20 நிமிடங்களுக்கு ஒரு ட்விஸ்ட்! 

தொட்டுத் தொடரும் பாரம்பரியமாய் தமிழ் சினிமாவுக்கு வரும் அடுத்த பேய் படம் "1 ஏஎம்'! இன்னுமொரு ஆவியும் ஆவி சார்ந்த படமுமாக,
20 நிமிடங்களுக்கு ஒரு ட்விஸ்ட்! 

தொட்டுத் தொடரும் பாரம்பரியமாய் தமிழ் சினிமாவுக்கு வரும் அடுத்த பேய் படம் "1 ஏஎம்'! இன்னுமொரு ஆவியும் ஆவி சார்ந்த படமுமாக, இருட்டு அறையில் முரட்டுத்தனமாக ரசிகர்களை அலற வைக்க காத்திருக்கிறது... "கிரிங் கிரிங்', "ஜித்தன் 2' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் ஏற்கெனவே அறிமுகமான ராகுல் இப்படத்தின் இயக்குநர். 
எப்போதாவது பேய் கதைகள் என்றால் சரி... எப்போதுமே பேய் கதை என்றால் எப்படி...?
ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு சினிமா டிரென்ட். வரலாற்றுக் கதைகள், காதல்,  சென்டிமென்ட், கல்லூரி பின்னணி, நட்பு, நகைச்சுவை என இந்த டிரென்ட் கடந்து வந்த தூரம் அதிகம். இப்போது நாம் இருப்பது அமானுஷ்யம் மற்றும் பேய் பின்னணி சினிமா காலம். என்னுடைய முந்தைய இரண்டு சினிமாக்களும் இதே பின்னணிதான். அந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எனக்கு பலம் கொடுத்தது. அதனால் அதே பின்னணியில் மீண்டும் ஒரு கதை எழுதினேன். பேய்தான் பின்னணி களம் என்றாலும், திரைக்கதையில் இருக்கும் சுவாரஸ்யங்கள் இதை பேய் கதையாக மட்டுமே அணுகாது. ஏனென்றால் இந்தக் கதைக்கு நேட்டிவிட்டி கிடையாது. உலகத்தில் யார் பார்த்தாலும் புரியும். மொழி தேவை இல்லை. இதில் நான் வைக்கிற பிரச்னை, நாடு முழுவதும் இருக்கிற பிரச்னை. இதை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான், இது மாதிரியான தளத்தில் சொல்ல வருகிறேன். பேய் என்றால் யார்? என்பதை புரிய வைப்பதற்காகவே இந்தக் கதை. நம்மைச் சுற்றி இருக்கிற பிரச்னைகள் எல்லாமே பேய்களுக்கு சமம்தான். எதையும் உற்று நோக்கினால் இது புரியும். பின்னணி இசை, கிராபிக்ஸ் உருவங்கள் என தொழில்நுட்பங்களாலேயே மிரட்டி கதை சொல்லுவது என்பதுதான் பேய் படங்களுக்கான ஃபார்முலா. இதில் அப்படி இருக்காது. இயல்பான திரைக்கதை, அதன் ஓட்டத்தில் சந்திக்கும் சம்பவங்கள்தான் முக்கியமானதாக இருக்கும். பேய் என்பது பயமுறுத்துவதற்காக அல்ல, அது பாதுகாப்புக்காக என்பது மாதிரியும் கதை போகும். இதுவரை வந்த பேய் படங்களில் இது வித்தியாசமான மேக்கிங் கொண்டிருக்கும்.
மேக்கிங் வித்தியாசம் ஓ.கே... கதை எப்படி வித்தியாசப்படும்...?
ஒரு வீட்டுக்குள் நடக்கும் பிரச்னைகள், சம்பவங்கள். ஃபேன்டஸி த்ரில்லர்... இதுவெல்லாம் பொதுவான பேய் படத்துக்கான இலக்கணம். இதுவும் அது மாதிரிதான். ஆனால், நடக்கும் சம்பவங்களை வித்தியாசப்படுத்தி கதை சொல்லியிருக்கிறேன். இப்போது காமெடி படங்கள் என்றால், தியேட்டரில் பக்கத்தில் இருக்கிறவர்கள் சிரிக்கும் போதே நமக்கும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொள்ளும். 
ஆனால், திகில் படத்தில் அந்த மாதிரி கடந்து போக முடியாது. அதுதான் த்ரில்லர் படம் செய்வதில் இருக்கிற சவால். எல்லா சம்பவங்களுக்கும் பின்னாடி காரண காரியம் இருக்கும். அதைப் பற்றி நாம் பேசியிருக்க மாட்டோம். இந்தப் படத்தில் அப்படியான காரணங்களைப் பற்றி துணிச்சலாக பேசியிருக்கிறோம். 
ஒரு பேய் படத்துக்கான கதையை எளிதில் தீர்மானித்து எழுதி விடலாம், இல்லையா...?
அப்படி கிடையாது. அதிலும் சிரமம் இருக்கிறது. சிரிப்பது, அழுவது, பயப்படுவது என ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடக்கும்? என்று ரசிகர்கள் பல்ஸ் பார்த்துதான் காட்சிகளை உருவாக்கி இருக்கிறேன். இப்போது சினிமாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் நிமிர்ந்து அமர்கிற மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டாலே போதும். வேறு எதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். இந்தக் கதையின் உள்ளே ஒரு உண்மை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு சம்பவம்தான் கதை. அதை அறிந்து, தெரிந்து, விசாரித்துதான் இந்தக் கதையை எழுதினேன். பேய், அமானுஷ்யம், த்ரில்லர் என்பதெல்லாம் சினிமாவுக்கான சமரசங்கள். அவ்வளவுதான். 
நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என மற்ற அம்சங்களும் ஒரு படத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது...?
துடிப்பும், ஆர்வமும் கொண்ட விஸ்காம் மாணவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களில் மோகன் என்ற சென்னை மாணவரை கதாநாயகனாகத் தேர்வு செய்தேன். அதே போல் சஸ்வத என்ற பெண். நடிக்கத் தெரிந்தவர். சவ்ரவ், பிரதீப் என மற்ற வேடங்களுக்குமான நடிகர்களும் மாணவர்கள்தான். இசைக்கு கார்த்திக். அருண் ஒளிப்பதிவாளர். எடிட்டிங்  சிவதர்ம என எல்லோருமே பளீச் அடையாளத்துக்கு காத்திருக்கும் கலைஞர்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்ததில் மகிழ்ச்சி. 
 - ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com