சுத்தம் சுகம் தரும்- தூய்மைக்காக ஒரு பாடல்!

சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும்.  குப்பைகூளம் இருக்கக் கூடாது. சுத்தம் இல்லை என்றால் நோய் வரும்.
சுத்தம் சுகம் தரும்- தூய்மைக்காக ஒரு பாடல்!

சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும்.  குப்பைகூளம் இருக்கக் கூடாது. சுத்தம் இல்லை என்றால் நோய் வரும். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஒரு பிரசார இயக்கமே பிரதமரிடமிருந்து தோன்றிய பின், அந்தக் குரல் சற்று ஓங்கி 
ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஞாயிறன்று சி.பி. ராமசாமி அய்யர் சுற்றுச் சூழல் மையத்தில், அதன் தலைவர் நந்திதா கிருஷ்ணா பங்கு கொண்ட ஒரு நிகழ்ச்சியில், சுஜாதா விஜயராகவன் எழுதிய "சுத்தம் சுகம் தரும், சுத்தம் நலம் தரும், சுத்தம் வளம் தரும்' என்ற ஹம்சத்வனி ராகப் பாடலைப் பள்ளிக் குழந்தைகள் பாடிப் பதிவு செய்த ஒலித் தகட்டைப் பார்வையாளர்கள் பிரமிப்புடன் பார்த்து ரசித்தார்கள்.   முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் "இது எல்லா ஊர்களிலும் எல்லா பள்ளிகளிலும் வரவேற்க வேண்டிய படைப்பு' என்றார்.  எக்ஸ்னோரா எம்.பி. நிர்மல் இதில் தாம் ஆரம்ப முதலே பங்கெடுத்துக் கொண்டு வந்திருப்பதைக் குறிப்பிட்டார்.  தமக்குக் கிடைத்த சொத்தான இடத்தை, சாக்கடையும் கழிவு நீரும் ஓடும் பகுதியை,எப்படி மாற்றி அமைத்தார் என்பதைச் சுருக்கமாகச் சொன்னார்.  அரங்கில் ஐம்பது சதவிகிதம் பேர் பள்ளி மாணவர்கள்-மாணவிகள்.

பாடல் தமிழில் மட்டுமல்ல.  கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று ஐந்து மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த மொழி வல்லுநர்கள் அந்தத் தமிழ்ப்பாட்டை மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.  அவர்கள் எல்லாரும் ஏதோ சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்று நினைத்தால் தவறு.  எல்லாரும் நடனக் கலைஞர்கள். தனஞ்சயன் - சாந்தா தனஞ்சயன் மலையாளத்தில் மொழிபெயர்க்க, தெலுங்கில் வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரியும், கன்னடத்தில் நடனக் கலைஞர் ஸ்ரீதரும், ஹிந்தியில் நடனக் கலைஞர் சி.வி. சந்திரசேகரன் புதல்வி நடனமணி சித்ரா தாசரதியும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.  சமஸ்கிருதத்தில் மட்டும் பேராசிரியர் எல். சம்பத்குமார்.

அகமும் புறமும் வாய்மை காப்போம், உள்ளும் வெளியும் தூய்மை காப்போம் என்ற அனுபல்லவி வரிகள் மட்டுமல்ல, எங்கள் வீடு, எங்கள் வீதி, எங்கள் நாடு, எங்கள் பூமி, எங்கும் தூய்மை, எங்கும் பசுமை, எங்கும் காண்போம், என்றும் காண்போம் என்ற சரண வரிகளும் பாடுகிற குழந்தைகளின் உற்சாகக் குரலில் ஓங்கி ஒலித்தது.  படமாக்கப்பட்ட விதம், வெறும் பாட்டு மட்டும் பாடிக் கொண்டிராமல், பின்னணியாகக் குப்பைகளை அகற்றுவது, கழிவுகளை ஒழிப்பது, சுவர்களைச் சுத்தமாக்குவது, சாலையைக் குப்பை      கூளமின்றி மாற்றுவது என்று மாணவர்களும், பெரியவர்களும் உழைப்பது செய்திக்கு வலு சேர்க்கிறது.  "ஸ்வச் பாரத்' வேறு ஒன்றுமில்லை.  குப்பை இல்லாமல் தெருவை வைத்துக் கொள்வதுதான் என்பதை வெகு சுருக்கமாக ஒரு பாடலின் மூலம் தெரிவித்திருக்கிறார் பாடலாசியர் சுஜாதா விஜயராகவன். மெட்டமைத்தவரும் அவரே நல்ல விஷயங்களுக்கெல்லாம் தம் உதவியை அளிக்கும் எடிட்டர் லெனின், இதை எடிட் செய்திருக்கிறார் என்பது கூடுதல் பெருமை.

"பாட்டை எழுதி, மெட்டமைத்தால் போதாது.  பாட வைக்க வேண்டும்.  சுதா ராஜா இதற்கு உதவினார்'' என்கிறார் சுஜாதா விஜயராகவன்.  வீட்டைச் சுற்றி சுத்தமாக இருந்தால் வீதி சுத்தமாக இருக்கும் என்ற அடிப்படைக் கருத்தை வெகு எளிமையான வரிகளில் சொல்லியிருக்கிறார். வானொலியிலும், பொதிகையிலும் கேட்க வேண்டிய பாடல் இது.
- சித்தார்த்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com