடமிருந்து எடுக்க ஊசியை தமனியில் செலுத்துவார்களே... அதற்குப் பயந்து கொண்டு ரத்ததானம் செய்யவில்லை. ஆனால் தாய்ப்பால் தானம் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆரோக்கியமற்ற நோயுற்ற குழந்தைகளுக்கு எனது தாய்ப்பால் உணவாக அமைவதில் எனக்கு திருப்திதான். தானம் செய்கிற தாய்ப்பால் வீணாக்கப்படக்கூடாது. அதை உரிய விதத்தில் சேமித்து தாய்ப்பால் கிடைக்காத சிசுக்களுக்கு ஊட்டப்பட வேண்டும். இந்த முறை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பாக செயல்படுவதால் அங்கேயே தாய்ப்பால் தானம் செய்ய முடிவு செய்தேன். வாரத்தில் ஐந்து நாட்கள் தாய்ப்பால் தானம் செய்கிறேன்'' என்றார்.
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com