நியாயம் இருந்தால் நல்ல இடம் உண்டு! 

வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி! இரண்டே வரிகளில் சொல்லிச் சிரிக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலபரணி.
நியாயம் இருந்தால் நல்ல இடம் உண்டு! 

வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி! இரண்டே வரிகளில் சொல்லிச் சிரிக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலபரணி. "கோரிப்பாளையம்', "மாயாண்டி குடும்பத்தார்', "வன்மம்' என வெவ்வேறு தளம் கொண்ட படங்களுக்கு ஏற்ப வித்தை வியூகம் வகுத்தவர்...

இன்னும் சரியான ஒரு திருப்பு முனைக்கு காத்திருப்பது போல் தெரிகிறது...?

இந்தக் கேள்வியை நான் அடிக்கடி எதிர்கொள்கிறேன். நமது நம்பிக்கை நியாயமாக இருந்தால், நமக்கு ஓர் இடம் நிச்சயமாக உண்டு என்று நினைப்பேன். என் கண் முன்னால், என் நண்பர்கள் நல்ல வேலையில் சேர்ந்தார்கள். வீடு கட்டினார்கள். என் வீட்டுக்கும் வந்து போனார்கள். அவரவர்களுக்கென்று ஓர் இலக்கு இருந்தது. என் இலக்கு  சினிமாதான். அதனால் இதை விட்டு எங்கேயும் போக விருப்பமில்லை. சாப்பாடு இல்லாமல், தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு வாய்ப்புக்காக அலைந்த காலங்கள் உண்டு. இப்போது அந்த மாதிரியான கடினம் இல்லை. சினிமாவுக்கு தயார்படுத்திக் கொள்ள நேர்த்திதான் வேண்டும். அதில் குறை இருந்தால், உங்களை யாரும் உயரத்துக்குக் கொண்டு போய் வைக்க முடியாது. காத்திருந்தால், நியாயமாக இருந்தால், அதற்கான தகுதியை நீங்கள் பெற்றிருந்தால், உங்களுக்கான இடம் எந்த வகையிலும் நிச்சயம். பாருங்க... இந்தப் படம் என்னைப் பெரிய கேமிராமேனாக இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போகிறது என்ற நம்பிக்கை வைத்த படம் "ஃப்ளாப்.' இதற்கு நான் என்ன செய்ய முடியும்? வெற்றிதான் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும். அப்படி ஒரு வெற்றி வேண்டும் என்கிற நிலை எனக்கும் உருவாகியிருக்கிறது. கேமிராவைத் தாண்டி நல்ல நல்ல சினிமாவுக்குள் அழைத்துப் போகிற ஒரு மனுஷன்தான் இப்போது என் தேவை. 

நிறைய இளைஞர்கள் முதல் சினிமாவிலேயே சாதிக்கிறார்கள்... ஒரு சீனியராக அவர்களோடு போட்டி போட உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக் கொள்கிறீர்கள்...?

ஆமாம்! என்னுடைய உதவியாளர்களே நம்மை விட திறமைசாலிகளாக இருக்கிறார்களே... பசி, வலி, வறுமை என கடந்து வந்து பல வருடங்களாக சினிமா கற்றுக் கொண்டதை, இன்றைக்கு இரண்டே படத்தில் கற்றுக் கொள்கிறார்கள் பசங்க. அவர்களோடு போட்டி போட வேண்டும் என்றால், நிச்சயமாக அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என ஏதோ ஒரு வகையில் நானும் ஓடிக் கொண்டே இருப்பேன்.

உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு எது...?

"மாயாண்டி குடும்பத்தார்' படத்துக்காக நிறைய பேர் பேசினார்கள். பார்த்திபன், பாலாஜி சக்திவேல் என நான் விரும்பும் படைப்பாளிகள் பாராட்டியது மறக்கவே முடியாது. நம் வாழ்க்கையை நம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பார்த்தது போல் இருந்தது என சேரன் சார் சொல்லியிருந்தார். அந்த நிமிடம் முக்கியமானது. 

ஒளிப்பதிவாளர் கனவோடு வரும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...?

புது பசங்க எல்லாம் தெரிந்தவர்கள். நான் சொல்லி அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. கடின உழைப்பும், நேர்மையும்தான் சினிமாவில் ஜெயிக்க முக்கியம். ஒளிப்பதிவாளர் இல்லாமல் சினிமா மேக்கிங் இல்லை என்பதை எல்லோரும் புரிந்து  கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com