விவாகரத்தா... பாக(பாச)ப் பிரிவினையா? - வழக்குரைஞர் சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

விவாகரத்தா... பாக(பாச)ப் பிரிவினையா? - வழக்குரைஞர் சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சொத்துரிமை குறித்து பலர் கேட்கும் சந்தேகம், பரம்பரை சொத்தில் பெண்களுக்கு

நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சொத்துரிமை குறித்து பலர் கேட்கும் சந்தேகம், பரம்பரை சொத்தில் பெண்களுக்கு பாகம் உண்டா, தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டா..? சில நேரங்களில் பெண்களும், சில நேர்வுகளில், அவர்களது கணவர்மார்களும் கேட்கிறார்கள். அப்படித்தான் கயல்விழியின் கணவர் மணிவண்ணன் என்னிடம் கேட்டார். 

தன் மாமனாருடைய சொத்துக்கள் சில கோடிகள் தேறும், தன் மனைவியோடு பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் மட்டுமே. அதனால் மூன்றில் ஒரு பாகம் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றார். இரண்டு ஃபிளாட் இருக்கிறது. தன் மனைவி கயல்விழியின் சகோதரர்கள் பழனிவேலு, நடராஜன் இருவரும் இரண்டு ஃபிளாட்டிலும் தனித்தனியே அவரவர் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். இவை தவிரவும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு அதிலிருந்து மாத வாடகை மட்டுமே ஏறத்தாழ எண்பதாயிரம் ரூபாய் வருகிறது. வாடகையில் கூட பங்கு கொடுப்பதில்லை எல்லாமே என் மாமனார் சம்பாதித்தது. என் மாமனாரும், மாமியாரும் எங்கள்  திருமணத்திற்கு முன்பாகவே விபத்தொன்றில் பலியாகிவிட்டனர்... என்று மற்ற சொத்து மற்றும் விவரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். 

மனைவி கயல்விழியோ எந்தவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், ஒருவிதமான மன இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார். அந்த இறுக்கம் பாகம் கேட்டு வழக்குப்போட விருப்பமில்லை என்பதை சொல்லாமல் சொல்லிற்று. 

பல சந்தர்ப்பங்களில் தம்பதி சகிதமாய் வருவார்கள். பெண்கள் பிறந்த வீட்டுச் சொத்தில் பாக உரிமை கேட்க சட்ட ஆலோசனை கேட்டு வரும்போது, கணவன்மார்கள், தான் பாகம் கேட்கவேண்டாம் என்று சொல்வதாகவும், மனைவியின் நச்சரிப்பால் ஆலோசனைக்கு அழைத்து வந்ததாகவும் சொல்லித் தங்களைத் தியாகிபோல் காட்டிக்கொள்வார்கள். ஒருசில நேரங்களில் அது உண்மையாகவும் இருக்கும். பலநேரங்களில் தங்கள் மனைவியைப் பகடையாளாக உருட்டிவிடுவர். 

மெல்லப் பேசத்தொடங்கினார் கயல்விழி, அவர் கூற்றின் சாராம்சம்:
கயல்விழியின் பதினைந்தாவது வயதில் தாயும், தந்தையும் விபத்தில் காலமாகிவிட அப்போது பெரிய அண்ணன் பழனிவேலுவுக்கு இருபத்து மூன்று வயது, சின்ன அண்ணன் நடராஜனுக்கு இருபது வயது. அம்மா குடும்பத்தலைவி. அப்பா, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு வந்த வருமானத்தோடு சொந்த ஊரில் இருந்த பூர்வீக சொத்துக்களை விற்றதன் மூலமாகவும் கிடைத்த பணத்தைக் கொண்டு முதலில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். 

அதன் மூலம் வரப்பெற்ற வருவாயைக் கொண்டு, வங்கிக் கடன் உதவியோடு இரண்டு ஃபிளாட்கள் விலைக்கு வாங்கி அவற்றில் தான் தன் சகோதரர்கள் வசித்து வருவதாகவும் சொன்னார்.

மணிவண்ணன் இடைமறித்தார். அதுதான் மேடம். பூர்வீக சொத்தை விற்ற பணமும், சுயமாய் சம்பாதித்த பணமும் போட்டுத்தான் வாங்கியிருக்கிறார்.

அப்படியிருக்க இவள் பாகத்தைக் கேட்டு வாங்கச் சொன்னால் இவள் முடியாது என்கிறாள். நான் எப்படி விட்டுத் தரமுடியும்? இதனாலேயே எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. 

பங்கு பிரிச்சுக் கொண்டு வந்தால்... இவள் என்னோடு வாழலாம். இல்லையென்றால், நீங்களே விவாகரத்துக்கு மனு போட்டு வாங்கிக் கொடுத்துவிடுங்கள் என்றார். அடிக்கடி இப்படிப் பேசியே தன்னை சித்திரவதை செய்வதாக சொன்ன கயல்விழியின் கண்கள் குளமாயின. 

