ரஹ்மானும் வைரமுத்துவும் பொறுமையாக இருந்து விட்டார்கள்!

"காற்று வெளியிடை' படத்தின் இசை வெளியீட்டு விழா என்றுதான் அறிவித்தது அழைப்பிதழ். ஆனால், மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் 25 ஆண்டு திரைப் பயணத்தைத்
ரஹ்மானும் வைரமுத்துவும் பொறுமையாக இருந்து விட்டார்கள்!

"காற்று வெளியிடை' படத்தின் இசை வெளியீட்டு விழா என்றுதான் அறிவித்தது அழைப்பிதழ். ஆனால், மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் 25 ஆண்டு திரைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் நெகிழ்த்தி விட்டது நிகழ்ச்சிகள். 

மணிரத்னத்தை முதன் முதலில் சந்தித்தது, அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது உள்ளிட்ட சம்பவங்களை பகிர்ந்து கொண்ட கார்த்தி, ""காற்று வெளியிடை' எனக்கு கனவுப் படம் என்று சொன்னால், அது பொய். இவ்வளவு நல்ல கனவுகள் எனக்கு வந்ததே இல்லை. மணி சார் படத்தில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல், மணி சாரைச் சந்தித்து, "உங்க கிட்ட வேலைப் பார்க்கணும்' என்று சொன்னேன். அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை "ஙர்ள்ற் ரங்ப்ஸ்ரீர்ம்ங்'. நான் நடிக்க வந்ததற்கு மணி சாரும் ஒரு காரணம். எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் மணி சார் படம்  ஒரு டிரெண்ட்.  நான் இப்போதும் எப்போதுமே மணி சாரோட அசிஸ்டென்ட் டைரக்டர்தான்'' என்று சிரித்தார். 

மதன் கார்க்கியின் பேச்சு முழுவதுமே கவிதை. "மணி சார் - ரஹ்மான் சார் இந்த கூட்டணிக்கானப் பாடலை என்னுடைய தந்தை எப்படியெல்லாம் எழுதியிருப்பார் என்பதும், இந்த 25 ஆண்டுகளின்  கலைப் பயணமும் அசாத்தியமானது. சமூக நிகழ்வுகளில் தொடங்கி காதல் வரைக்கும் பாடல்களில் கவிதையாக மீட்டியிருப்பதை இன்னும் 25 ஆண்டுகள் பேசினால்தான் தீரும். ஆனால் அதை நான் பேசப் போவதில்லை. தந்தையின் பாடல்களின் மூலமாகவே பேசவேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் பாடலைக் கோர்த்து, இதை அவர்களுக்கே மாலையாக அணிவிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன் என்றவர், "சேற்று வயலாடி நாற்று நட ஆசை...', "தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்...',  "குங்குமம் ஏன் சூடினேன் கோல முத்தத்தில் கலையத்தான்...' என "ரோஜா' வில் தொடங்கி, "காற்று வெளியிடை' வரைக்கும் மதன்கார்க்கிக்குப் பிடித்த 25 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதிலிருக்கும் பாடல் வரிகளைக் கவிதை மாலையாக்கினார். 

"ஆயுத எழுத்து' நடிக்கும் போது, அதே படத்துல கார்த்தி உதவி இயக்குநராக வேலை பார்த்தார். ஷுட்டிங் நேரத்தில் கூட்டத்தை விலக்கி விட்டுக் கொண்டே இருப்பார்.   இப்போது மணி சார் படத்தின் ஹீரோ. கார்த்திக்கு இது மிகப்பெரிய சாதனைதான்.  புதுசு புதுசா நிறைய விஷயங்கள்.. இவ்வளவு எனர்ஜியை எங்க இருந்து எடுத்துட்டு வர்றீங்க... அந்த சீக்ரெட் சொல்லுங்க?'' என்ற சூர்யாவின் கேள்வியை, அதே மெல்லிய புன்னகையில் கடந்தார் மணிரத்னம். 

மணிரத்னத்தின் அறிமுகமான அதிதிராவ் மைக் பிடித்த போது, அரங்கம் எங்கும் அவ்வளவு கைதட்டல், ""சின்ன வயசுக் கனவு, மணி சார் இப்போது நிஜமாக்கியிருக்கிறார். நன்றி சார்...'' என ஃபீல் ஹேப்பியானார். 

"மணி சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த 25 ஆண்டு காலப் பயணத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.'' என இந்த முறையும் இரண்டு வரிகளில் முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 

இறுதியாக பேச வந்த மணிரத்னம், ""இந்த 25 ஆண்டு காலப்  பயணம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. அப்போது இருந்த அதே சிரிப்பைத்தான் இப்போதும் ரஹ்மானிடம் பார்க்கிறேன். ஆனால் இப்போது ரஹ்மான் ரொம்ப பெரிய இடத்துக்குச் சென்று விட்டார். ரொம்ப சந்தோஷமான விஷயம். 

என்னுடைய ஒவ்வொரு படத்துக்குமே, அவருடைய முதல் படம் மாதிரி ஸ்பெஷலாக, புதிதாகத்தான் இசை கொடுப்பார். அடுத்த நாள் ஷூட்டிங் இருக்கும். முந்தைய நாள் பாட்டு ட்யூன் கேட்கலாம் என்று போவோம். ஆனால், படத்துக்கான தீம் மியூசிக் முடித்து வைத்திருப்பார். நாளைக்கு ஷூட்டிங் இருக்கே என்று அவரிடம் கோபம் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவர் போட்டு வைத்திருக்கிற தீம் மியூசிக்கை கேட்டு விட்டால், மற்றதெல்லாம் மறந்து போய்விடும்.

இசையைத் தேடிப் பிடித்துக் கொடுப்பார் ரஹ்மான். இவரும் வைரமுத்து சாரும் இந்த 25 ஆண்டுகளாக பொறுமையாக என் கூட இருந்து விட்டார்கள்.  இன்னும் சில ஆண்டுகள் மட்டும் என் இம்சையைப் பொறுத்துக் கொண்டால் போதும், அடுத்த படத்துக்கும் கம்போசிங் எப்போது என்று இப்போதே சொல்லி விடுங்கள் ரஹ்மான்...'' கேட்டுக்கொண்டே தன் அக்மார்க் புன்னகையை உதிர்த்தார் மணிரத்னம். நல்ல பயணங்கள் தொடரட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com