நகைச்சுவை எழுத்தாளரான டிவிங்கிள் கன்னா 

ராஜேஷ் கன்னா - டிம்பிள் கபாடியாவின் மூத்தமகள், நடிகை, அக்ஷய்குமாரின் மனைவி என்ற அடையாளங்களுடன்  பத்திரிகைகளில் நையாண்டிப் பகுதியை எழுதுபவர் என்ற பெருமையும்
நகைச்சுவை எழுத்தாளரான டிவிங்கிள் கன்னா 

ராஜேஷ் கன்னா - டிம்பிள் கபாடியாவின் மூத்தமகள், நடிகை, அக்ஷய்குமாரின் மனைவி என்ற அடையாளங்களுடன்  பத்திரிகைகளில் நையாண்டிப் பகுதியை எழுதுபவர் என்ற பெருமையும்  டிவிங்கிள் கன்னாவுக்கு உண்டு. இவரது நையாண்டிப் பகுதியை படிப்பதற்கென்றே பெரிய வாசகர் வட்டம் இருப்பதை அறிந்த பெங்குவின் பதிப்பகம் இவர் எழுதி வெளியானவைகளைத் தொகுத்து "மிஸஸ் ஃபன்னி போன்ஸ்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு புத்தகங்கள்  எழுதவும் வாய்ப்பளித்துள்ளனர்.
நடிப்புலகைவிட்டு விலகியவுடன் எழுத்தாளரானது எப்படி?
அக்ஷய் குமாரை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பதை நிறுத்திவிட்டேன். நாங்கள் வசித்துவரும் பாலிஹில் பகுதியில் குடியிருப்பவர்களுக்கும், அன்றாடம் தெருவில் வரும் வியாபாரிகளுக்கும் இடையே நடக்கும் விவாதம் சுவாரசியமாகவும், பொழுது போக்காகவும் இருப்பதை கவனித்தேன். என்னுடைய 12 வயது மகன் ஆரவ், 3 வயது மகள் நிதாராவுக்கு கதை சொல்லும்போது உபதேசமாக இல்லாமல் இதுபோன்ற கேரக்டர்களை வைத்தே கதை சொன்னால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. கதை கேட்கும் குழந்தைகளுக்கு இது சுவாரசியமாக இருக்குமென கருதினேன். இதையே பத்திரிகைகளுக்கு நையாண்டி பகுதியாக எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைக்கவே நான் சந்திக்கும், பார்க்கும் நபர்களின் கேரக்டர்களை கவனிக்க தொடங்கினேன். அவர்களையே பாத்திரங்களாக உருவகப்படுத்தி எழுத ஆரம்பித்தேன். வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து நகைச்சுவையாக  எழுதியதை பலரும் ரசித்தனர். என்னுடைய நையாண்டி பகுதியில் இடம் பெறுபவர்கள் அனைவருமே உயிருள்ள பாத்திரங்கள். அவர்கள் அடையாளம் மட்டுமே மறைக்கப்படும். எழுதுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அளிப்பேன். ஒவ்வொரு நபரின் வித்தியாசமான குணங்களை கவனிப்பதுதான் முக்கியம்.
பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லையென்றாலும், நான்கு மாதங்களுக்குக்கொருமுறை சென்று அடுத்து எழுத தேவையான நபர்களை தேர்ந்தெடுப்பேன். இதுபோன்ற விருந்துகளில் என்னிடமும், என் அம்மா டிம்பிள் கபாடியாவிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்த ஒரு பாலிவுட் குடும்பம் என் எதிரில் பேசுவதை தவிர்க்க தொடங்கியது.
அந்த குடும்பம் என் வாழ்க்கையில்  ஒரு அங்கமாகவும், எழுதுவதற்கு தூண்டுகோலாகவும் இருந்தது.  இந்தியர்கள் வாழ்க்கை என்பது பொருளாதார பின்னணியில் வேறுபட்டிருந்தாலும், அவர்களின் கலாசார பின்னணி மாறவே இல்லை. தையல் தொழிலாளி கூட தன் மகன் கையில் நம்பிக்கைக்காக கறுப்பு கயிற்றை கட்டத் தவறுவதில்லை. பாலிவுட்டிலும் பழைய சம்பிராதாயங்கள் மாறவே இல்லை. இதுவே இந்தியன் என்பதற்கு அடையாளமாகும்.