சொத்து பெற்று வந்தால்தான் தன் திருமண பந்தம் நிலைக்குமென்றால் ரத்தபந்தம் ஒன்றே போதும் என மருகினார் கயல்விழி. சொன்ன காரணங்களைக் கேட்பவர்களுக்கு விழிகள் நனையும். 

ஆம், பதினைந்து வயதில் தாய் தந்தை தவறியபோது பெரிய அண்ணன் பழனிவேல் பட்டமேற்படிப்பும், சின்ன அண்ணன் நடராஜன், பட்டப்படிப்பும் படித்துக் கொண்டிருக்க பெற்றோரின் அகால மரணம் அவர்கள் படிப்புக்கு மட்டுமல்ல, மதிப்புமிக்க பெரிய வேலையில் சேரவேண்டும் என்ற அவர்களின் கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

கடையை நடத்த மூத்த சகோதரர் முனைந்தபோது அண்ணனுக்கு உதவும் நோக்கில் பிடிவாதமாக இருந்து தம்பி தானும் கடையில் வேலை பார்த்திருக்கிறார். கயல்விழியின் கல்வி மட்டும் கல்லூரிவரை தொடர்ந்து பட்டம் பெற்றார். முதலில் கயல்விழிக்கு சிறப்பாகத் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். அதன் பின்னரே சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

திருமணமான ஆறு ஆண்டுகளில் கயல்விழி இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபோதும், கணவர் மணிவண்ணன் ஒரு மருந்துக்குக் கூட செலவு எதுவும் செய்திருக்கவில்லை. எல்லாமே பழனிவேலுவும், நடராஜனும்தான் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டாலும், அசையாச் சொத்துக்களும், அதன்மூலம் வரும் வருமானமும் மட்டுமே மணிவண்ணனின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. 

பெற்றோரின் சமநிலையில் நின்ற சகோதரர்கள் இதுவரை தனக்காக, தன்மேல் கொண்ட பாசத்தினால் செய்தவை தனக்குப்  பங்காகக் கிடைத்திருக்க வேண்டிய தொகையைக் காட்டிலும் அதிகம்.  இப்படி ஒரு சூழ்நிலையில் எனக்கு சொத்து என் சகோதரர்கள்தான்... என்று உறுதிபடப் பேசினார் கயல்விழி. 

எனக்கு பாகம் கொடுங்கள் என்று கேட்டால் நிச்சயம் அவர்கள் இருவரும் நிறைவாகவே கொடுப்பார்கள்; அதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. 

ஆனாலும், கேட்பதற்குத் தான் தயாராக இல்லை. அதே நேரம் விட்டுக் கொடுக்கிறேன் என்றும் சொல்லமுடியாது. தன் கணவரின் நிலைப்பாடு தவறு என்பதைப் புரியவைக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் என்னை சந்திக்க வந்ததாகச் சொன்ன கயல்விழி,  கண்டிப்பாக பாகப்பிரிவினையும் கிடையாது; விவாகரத்தும் கிடையாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.

பாகம் பிரித்து வரச்சொல்லி தொடர்ந்து வன்முறையைப் பிரயோகித்து மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் கணவர் மேல் கயல்விழி நினைத்தால் புகார் கொடுக்கலாம். ஆனாலும் தன் கணவர்மேல் கொண்ட காதலால் அப்படிச் செய்யாத கயல்விழி, சகோதர பாசத்தால் கணவனின் கோரிக்கைக்கும் உடன்படவில்லை. என்பதை மணிவண்ணனுக்கு உணர்த்திய தருணம், அவருக்கு திருப்தியில்லை எனினும், கயல்விழி நன்றி மொழி பேசியது. 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தம்பதிகள் மறுபடியும் அலுவலகம் வந்தபோது வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிவிட்டதென எண்ணினேன். ஆனால், இந்த முறை தன் பெரிய பெண்ணுக்கு சடங்கு வைத்திருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகவும் கூறினார் கயல்விழி. மகளின் சடங்கிற்காக கயல்விழியின் இரண்டு சகோதரர்களுமாக சேர்ந்து இருபது பவுன் நகை வாங்கிக் கொடுத்திருப்பதை நெகிழ்ச்சியோடு கூறினார்.

மணிவண்ணனைப் பொருத்தவரை பழனிவேலுவும், நடராஜனும், பொன்முட்டை இடும் வாத்துக்கள். புரியாத மணிவண்ணன் ஒரே நாளில் அறுத்துப் பார்த்துவிட ஆயத்தமாய் இருந்ததற்காக வெட்கப்பட்டார். 

கயல்விழியின் பாசவலையும் அறுந்துபோகாமல், திருமண பந்தமும் தெறித்துப் போய்விடாமல் காப்பாற்றியதில் எனக்கும் ஒரு இனம் புரியாத நிறைவு. 
இல்லந்தோறும் பெண்களுக்குப் பிரச்னைகள் ஒருபுறம்; அலுவலகங்களில் சில அரக்கர்களினால் படும் அல்லல்கள் மறுபுறம். அவை என்னென்ன..? அடுத்த வாரம் சொல்கிறேன்..!
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com