கிராமத்தில் யாரும் தூங்கவில்லை! சொல்கிறார்: நடிகை சுரபி லட்சுமி

கிராமத்தில் யாரும் தூங்கவில்லை! சொல்கிறார்: நடிகை சுரபி லட்சுமி

இந்த ஆண்டின் (2017) சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்காக  மலையாள நடிகை சுரபி லட்சுமி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் (2017) சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்காக  மலையாள நடிகை சுரபி லட்சுமி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளத்தில் சுரபி லட்சுமி என்று நடிகை இருக்கிறாரா? அவர் யார்? என்ற சில தேடல்கள், விசாரிப்புகளுக்குப் பின் அட.. நம்ம பாத்தூ... பாத்துவின்  உண்மைப்  பெயர்தான் சுரபி லட்சுமி என்று  அதிசயித்தனர். மிகக்குறைந்த செலவில்,பன்னிரண்டு நாட்களில் தயாரிக்கப்பட்ட படம் "மின்னாம்மினுங்கு' (மின்மினிப் பூச்சி).

தேசிய பட விருது ஜூரிகள் பன்னிரண்டு பேரில் பதினோரு பேர் ஒருமித்த முடிவுடன் சுரபியை தேசிய விருதிற்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள். சுரபிக்கு அடுத்த  இரண்டாவது இடத்தில்  போட்டியாளராக இருந்தவர் ஐஸ்வர்யா ராய்.
சுரபி லட்சுமி சொல்கிறார்:
"தேசிய விருது அறிவிப்பு வந்த போது நான் ஓமான் நாட்டிற்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அதனால் எனக்கு தேசிய விருது யாருக்கு என்பது குறித்து தெரியாது. ஓமான் சென்று இறங்கியதும், "விருது பெற்றமைக்குப் பாராட்டுகள்' என்று வரவேற்க வந்திருந்தவர்கள் பாராட்டினார்கள்.  எனக்கு வெகு சமீபத்தில்  இரண்டு கேரள மாநில விருதுகள் கிடைத்திருந்தன. அதற்காகத்தான் என்னைப் பாராட்டுகிறார்கள் என்று நான் நினைத்தேன். என்னிடம் அவர்கள்  எதிர்பார்த்த சந்தோஷம், மலர்ச்சி இல்லாததால்,  "என்ன?' சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த குதூகலம் முகத்தில் இல்லையே' என்று நேரிடையாகவே கேட்டார்கள். "எனக்கு  தேசிய விருதா... விளையாடாதீங்க' என்றேன். அவர்கள் மொபைலில் இருந்த செய்தியைக் காட்டியதும், கொஞ்ச நேரத்திற்கு ஸ்தம்பித்து  நின்றேன். "மின்னாம்மினுங்கு' படத்தில்  நடித்ததற்காக  எனக்கு விருது கிடைக்கும் என்று படத்துடன் தொடர்புடைய  அனைவரும் சொல்லியிருந்தார்கள். இருந்தாலும் கடவுளிடம்,  சிறந்த  நடிகைக்கான  விருது  கிடைக்க வேண்டும் என்று  நான் வேண்டிக்  கொள்ளவில்லை.  காரணம்  அது பேராசை  என்று  எனக்குத் தெரிந்திருந்தது. 

