எவரெஸ்டில் ஒரு திருமணம்!

வீட்டில், கோயிலில், சர்ச்சில், கல்யாண மண்டபத்தில் நடந்து வந்த திருமணங்கள் இப்போது ஆகாசத்தில் அந்தரத்தில்,
எவரெஸ்டில் ஒரு திருமணம்!

வீட்டில், கோயிலில், சர்ச்சில், கல்யாண மண்டபத்தில் நடந்து வந்த திருமணங்கள் இப்போது ஆகாசத்தில் அந்தரத்தில், கடலுக்கடியில் நடக்கின்றன. மாறுதலுக்காக இமயமலையின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் அடியில் திருமணம் நடக்க ஆரம்பித்துவிட்டது.

கேரளத்தைச் சேர்ந்த அஸ்வதி-ரத்தீஷ் திருமணம் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் மடியில் நடந்திருக்கிறது. அஸ்வதி கொச்சியைச் சேர்ந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதற்காக மங்களூரு சென்றவர், பிஎச்டி செய்ய தேர்ந்தெடுத்தது திண்டுக்கல் பக்கத்தில் உள்ள காந்திகிராமம் பல்கலைக் கழகம். இனி அஸ்வதி தொடர்கிறார்:

"மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் காந்திகிராமத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருந்த போது தோழியுடன் சிறுமலை ஒன்றில் மலையேற்றம் செய்தேன். அப்போது என் தோழிக்குத் தெரிந்த ரத்தீஷும் உடன் வந்திருந்தார். அவர் துபாயில் வேலை பார்ப்பவர்.

மலை ஏறும் போது நானும் ரத்தீஷும் பேசிப் பழகினோம். அவர் கிளிமாஞ்சாரோ மலையில் ஏறியிருப்பதாகக் கூறினார். நான் அசந்து போனேன். பல விஷயங்களில் எங்களுக்கிடையில் ஒற்றுமை இருப்பதை இனம் கண்டு கொண்டோம். அடுத்தநாள் பக்கத்தில் இருக்கும் குட்லாடம்பட்டி அருவி காண சென்றோம். அங்கும் ரத்தீஷ் வந்திருந்தார். அங்கே, "என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா?''என்று கேட்டார். நானும் சம்மதம் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால், "திருமணம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் நடக்க வேண்டும்'' என்றார். எனக்கு மலை ஏற்றம் பிடிக்கும். எவரெஸ்ட் சிகரம் வரை மலை ஏற வேண்டுமென்று விருப்பமும் சிறுவயது முதல் உண்டு. சாதனைக்காக எவரெஸ்ட் சிகரம் ஏறலாம். ஆனால், திருமணத்தை எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமா? திருமணம் என்பது சொந்தபந்தங்கள் முன்னிலையில் அவர்கள் ஆசியுடன் நடக்க வேண்டாமா... நான் குழம்பிப் போனேன். வீட்டில் சம்மதிப்பார்களா? என்ற சந்தேகம் வேறு. வீட்டில் சம்மதித்தால் திருமணம் பற்றி யோசிப்போம் என்ற திருத்தத்தையும் என் தரப்பிலிருந்து முன் வைத்தேன்.

அதைத்தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக போராடி, அவர் வீட்டிலும், எனது வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கியது ரத்தீஷ்தான். ஆனால் சொந்தபந்தங்களை எவரெஸ்ட்டிற்கு அழைத்து போக முடியாதே. எனக்கு நெருங்கிய தோழிகள் மூன்று பேர் துணைக்கு உடன் வருவதாகச் சொன்னார்கள். தோழிகள் உடன் வருவதால் எனக்கு மனதில் நிம்மதி, தைரியம் உண்டானது. எவரெஸ்ட் அடிவாரம்வரை கடுங்குளிரில் ஏற வேண்டுமே. மலை ஏறும்போது மூச்சிரைக்கும். தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால் பிராணாயாமம் மற்றும் உடல் பயிற்சி செய்து என்னைத் தயார் படுத்திக் கொண்டேன். தோழிகளும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டார்கள்.

மே மாதம் ஐந்தாம் நாள் நேபாளத்தை நான், ரத்தீஷ், மூன்று தோழிகள் சென்றடைந்தோம். பத்துநாள் சிரமமான மலை ஏற்றம். எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் கால் பதித்தோம். எவரஸ்ட் சிகரத்தின் அடிவாரம் வந்து செல்வதற்கு ஒரு நபருக்கு தலா ஒரு லட்சம் வரை செலவாகியது. மலை ஏறும் போது பயன்படுத்த வேண்டிய உடைகள் காலணிக்கு விடை கொடுத்து விட்டு, மே 15 மதியம் மூன்று நாற்பதிற்கு, கேரளா சம்பிரதாய முறைப்படி நான் கசவு சேலை அணிந்தேன். ரத்தீஷ் வேஷ்டி ஜிப்பாவுக்கு மாறினார். மலை ஏற வழிகாட்டியாய் வந்தவர் ரிப்பன் மாலையைத் தர நாங்கள் பரஸ்பரம் அணிவித்து எவரெஸ்ட் சிகரம் சாட்சியாக கணவன் மனைவி ஆனோம்.

ஊர் திரும்பியதும் எங்கள் இருவருக்கும் வரவேற்பு நடைபெற்றது. பயணத் திட்டங்கள் அநேகம் எங்களிடம் இருக்கிறது. அதில் முதலாவதாக இருப்பது மச்சு பிச்சு (Machu Picchu). ஜோடியாக மலையேறி மச்சு பிச்சுவைப் பார்க்க வேண்டும். மச்சு பிச்சு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் பெரு நாட்டின் மலையின் உச்சியில் அமைந்திருக்கும்.

தற்போது, இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம்... போவது குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் மலையளவு மலையேறும் ஆசையுள்ள அஸ்வதி.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com