இந்த கதாபாத்திரங்களில் உங்கள் தாயார் டிம்பிள் கபாடியாவும் உண்டா?
 நிச்சயமாக. எப்போது பார்த்தாலும் வீட்டை அலங்கரிப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவழிப்பது என் அம்மாதான். சிறுவயதில் எனக்கு படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியவரே அவர்தான். அவர் ஒரு விசித்திரமான பெண்மணி. எப்படி பார்த்தாலும் அவர் ஒரு அபாரமான பெண். மும்பையில் நான் "ஒயிட்விண்டோ' என்ற பெயரில் வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை கடையை நடத்தியபோது, அவர் வியாபார நுணுக்கத்தில் என்னைவிட திறமைசாலி என்பதை உணர்ந்தேன். என்னையும் என் சகோதரியையும் யாருடைய துணையுமின்றி எப்படி வளர்த்தார் என்பது எங்களுக்குத்தான் தெரியும். எதுவாக இருந்தாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அதனால்தான் வசதிமிக்க வாழ்க்கை வாழ வேண்டும். அவருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக 13ஆவது வயதிலேயே நடிக்க வந்தேன். ஆனால் 16 வயதில்தான் என் முதல் திரைப்படம் "பர்ஸாத்' வெளியாயிற்று. 
வாழ்நாள் முழுவதும் திரையுலகம்தான் என் வாழ்க்கை என்று நான் நினைத்ததே இல்லை. பல வாய்ப்புகளுக்கு நான் மறுப்பு தெரிவிக்காததால்தான் நான் இன்னும் இங்கே 
இருக்கிறேன். ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் என பத்தாண்டுகள் பலருடன் நடித்த பின்னரே, 2001- ஆம் ஆண்டு, அக்ஷய் குமாரை திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகைவிட்டு விலகினேன். என்னுடைய நடிப்பை பற்றி அக்ஷய் அவ்வப்போது கேலி செய்வார். உண்மையில் நான் திறமையான நடிகை அல்ல. நான் யார் என்பது எனக்கு தெரியும். நான் உண்மையானவள். முறையாக பொய் சொல்லக் கூட எனக்கு தெரியாது. இப்படிப்பட்டவளிடமிருந்து நடிப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? திரையுலகிலிருந்து விலகியது குறித்து நான் வருத்தப்பட்டதும் இல்லை.
உங்களுடைய படைப்புகளை அக்ஷய் படிப்பதுண்டா?
படித்து விமர்சிப்பதுண்டு. அவர் ஊரில் இல்லாதபோது கூட, எழுதியதை போனில் படித்துக்காட்டி கருத்து கேட்பதுண்டு. அவர் அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல. அவரைப் போல் எதையும் திட்டமிட்டு செய்ய எனக்குத் தெரியாது. நான் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவள். அவர் ஜென் துறவியைப் போல் அமைதியானவர். நான் அமைதிக்காக யோகா செய்யும்போது அதைப்பார்த்து அவர் சிரிப்பதுண்டு. ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதிலும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.
உங்களுடைய நையாண்டிப் பகுதி புத்தகமாக வருமென எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லை. என்னுடைய படைப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டுமென்று பெங்குவின் பதிப்பகத்தார் கேட்டபோது, இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து  காதல் கதை ஒன்றை எழுத விரும்பினேன். பப்ளிஷர் அதை ஏற்கவில்லை. உன்னுடைய 75ஆவது வயதில் அதை எழுதலாம். முதலில் ஏற்கெனவே எழுதி வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்ற நையாண்டிப் பகுதியை புத்தகமாக வெளியிடுகிறோம் என்றார். 
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com