ஓமானில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி முடித்து எனது சொந்த ஊர் திரும்பியபோது நான் வசிக்கும் நரிக்குன்னி கிராமத்திலிருந்து எட்டு கி.மீ. முன்பே நான் நிறுத்தப் பட்டேன்.       கிராமத்து இளைஞர்கள் தங்கள்  இருசக்கர வாகனங்களில்  அகம்படி  பிடித்து  ஊர்வலம் போக.. என்னைத் தொடரச் சொன்னார்கள். சாலை ஓரங்களில் எனது படம் அச்சிடப்பட்ட பிளெக்ஸ் போர்டுகள்... வாழ்த்து கோஷங்கள்... வாண வேடிக்கைகள்... மண்ணின்  மக்கள்  அவர்களது சொந்த மகளை வாழ்த்தி புகழ்ந்து திக்குமுக்காட  வைத்து விட்டார்கள். எந்தக் கலப்படமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த வரவேற்பு, நான் நகரத்தில் குடி புகுந்திருந்தால் நிச்சயம் கிடைத்திருக்காது. அன்று இரவு கிராமத்தில் யாரும் தூங்கவில்லை... கிராம மக்கள் என் வீட்டிற்கு அர்த்த ராத்திரியிலும் வந்து  பாராட்டித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். எந்த நடிகைக்கும் கிடைக்காத மண்வாசனையுள்ள வரவேற்பு  எனக்கு  கிடைக்க நான் கொடுத்து வைத்திருந்தாலும், என் கிராம மக்கள் விசால மனசுக்காரர்கள்  என்று தெரிய வந்திருக்கிறது.

நான்கு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். நடனம் கற்றுக் கொண்டேன்.  கல்லூரியிலும் நாடகம்தான் பாடம். நாடகத்தில் முதுகலை முடித்து, எம்.பில்லும் முடித்திருக்கிறேன். டிவி சானல்களில் தலை காட்டினேன். பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன். "நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்' என்று சொன்னால் மட்டுமே தெரியக் கூடிய மிகச்சிறிய வேடங்கள். எனக்கு வயது முப்பதாகிறது. டிவி சானல் ஒன்றில் "எம் எய்ட்டி மூஸô ஹாஸ்ய' தொடரில் பாத்தூ வேடத்தில், வளர்ந்த இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக நடித்தேன். படம் முழுக்க நைட்டிதான் எனது காஸ்டியூம். அந்த டிவி தொடர் மிகப் பெரிய ஹிட்டாகி அகில கேரளத்திற்கு, வெளிநாடுகளில்  வாழும் மலையாளிகளிடத்தும் என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. எனது பெயரே  பாத்தூவாகிப் போனது. எனது சொந்தப் பெயரான சுரபி லட்சுமியை மலையாள மக்கள் மறந்து போனார்கள். கடைகள் திறக்க சிறப்பு விருந்தினராக அழைப்பார்கள். அவர்கள் வைக்கும் ஒரே நிபந்தனை,நான் பாத்தூவாக நைட்டி உடை அணிந்து விழாவிற்கு  வரவேண்டும் என்பதுதான். 

சமீபத்தில் எனக்கு கிடைத்த சிறந்த நடிகைக்கான தேசிய விருதுதான் மீண்டும் என்னை  சுரபியாக அடையாளம் காட்டியிருக்கிறது. திரைப்படங்களில், சிறிய பெரிய வேடம் என்று பார்க்காமல் முக்கிய வேடமாக இருந்தால்  நிச்சயம் நடிப்பேன். தேசிய விருது கிடைத்தது  என்பதற்காக  இந்த மாதிரி  வேடங்களில்   மட்டும்தான்  நடிப்பேன் என்று  நிபந்தனை  போட  மாட்டேன். தொடர்ந்து நாடகங்களிலும், டிவி தொடர்களிலும் நடிப்பேன். அவைதான்  எனது அஸ்திவாரம். அவற்றை மறக்க முடியாது. ஒதுக்க முடியாது.    

தேசிய விருது எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். நடிப்பு எனது தொழில். அந்த நடிப்பை நாடகம்,டிவி தொடர்கள், திரைப்படங்கள் மூலம்  ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பேன்.. "மின்னாம்மினுங்கு' ஒரு அவார்டு படம் போல எடுக்கப்படவில்லை.  இளம் வயதுள்ள பெண்ணின் தாய் வாழ்க்கைச் சுமையை நகர்த்த, அதிகாலை மூன்று  மணிக்கு எழுந்து இரவு பன்னிரண்டு வரை அல்லாடுவதை நச்சென்று சொல்கிறது. ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் பார்ப்பவர் நெஞ்சங்களைத் தொடும். உலுக்கும் என்பது மட்டும் உறுதி.
- பிஸ்மி பரிணாமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com