புதிய ஸ்டைல் பல வண்ணங்கள் அரசுப் பள்ளி நவீனமாயிற்று! சொல்கிறார் : அன்னபூர்ணா

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாவது வகுப்பின் ஆசிரியை அன்னபூர்ணா.
புதிய ஸ்டைல் பல வண்ணங்கள் அரசுப் பள்ளி நவீனமாயிற்று! சொல்கிறார் : அன்னபூர்ணா

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாவது வகுப்பின் ஆசிரியை அன்னபூர்ணா. தினமும் திண்டிவனத்திலிருந்து முப்பது கி.மீ. பயணிக்கும் சாதாரண ஆசிரியை. ஆனால், செய்தி சானல்களில், சமூக தளங்களில்,செய்தி ஊடகங்களில் அன்னபூர்ணா பிரபலம்.

இந்தப் புகழ் பிரசித்தி கிடைக்க அன்னபூர்ணாவுக்கு விருது ஏதும் கிடைக்கவில்லை. அவர் செய்த ஒரு செயல்பாடு அவரை அகில இந்திய அளவில் பேசவைத்துவிட்டது. அவர் செய்தது இதுதான். தனது சொந்தப்பணத்தில் தன் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக நாற்காலி, மேசைகள்.. தொடுதிரை
(Smart Board) மடிக்கணினி, ஆங்கில அறிவை வளர்க்கும் நூல்கள், சார்ட்டுகள் என்று சுமார் இரண்டு லட்சத்திற்கு, மூன்றாம் வகுப்பு அறையை ஹைடெக் அறையாக மாற்றியதோடு, பிரிட்டிஷ் உச்சரிப்பில் தன் வகுப்பு மாணவ மாணவிகளை சரளமாக உரையாடச் செய்திருப்பது அன்ன பூர்ணாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

அன்னபூர்ணா பேசுகிறார்:
"எனக்கு சொந்த ஊர் திண்டிவனம். அப்பா மோகன் எம்.பி.பி.எஸ் டாக்டர். ஆரம்ப காலத்தில் கட்டணம் ஏதும் வாங்காமல் இலவசமாக சிகிச்சை செய்து வந்தார். பிறகு நண்பர்கள் உறவினர்கள் பல முறை வற்புறுத்தி இரண்டு ரூபாய் கட்டணம் வாங்க ஆரம்பித்தார். அதனால் எங்கள் குடும்பம், ஒரு டாக்டருக்குண்டான பொருளாதார வசதிகளுடன் இல்லாமல் ஒரு சாதாரண வாழ்க்கையாகவே அமைந்துவிட்டது. அம்மா அனுராதா, வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். நான் அவர்களுக்கு ஒரே வாரிசு. அப்பா டாக்டர் என்பதால் என்னையும் டாக்டராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் டாக்டராவது கனவாகவே அமைந்து விட்டது. அதனால், ஆசிரியர் பணியும் சமூக சேவைதான்... நாளைய தலைமுறையை திறம்பட உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்குள்ளது.. அதனால் "நீ ஆசிரியராகலாம்..'' என்று என்னை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டார் அப்பா.

ஆசிரியர் பயிற்சி முடித்த அடுத்த ஆண்டில், 2004 -இல் வேலை கிடைத்தது. கந்தாடு தொடக்கப் பள்ளியில் வேலை. கந்தாடு கிராமம் என்பதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரும் தோற்றத்தில் அப்படித்தான் இருந்தார்கள். எனக்கு அழுகை அழுகையாக வரும். எனக்கு ஆசிரியப் பணியில் தொடர கொஞ்சமும் விருப்பம் இல்லை. வீட்டில் பெற்றோர் ஆறுதல் வார்த்தைகள் சொல்வார்கள். ஆனாலும், மனசு கேட்கவில்லை. வேறு வேலை தேடுவதற்காக எனது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளத் தீர்மானித்து, தொலைதூர கல்வி மூலம் ஆங்கிலம், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். எம்பிஏ பட்டமும் வாங்கினேன். பொருத்தமான வேலை கிடைக்கும் வரை இந்த ஆசிரிய வேலையில் தொடர்வது என்று முடிவு செய்தேன்.

சில ஆண்டுகளில் என்னுள் ஒரு ரசாயன மாற்றம் தானே ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். அந்தக் கிராமத்துப் பிள்ளைகள் மீது அனுதாபம் பிறந்தது. ஏழைக் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள், உடையில் தோற்றத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். போதிய வாழ்வாதாரம் இல்லாததால்தானே அரசு தொடக்கப் பள்ளிக்கு வருகிறார்கள். அரசுப் பள்ளியில் ஆங்கில அறிவு மாணவ மாணவியருக்கு குறைவுதான். ஆங்கிலம் என்றால் பயம். அப்படியே மனப்பாடம் செய்தாலும் அதை விடைத்தாளில் எழுதுவது பெரிய சிரமமாக அமைந்திருந்தது. பிளஸ் டூ முடித்து விட்டு பொறியியல். மருத்துவம் என்று போகும்போது போதிய ஆங்கில அறிவு இல்லாததனால் கிராமப்புற மாணவ,மாணவியர் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதனாலேயே அரசுப் பள்ளியென்றாலே பலருக்கும் இளக்காரம். அதனால்தான் போதிய வருமானம் இல்லாமல் இருந்தால் கூட பலரும், தனியார் பள்ளிக்குத் தங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறார்கள்.

