கருப்பை நீர்க்கட்டி பிரச்னையை தீர்க்கும் யோகா!

உடல், மன ஆரோக்கியத்தை எந்த ஒரு மருந்தும் இன்றி அற்புதமாக சீராக்கும் ஆற்றல் கலை யோகா! "மன பலவீனமே பின்னாளில் உடல் பலவீனமாக உருவெடுக்கும்' என்பதை
கருப்பை நீர்க்கட்டி பிரச்னையை தீர்க்கும் யோகா!

உடல், மன ஆரோக்கியத்தை எந்த ஒரு மருந்தும் இன்றி அற்புதமாக சீராக்கும் ஆற்றல் கலை யோகா! "மன பலவீனமே பின்னாளில் உடல் பலவீனமாக உருவெடுக்கும்' என்பதை கவனத்தில் கொண்டே மன, உடல் ஆற்றல்களை சீராக்கி ஆரோக்கியத்தின் ஆணி வேராகச் செயல்படுகிறது யோகாசனம். இன்றைக்கு பெண்கள், குடும்பம், அலுவலகம் என்று பரபரப்பாக இயங்க வேண்டிய சூழல்! இதனால் உடலளவிலும் மனதளவிலும் நிறைய பிரச்னைகள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க பெண்களுக்கான யோகாசனங்களை சொல்லித் தருகிறார் யோகா நிபுணர் வித்யா ஸ்ரீராம்.

"பெண்களைப் பொருத்தவரை தங்களை கவனித்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. குறிப்பாக, இள வயதில் பூப்படைதல், மாதந்திர மாதவிடாய் பிரச்னை, குழந்தைப்பேறு, மெனோபாஸ் இப்படி அடுத்தடுத்த நிலைகளை அவர்கள் சந்திக்கவேண்டியுள்ளது. இது ஓர் இயல்பான விஷயமே என்றாலும் இவை, மன, உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டவை. இவற்றுக்கான எளிய தீர்வை தருகிறது யோகா.

தற்போது, கணினித் துறையில் பணியாற்றும் பெண்களில் பெரும்பாலோருக்கு உடல் அசதி, முதுகு, பின்புறங்களில் அதீதமான வலி, எடைகூடுதல், கழுத்து வலி, கண்களில் பாதிப்பு, மாதவிடாய் சுழற்சியில் தாமதம், சரியான மாதவிடாய் இல்லாதது, பாதங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதிருப்பது, கால்களில் வலி என நிறைய பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இதனால் மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, பதற்றம், சலிப்பு என மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவத்துறை மற்றும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களும் ஏன், எல்லா பெண்களுமே இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வாக அமைவது யோகாவாகும். 

யோகா செய்யும் முன்பாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மூச்சுப்பயிற்சி! வெளிவிடும் உள்ளிழுக்கும் மூச்சை கட்டுப்படுத்தி சீராக்குவதே பிராணாயாமம். இந்த பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் ரத்த ஓட்டத்தையும் பிராணவாயுவையும் அதிகரிக்கும். மேலும் மனதில் ஒரு நெகிழ்ச்சியைத் தந்து உடலையும் மனதையும் ரிலாக்ஸ் ஆக்கிவிடும். குறிப்பாக, சுவாசம் சரியானாலே பல பிரச்னைகள் நம்மைவிட்டு போயே போய்விடும். 

மூச்சுப்பியிற்சி செய்வதால் நல்ல தூக்கம், மன அமைதி, சீரான சுவாசம் உண்டாதல், மனதை ஒருமுகப்படுத்தும் திறன், சளி ஆஸ்த்துமா போன்ற தொந்தரவுகள் நீங்கிவிடும். ஜீரண உறுப்புகளை சீராக்கி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும். கருப்பை சார்ந்த உறுப்புகளை நன்றாக செயல்பட தூண்டும். சீரான சுவாசமே ஆரோக்கியமான உடலுக்கு அறிகுறி. 

மேலும், சூரிய நமஸ்காரம் செய்யலாம். சூரிய நமஸ்காரம் என்பது உடல் நலனுக்கு அடிப்படையான ஒன்று. இதை ஆண், பெண் அனைவருமே எளிதாகச் செய்யலாம். யோகா மற்றும் பிராணாயாமம் இரண்டிற்கும் இது ஒரு பாலமாக இருந்து செயலாற்றும்.

