பயம் - பதட்டம் இருந்தால்...எஸ். வந்தனா பதிலளிக்கிறார் 

முதலில் உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் உங்கள் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள்
பயம் - பதட்டம் இருந்தால்...எஸ். வந்தனா பதிலளிக்கிறார் 

மன நலம் காப்போம்-9

எங்களின் பெற்றோர் விபத்தில் இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. தற்போது, நானும் என் தங்கையும் என் பெரியப்பா வீட்டில் தங்கி இருக்கிறோம். எங்களுக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. இவர்களைப் பார்த்தால் கோபம், எரிச்சல், வெறுப்பு வருகிறது. நான் என்ன செய்வது; எங்கே செல்வது என்று தெரியவில்லை?
- வாசகர், விழுப்புரம்.
முதலில் உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் உங்கள் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடினமானத் தருணம். இத் தருணத்தில் இருந்து நீங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குச் சிலகாலம் ஆகும். அதுவரை உங்கள் பெரியப்பா வீட்டில் இருப்பது உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவ்வப்போது உங்களுக்கும், உங்கள் தங்கைக்கும் உங்கள் பெரியப்பா குடும்பத்தினர்தான் ஆதரவாக இருந்து வந்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் இருவரும் உங்கள் கவனத்தை படிப்பிலோ அல்லது வேலையிலோ செலுத்த வேண்டும். அடுத்து, அவர்கள் மீது உங்களுக்கு எதனால் கோபம், எரிச்சல் வருகிறது என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அறிந்து அவற்றைச் சரி செய்ய வேண்டும். நீங்கள் காரணமற்ற கோபத்துடன் அவர்களைப் பார்க்கும் போது அவர்கள் என்ன சொன்னாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உங்கள் வாழ்க்கையைப் பற்றியும், தங்கையின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் நன்கு யோசித்து, பெரியவர்களின் ஆலோசனையுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

என்னுடைய பெண் குழந்தைக்கு வயது 10 ஆகிறது. இப்போதும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நிற்கவில்லை. இதற்கு நான் என்ன செய்வது, இது மனநோயாக இருக்க வாய்ப்புள்ளதா?
- ஈஸ்வரி சேகரன், திண்டுக்கல்.
பொதுவாக, குழந்தைகள் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறன் பெறுவதற்கு 3 வயது முதல் 4 வயது வரை ஆகும். இந்த வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நீடித்தால் இது ஒரு பிரச்னை. படுக்கையில் சிறுநீர் கழிப்பதில் இரண்டு வகை உள்ளது. முதலாவது, தொடர்ந்து படுக்கையில் சிறுநீர் கட்டுப்பாடின்றி கழிப்பது. இரண்டாவது, 3 அல்லது 4 வயதில் சிறுநீர் கட்டுப்பாடு அடைந்து, திடீரென்று மீண்டும் ஏதோ ஒரு பிரச்னையில் மறுபடியும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது.  இதில் உங்கள் குழந்தை எந்த வகை? முதல் வகையாக இருந்தால் நீங்கள் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகி சிறுநீர் கட்டுப்பாட்டில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். இரண்டாவது வகையாக இருந்தால், இது முழுக்க முழுக்க மனநலப் பிரச்னையால் வரும் ஓர் அறிகுறி. இந்த மாதிரியான குழந்தைகளுக்கு இரவில் 7 மணி முதல் 8 மணிக்கு மேல் பால், தண்ணீர் கொடுக்கக் கூடாது. அடுத்து, இரவு நேரத்தில் எப்பொழுது சிறுநீர் கழிப்பார்கள் என்பதை அறிந்து, அதற்குச் சற்றுமுன் அவர்களை எழுப்பி சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுக்கும் பழக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். அடுத்ததாக, அவர்களுக்குப் பள்ளியிலோ, வீட்டிலோ ஏதேனும் பயம், பதட்டம் இருந்தால் அவற்றைக் கவனித்து, அதுபற்றிக் குழந்தைகளிடம் அக்கறையுடன் மென்மையாகப் பேசும் போது அவர்களுடைய பயம், பதட்டம் குறையும். இவை குறையும்போது நாளடைவில் அவர்களுக்கு இந்த பழக்கமும் குறைய வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எப்படி அறிவது? அவ்வாறு ஒருவர் மனநோயால் பாதிக்கப்படும்போது நாம் என்ன செய்வது? 
- வாசகி, காஞ்சிபுரம்.
மனநோயில் நிறைய வகைகள் உள்ளன. இதில் முதல் இரண்டு வகைகளில் ஒன்று, சிறிய மனநோய்; மற்றொன்று, பெரிய மனநோய். சிறிய மனநோய் உள்ளவர்களுக்கு அவர்களின் பிரச்னைகள், அவர்களின் மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியும் (உதாரணம்: மனச் சோர்வு, பதட்டம் போன்றவை). 
பெரிய மனநோயில் உள்ளவர்களுக்கு அதன் பிரச்னையையும், தீவிரத் தன்மையையும் புரிந்து கொள்ளமுடியாது (உதாரணம்: அதிகமாக கோபப்படுதல், விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு விளைவித்தல், காதில் ஏதேனும் குரல் கேட்பதுபோல் உணர்தல், மற்றவர்கள் எனக்கு சதி செய்கின்றனர் என்று அடிக்கடி புகார் செய்தல், போன்றவை). இது ஒருவகையான மனச் சிதைவு நோய் (SCHIZOPHRENIA). இந்த நிலையில் இருப்பவர்களுக்குப் புரிதல் இருக்காது. நீங்கள் முதலில் அவர்களின் நடவடிக்கைகளில் என்ன என்ன வேறுபாடு இருக்கிறது, எவ்வளவு நாளாக இவ்வாறு இருக்கிறது, இதனால், அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன பாதிப்பு உள்ளது என்பதை அறிய வேண்டும். 
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஏற்கெனவே இது போன்ற மனநலப் பிரச்னைகள் ஏதாவது இருந்ததா என்பதையும் அறிய வேண்டும். ஏனென்றால், இந்த நோய், மரபு வழியாகவும், சுற்றுச் சூழல் காரணமாகவும், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் மூலமாகவும், குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பினாலும்கூட வரலாம். பொதுவாக, நம் ஊரில் உள்ளவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்லும் முன்பு கோவில், பரிகாரம், சடங்கு போன்றவற்றை முடித்த பிறகுதான் மருத்துவரிடம் செல்கின்றனர். 
இவ்வாறு செய்வதற்கு முன்பு மனநல மருத்துவரை  அல்லது மனநல ஆலோசகரை அணுக வேண்டும். ஏனென்றால், சிறிய மனநோய் உள்ளபோது அழைத்துச் சென்றால் உடனடியாக அவர்களை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்!
(அடுத்த இதழில் முடியும்)
- ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com