நாம் இந்தக் குழந்தைகளுக்கு நல்ல ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தால் என்ன? என்று சிந்தித்தேன். அதிர்ஷ்டவசமாக கந்தாடு பள்ளி இங்கிலிஷ் மீடியம் பள்ளியாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வகுப்பில் ஆங்கிலத்தில் வகுப்பு எடுக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் மட்டும் உரையாட ஆரம்பித்தேன். தொடக்கத்தில் திரு திருவென்று விழித்த குழந்தைகள் சில மாதங்களில் நான் பாடம் நடத்துவதைப் புரிந்து கொண்டு. அவர்களும் ஆங்கிலத்தில் தப்புத் தப்பாக பேச ஆரம்பித்தார்கள். நாளடைவில் சரளமாகப் பேச ஆரம்பித்தார்கள். இந்த மாற்றம் எனக்கு ஆர்வத்தைத் தந்தது. தொடர்ந்து இந்தப் பிள்ளைகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

பிரிட்டிஷ்காரர்கள் பேசும் ஆங்கில மொழி ரீதியைத்தான் நாம் இங்கே கடைப்பிடிக்கிறோம். ஒரு மொழி சரியாகப் பேசப்பட வேண்டும் என்றால் அந்த மொழியின் சொற்களின் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். சரியாய் பேசப்பட வேண்டும். அதற்கு போஃனடிக்ஸ் என்னும் ஒலியியல் முறையில் சரியாக உச்சரிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கிறேன். தமிழக பள்ளி கல்வித் துறை போஃனடிக்ஸ் முறைப்படி கற்றுக் கொடுக்க வழிகாட்டுதல்களையும், ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளது. இதன் விளைவாக, ஆங்கில சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்காக குறுந்தகடுகள் பலவற்றை கல்வி அலுவலர்கள், விஷயம் தெரிந்தவர்களுடன் இணைந்து உருவாக்கி மாணவர்களுக்குப் பயிற்சி தரத் தொடங்கினேன். பாடங்களை நாடக வடிவில் மாற்றி, ஆங்கில வசனங்கள் உரையாடல்கள் மூலமாக மாணவ மாணவிகளையும் பங்கேற்கச் செய்கிறேன். இதனால் பாடத்தில் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்படுகிறது. உரையாடல்களில் பங்கேற்பதால் ஆங்கிலம் பேசவும் உச்சரிப்பும் சரியாக வந்துவிடுகிறது.

அடுத்த கட்டத்திற்கு சென்றேன். பெரிய நகரங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளில் கொஞ்சமாவது என் வகுப்பு மாணவர்களுக்கு செய்து தர வேண்டும் என்று தீர்மானித்தேன். என்னிடம் அத்தனை பண வசதி இல்லை. அப்பாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தவறியிருந்தார். நகையை அடகு வைத்து இரண்டு லட்சம் புரட்டினேன். பள்ளியில் தரையில்தான் மாணவர்கள் அமர வேண்டும். கிளாஸிற்கு வர வேண்டும் என்ற தூண்டுதலைத் தருமாறு வகுப்பறையை வடிவமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அவர்களுக்காக இப்போதைய ஸ்டைலில் பல வண்ணங்களில் நாற்காலி மேசைகள் வாங்கினேன். அதற்கு முன் வகுப்பறையை வண்ணம் பூசி சார்ட்டுகள் புதிதாக வாங்கி புதிய கவர்ச்சியான தோற்றத்தை அளித்தேன். தொடுதிரை (Smart Board) வாங்கி மாட்டினேன். திரையீட்டுக் கருவி, லேப்டாப் ஒன்றினையும் வாங்கினேன். எனது பள்ளியின் ஸ்மார்ட் கிளாஸ் ரெடி.

எனது மாணவ மாணவியர் ஆங்கிலம் பேசுவதை எனது முகநூலில் பதிவேற்றம் செய்தேன். நல்ல வரவேற்பு. வெளிநாடுகளிருந்தும் பாராட்டுகள், மாணவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகளை அனுப்பி வைத்தார்கள். தொடக்கத்தில் வெறுத்த இந்தப் பணியில் இப்போது ஆத்ம திருப்தி கிடைத்திருக்கிறது. நாமும் சமூகத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்தானே?'' என்கிறார்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com