பிரச்னைகளைத் தீர்ப்பதே பணி!

சமீபத்தில் தென்னக ரயில்வேயின் புதிய முதன்மை கமர்ஷியல் மேலாளர் (chief commercial manager) என்ற பொறுப்பை ஏற்றுள்ளார் ப்ரியம்வதா விஸ்வநாதன்
பிரச்னைகளைத் தீர்ப்பதே பணி!

சமீபத்தில் தென்னக ரயில்வேயின் புதிய முதன்மை கமர்ஷியல் மேலாளர் (chief commercial manager) என்ற பொறுப்பை ஏற்றுள்ளார் ப்ரியம்வதா விஸ்வநாதன். இதே பிரிவில் 1990-ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த இவர், அதே பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பிரிவின் தலைமை பொறுப்பேற்றது குறித்து தனது அனுபவங்களை கூறுகிறார் ப்ரியம்வதா விஸ்வநாதன்:

"இந்தப் பிரிவே மக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை செய்வதற்காகத்தான் உருவானது. இதே பிரிவில் நான் 1990 -ஆம் ஆண்டில் உதவி கமர்ஷியல் மேலாளராக பதவி வகிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை எந்த ஒருநாளும் மக்களை சந்திக்காத நாளே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை.

என்னை பொருத்தவரை மக்களின் கஷ்டங்கள் தீர்க்கப் பட வேண்டும். அவர்கள் திட்டினால் கூட நான் கோபப் படமாட்டேன். காரணம், அவர்களின் நிலையில் நாம் இருந்து பார்க்கவேண்டும். அவர்களின் கோபத்தை நான் நியாயம், அநியாயம் என்று பிரித்துப் பார்க்கும் நிலையில் இல்லை. 29 வருடங்களாகப் பிரச்னைகளைச் சந்தித்து, சந்தித்து, என் மகள் ஒரு நாள் ஒரு விஷயத்தை என்னிடம் கூற, நான் சரி அதற்கு என்ன செய்தாய்? என்று கேட்க, "அம்மா நான் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்கிறேன். நீ ஏதோ சாதாரணமாக அடுத்து என்ன? என்று கேட்கிறாய்'' என்றார். உண்மை. என்னிடம் சொல்லும் பிரச்னையை விட, அதை தீர்ப்பதற்கான நடவடிக்கை என்ன என்பதைத்தான் இந்த இருக்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

உதாரணமாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது மூன்று நாளும் சரியான நேரத்திற்கு ரயில் வண்டி செல்ல வேண்டும். இடையில் எந்த தடங்கலும் இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் மக்கள் பாதுகாப்புடன் தங்கள் இடங்களுக்கு செல்லவேண்டும் என்று பார்த்து பார்த்து இரவு பகலாக வேலை செய்தோம். சென்னையில் எங்குமே உணவு கிடைக்கவில்லை எங்கள் ரயில்வே கான்டீன் மூலம் உணவு தயாரிக்க செய்து நாங்களும் சாப்பிட்டு மக்களுக்கும் கொடுத்தோம்.

ஒரு முறை ஒரு பதினாறு வயது இளம் பெண்ணின் தந்தை தொலைபேசியில் அழைத்தார். "தனது மகள் தன்னிடம் கோபித்துக் கொண்டு அவளது தோழியுடன் ரயில் ஏறிவிட்டாள் என்றும், அவர்கள் கல்கத்தா செல்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. ஆனால் எந்த ரயிலில் என்று தெரியவில்லை' என்று கூற, நானும் ஒரு பெண்ணுக்கு தாய் என்பதால், அவரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உடனடியாக கல்கத்தா செல்லும் ரயில்கள் என்னென்ன என்று கண்டு பிடித்து, அந்த பெண்ணையும் அவரது தோழியையும் கண்டு பிடித்தோம். இப்படி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டியதே என் தலையாய கடமையாகி விடுகிறது.

ஒரு நாள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள எங்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. "ஒரு இளம் பெண் தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். என்ன கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை. அவருக்கு எங்கள் மொழி புரியவில்லையா? என்று தெரியவில்லை'' என்று கூற, நான் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றேன். பலமணிநேரம் பேசியதில் அவர், தான் யார் என்பதை மறந்து விட்டார் என்பதை கண்டுபிடித்தோம். அதன்பின் ஓரிரு வாரங்களில் அவரது உறவினரை கண்டுபிடித்து அனுப்பி வைத்தோம்.

இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை தியாகராயநகர் நடைமேடை அமைத்த போது, ரயில்வே துறையுடன் இணைந்து தனியார் துறையும் பங்கு கொண்டு, அதன் மூலம் ரயில்வே துறைக்கு அந்த வருடம் ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. இதுதான் முதன் முதலாக தனியார் துறையுடன் நாங்கள் செய்த முதல் ஒப்பந்தம். இப்படி பல முதல்களை என் பணிக் காலத்தில் செய்திருக்கிறோம்.

காலையில் இருந்து மாலை வரை என் அலுவலக அறை, என் மேஜை, நாற்காலியில் என்னால் உட்காரவே முடியாது. சுமார் 40,000 மக்கள் வருவதும், போவதுமாக, எந்த நேரமும் கலகலப்பாக இருக்கும் இந்த ரயில் நிலையம் தான் என் இரண்டாவது வீடு'' என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் ப்ரியம்வதா விஸ்வநாதன்.

- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com