பயம், தயக்கம் எதுவும் இல்லை!

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் மீது செயற்கைப் பலகையின் மீது பயணித்து சறுக்கி விளையாடுவதுதான் "சர்ஃபிங்' எனப்படும் விளையாட்டு.
பயம், தயக்கம் எதுவும் இல்லை!

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் மீது செயற்கைப் பலகையின் மீது பயணித்து சறுக்கி விளையாடுவதுதான் "சர்ஃபிங்' எனப்படும் விளையாட்டு. இந்தியாவின் முதல் சர்ஃபிங் சாம்பியன் தன்வி ஜெகதீஷ், மங்களூரைச் சேர்ந்தவர். சிறுமியாக இருக்கும் போது கடலைக் காண பீச்சுக்கு சென்ற தன்வி சர்ஃபிங் செய்பவர்களைக் கண்டு தானும் அப்படி செய்யவேண்டும் என்று விரும்பினார். அப்பா ஜெகதீஷ் அனுமதி தரவில்லை. காரணம் தன்வி ஆஸ்துமாவால் அவதிப்படுவதுதான். இன்னொன்று தன்விக்கு நீச்சல் தெரியாது. கடலில் மூழ்கி அசம்பாவிதம் ஏதும் நடந்தால்..? கடலில் சர்ஃபிங் பயிற்சியில்
ஈடுபட்டால், கடல் நீரில் நனைந்து ஆஸ்துமா இன்னும் அதிகமாகி பாடுபடுத்தினால் என்னாகும் என்ற பயம்தான் சதீஷை அப்படி மறுக்கச் சொன்னது. தன்வியின் விருப்பத்தை அறிந்த தாத்தா மகனிடம் பேசி அனுமதி வாங்கிக் கொடுத்தார்.

பிறகு நடந்தது என்ன? தன்வியே சொல்கிறார்:
"அப்பா அனுமதி தந்த பிறகு எனக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம். முதலில் நீச்சலைக் கற்றேன். அப்போது எனக்கு பத்து வயசு. சர்ஃபிங் பயிற்சிகள் தொடங்கிய ஓரிரு வாரங்களில் மருந்தால் குணமாகாத ஆஸ்துமா குணமானது கண்டு எனக்கும், பெற்றோருக்கும் மகிழ்ச்சி. கடல் எனது விளையாட்டுத் திடலானது. கடல் அன்னையின் மடியில் வழுக்கி சறுக்கி சர்ஃபிங் கற்றேன். கடலில் பயிற்சியின் போது வீழ்ந்து மூழ்கிய போதிலும் எனக்கு பயம், தயக்கம் எதுவும் வரவில்லை.

பன்னிரண்டாம் வயதில் ஸ்டேண்ட் அப் பேடல் சர்ஃபிங் எனக்கு அறிமுகமானது. இது அலைச்சறுக்கு செய்வது மாதிரிதான். ஆனால் இந்த பிரிவில் கையில் துடுப்பு வைத்திருக்க வேண்டும். கடல் அலைகள், கடல் நீரோட்டத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு துடுப்பைத் துளாவி முன்னேற வேண்டும்.

பேடல் சர்ஃபிங் விளையாட்டின் ரிஷி மூலம் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது. ஹவாய் நாட்டவர்கள் மரத்துண்டுகளை கடலில் வீசி லாகவமாக அலையில் ஏறி இறங்கி விளையாடினார்கள். அது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியுள்ளது. பேடல் சர்ஃபிங் விளையாட்டிற்காகவே ‘Standup Journal’ என்ற பத்திரிகையும் வெளியாகிறது.

எனக்கு பதினேழு வயதாகிறது. ஸ்டேண்ட் அப்பேடல் சர்ஃபிங் பிரிவில் தேசிய சாம்பியன் நான்தான். இந்தப் பிரிவில் சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் பெருமையும் எனக்குக் கிடைத்துள்ளது.

சர்ஃபிங் இந்தியாவைப் பொறுத்த மட்டில் புதிய விளையாட்டு. இந்தியக் கடலின் மிதமான வெப்பமுள்ள கடல் பரப்பு இந்த விளையாட்டிற்கு பொருத்தமாக உள்ளது. நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகங்கள் இந்த விளையாட்டிற்குப் பொருத்தமானவை. ஏரியில் நடக்கும் படகுப் போட்டி கடலுக்குள் மூழ்கி கடலின் அடியில் இருக்கும் பவளப் பாறைகள், அலங்கார மீன்கள், சுறா, திமிங்கலங்களை அருகில் பார்ப்பது போன்று சர்ஃபிங்கும் நீர் சார்ந்த போட்டிகளில் இந்தியாவில் பிரபலமாகி வரும் போட்டியாகும். ஸ்டேண்ட் அப் பேடல் சர்ஃபிங் எந்த நீர்நிலையிலும், வயது வித்தியாசமின்றி எல்லாராலும் ஈடுபடக் கூடிய ஒரு விளையாட்டு. இதில் கடக்கக் கூடிய தூரம் ஒரு கி.மீ.லிருந்து பதினெட்டு கி.மீ. வரை நீளும். கடலில், அலை, நீரோட்டம், காற்று, வெயில் இவற்றைச் சமாளித்து நீர் சறுக்கு செய்ய வேண்டும்.

ஃபிஜி தீவில் நடந்த போட்டியில், இருபத்தாறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அங்கே பதினெட்டு கி.மீ. சக்தி வாய்ந்த நீரோட்டத்தில் ஸ்டேண்ட் அப் பேடல் சர்ஃபிங் செய்ய வேண்டும். சக போட்டியாளர்கள் இயந்திர மனுஷிகளைப் போல கொஞ்சம் கூட தளர்ந்துபோகாமல் கடல் நீரைத் துழாவினார்கள். படு பலசாலிகள். அவர்களுடன் போட்டி போட்ட போதுதான் நாம் இன்னும் கற்பதற்கு, தெரிந்து கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன். டென்மார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் உலகப் "பேடல் போர்ட்' போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறேன். அதற்காக கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்'' என்கிறார் கடலின் மகளான தன்வி.
-மலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com