என் சுதந்திரம் என் வாழ்க்கை! - "ஸ்லம்டாக் மில்லியனர்' ரூபினா அலி

"ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்தில் சிறுவயது லத்திகாவாக நடித்து ஆஸ்கர் விருது பெற்ற பத்து வயது சிறுமி ரூபினா அலியை நினைவிருக்கிறதா? மும்பை பாந்த்ராவில் உள்ள
என் சுதந்திரம் என் வாழ்க்கை! - "ஸ்லம்டாக் மில்லியனர்' ரூபினா அலி

"ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்தில் சிறுவயது லத்திகாவாக நடித்து ஆஸ்கர் விருது பெற்ற பத்து வயது சிறுமி ரூபினா அலியை நினைவிருக்கிறதா? மும்பை பாந்த்ராவில் உள்ள கரீப் நகர் குடிசை பகுதியில் முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் தேர்வு செய்தபோது கிடைத்தவர்தான் ருபினா அலி, இப்போது அவர் எப்படி இருக்கிறார்?...

"ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற ரூபினா, பாந்த்ராவை விட்டு முதன் முதலாக வெளியேறி லாஸ் ஏஞ்சல்ஸ், பாரிஸ், ஹாங்காங் போன்ற நகரங்களை சுற்றி பார்த்த அனுபவத்தை புத்தகமாக எழுத, 14 மொழிகளில் வெளியான அந்த புத்தகத்தால் அவரது புகழ் மேலும் உயர்ந்தது. இருப்பினும் அவரது தந்தை ரபீக் மற்றும் மாற்றாந்தாய் முன்னியுடன் தொடர்ந்து கரீப் நகர் குடிசை பகுதியிலேயே வசித்து வந்தார் ரூபினா. 2011-ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் வசித்துவந்த குடிசை எரிந்து சாம்பாலானதோடு, புத்தக பிரதிகள், ஆஸ்கர் விருது அனைத்தும் தீக்கிரையாயிற்று.

மேலும் திரைப்பட வாய்ப்புகள் வருமென எதிர்பார்த்த நிலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக அவரது தந்தை ரபீக், தன்னை விற்க முயற்சி செய்வதை அறிந்த ரூபினா அவரிடமிருந்து விலகி தன் சொந்த தாய் குர்ஷித்துடன் தங்கினார். அங்கும் அவரால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை.

கல்வி கற்க வேண்டும், சுதந்திரமாக வாழ வேண்டுமென்று விரும்பிய ரூபினாவுக்கு, டானிபாயல் நடத்திவந்த "ஜெய்ஹோ' அறக்கட்டளை உதவ முன் வந்தது. நடிப்பை விட கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்த ரூபினா, பள்ளியில் சேர்ந்தார். இருந்தும் மனதுக்குள் நடிப்பு ஆசை இருந்தது. டானி பாயல் எடுக்கும் படத்தில் தனக்கொரு வாய்ப்பளிக்கும்படி கேட்டபோது, "எப்போது வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம். முதலில் படித்து முடி' என்று அறிவுறுத்தினாராம்.

ரூபினா மீது அவளது பெற்றோர்களை விட அதிக பாசமும், அன்பும் செலுத்திய டானி பாயல், அவளது குடும்பத்தினருக்காக பிளாட் ஒன்றை வாங்கி ரூபினா பெயரில் பதிவு செய்து கொடுத்தார். ஆனால் ரூபினாவின் தந்தையும், மாற்றாந்தாயும் அதை ஆக்ரமித்து கொள்ள ரூபினா, மீண்டும் "ஜெய் ஹோ' அறக்கட்டளை தயவில் தங்க வேண்டியதாயிற்று இதையறிந்த டானிபாயல் ரூபினாவிடம் கூறினாராம். " உன்னுடைய குடும்ப பிரச்னையை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே. வாழ்க்கையில் எதையும் எதிர்மறையாக நினைக்க வேண்டாம். உறுதியான முடிவை எடு. அப்போதுதான் உன்னால் முன்னேற முடியும்.

சிறுவயதில் பார்த்த அதே புன்சிரிப்புடன் இன்று வனப்புடன் கல்லூரி மாணவியாக விளங்கும் ரூபினாவுக்கு 18 வயதாகிறது. இன்னும் சில மாதங்களில் இவருக்கு ஆதரவளித்து வந்த அறக்கட்டளை கலைக்கப்படவுள்ளதால், இவரது பெயரில் உள்ள பணம் கைக்கு கிடைத்துவிடும். இனி இவர் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். இதுகுறித்து ரூபினா என்ன சொல்கிறார்?

என்னுடைய பத்தாவது வயதில் "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்த காரணத்தால் நான் பிரபலமானேன். ஆஸ்கர் விருது பெற்றவுடன் எல்லாரும் என்னைக் கொண்டாடினர். எங்கு சென்றாலும் ரூபினா, ரூபினா என்ற அழைத்தார்கள். துரதிருஷ்டமாக நாங்கள் வசித்து வந்த குடிசைப் பகுதி தீப்பற்றி எரிந்தபோது எழுதிய புத்தகம், பெற்ற விருது அனைத்தையும் இழந்தேன். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி கூட இப்போது என்னிடம் இல்லை கிடைத்தாலும் வாசிக்கக் கூடிய நிலையில் நான் இல்லை.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக இடம் மாறியதால் பலருக்கு என்னைத் தெரியாது. ஒரு சிலர் அடையாளம் கண்டு பேசும்போது, அதில் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கை முறைக்கு இஸ்லாம் மதம் துணையாக இருக்கிறது. தினமும் ஐந்து வேளை தொழுகை செய்கிறேன். ஒருவேளை மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சினிமாவுக்காக தொழுகையையோ, தொழுகைக்காக சினிமாவையோ விட முடியாது. அவரவர் விருப்பப்படி வாழ உரிமை இருப்பதாகவே கருதுகிறேன். இரண்டையும் சமாளிக்கும் திறமை என்னிடம் உள்ளது.

சிறுவயதில் கிடைக்காத சுதந்திரம் தற்போது எனக்கு கிடைத்திருப்பதாக கருதுகிறேன். இப்படித்தான் வாழ வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டுமென்று யாரும் என்னை அறிவுறுத்த முடியாது. கடந்த காலங்களில் மக்களைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். நான் நேர்மையானவளாக இருப்பதால் எப்படி பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியும். இன்னும் என் குடும்பத்தைப் பற்றிய சிந்தனை சிறிதளவாவது மனதில் இருக்கிறது. மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது எனக்குள் ஏற்படும் மகிழ்ச்சி வேதனையை மறக்கடிக்கிறது. என் குடும்பத்துடன் சேர்ந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால் என்னால் எதையும் செய்ய முடியாது. அதற்காக என்னுடைய வாழ்க்கையை நான் மாற்றிக் கொள்ளவும் முடியாது. என்னுடைய சுதந்திரம்தான் என் வாழ்க்கை'' என்கிறார் ரூபினா.
- பூர்ணிமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com