இப்போது பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது பி.சி.ஓடி என்ற கருப்பை நீர்க்கட்டிகளால் தான். இதற்கு உட்கார்ந்து வயிறு அமுங்கும்படியான யோகா பயிற்சி செய்ய வேண்டும். முதலில் ஹார்மோன் பிரச்னைக்கு ஏற்ற ஆசனம் சொல்லி கொடுத்து மன அழுத்தத்தை தவிர்க்க மெடிடேஷனும் சொல்லிக்கொடுக்கிறோம். நீர்க்கட்டிப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் ஆசனம் செய்து சரிசெய்வது எளிது. 

பச்சிமதானாசனா: கால்கள் முன்புறம் நீட்டி வைக்கவும். பின்னர், தலையை மெதுவாக குனிந்து முகம் கால் முட்டியில் லேசாக படும்படி வைக்கவும். இதனால் வயிறு நன்றாக மடிந்து அடிவயிற்றுப்பகுதியிலுள்ள உடலுறுப்புகள் நன்றாக செயல்படத்துவங்கும்.

பத்தகோணாசனா: (வண்ணத்துப்பூச்சி வடிவம்) நேராக உட்கார்ந்து இரண்டு கால்களையும் அகல விரித்து அப்படியே பாதங்களை மட்டும் ஒன்று சேர்க்க வேண்டும். இப்போது பார்க்க வண்ணத்துப்பூச்சி வடிவம் போன்று தெரியும். இவ்வாறு செய்து வருவதால் கருப்பை நீர்க்கட்டிகள் போன்ற பிரச்னைகள் குறைந்து குழந்தைப்பேற்றிற்கு வழி வகுக்கும். 

இதையே மல்லாந்து படுத்தபடி கைகளை இரு புறங்களிலும் விரித்தும் பின்னர் இரு கால்களை விரித்து பாதங்களைச் சேர்த்தும் செய்யலாம். இதைச் செய்வதால் இடுப்புப் பகுதிகள் நன்றாக இருக்கும். 

யோகமுத்ராசனா: கால்களை பத்மாசனத்தில் வைத்து உட்கார்ந்து கைகளை பின்புறமாக மடித்து வைத்து தலையை குனிந்தபடி மெதுவாக தரையை தொடும்படியாக வைக்கவும். இந்த யோகாவினால் வயிற்றுப் பகுதிகள் சீராகும், தொப்பை குறையும்.

ஜானுசிரசாசனா: உட்கார்ந்து காலை மடக்கி, மற்றொரு காலை நீட்டி வைக்கவும். பின்னர், குனிந்து நீட்டியபடி வைத்திருக்கும் காலை இரு கைகளாலும் பிடித்தபடி வைக்கவும். இந்த யோகா செய்வதால் அடிவயிற்றுப்பகுதி நன்றாக அழுந்துவதால் அப்பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.     

இதுபோன்று பவன முக்தாசனா, மகாமுத்ராசனா, தனுராசனா, யோனிமுத்ராசனா போன்ற பல்வேறு யோகாசனங்கள் செய்வதன் மூலமும் உடல்ரீதியான பிரச்னைகள் குறைந்து சீரான சுவாசம் ஏற்படுகிறது. அதோடு, பயம், கோபம், படப்படப்பு போன்றவையும் குறையத் தொடங்குவதை உணரலாம்.  

சில பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் அதிக உதிரப்போக்கு இருக்கும். அதை சரிபடுத்த ஆசனம் செய்து தியானமும் செய்ய வேண்டும். அதாவது, கட்டிலிலோ அல்லது தரையிலோ படுத்தபடி காலை மூன்று தலையணைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மீது காலை தூக்கி வைத்தபடி பயிற்சி செய்யலாம். 

இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் ஞாபகசக்தி வளர, 100 இருந்து 1 வரை மனதிற்குள் ரிவர்ஸôக எண்ணி வந்தாலே போதும், நல்ல ஞாபகசக்தி உண்டாகும். அதோடு, அவரவர் உடல் மன பிரச்னைகளுக்கு ஏற்றபடி தகுந்த யோகக்கலை நிபுணரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு யோகாசனம் செய்வதே 
சிறந்தது'' என்கிறார் வித்யா ஸ்ரீராம்.
- பாரதி, மோகனாஸ்ரீ 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com