சமையல்... சமையல்... சமையல்...!

புட்டு,பயறு, பப்படம், வெந்தயக்கீரை கூட்டு, அன்னாசிப்பழ அல்வா, வெள்ளரிக்காய் தேங்காய் குழம்பு, கோவைக்காய் மசாலா
சமையல்... சமையல்... சமையல்...!

• புட்டு,பயறு, பப்படம் 

தேவையானவை:
அரிசிமாவு (புட்டு மாவு) - 300 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பச்சைப் பயறு - 150 கிராம்
பப்படம் - 10
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
புட்டு : சிறிதளவு நீரில் உப்பு சேர்த்து, புட்டுமாவில் தெளித்து, கலந்து புட்டு குழாயில் பாதி அளவு மாவு, சிறிது தேங்காய்த் துருவல், மீண்டும் புட்டு மாவு இட்டு, புட்டுக் குழலை மூடி வேகவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாசிப்பயறு: பாசிப்பயறை ஊறவைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பப்படம்: வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும், பப்படங்களைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். 
 அவித்த புட்டு மாவுடன், வேகவைத்த பச்சைப்பயறு சேர்த்து அத்துடன் பொரித்த பப்படத்தை பொடித்துப் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டும். இனிப்பு விரும்புபவர்கள் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். புட்டு,பயறு, பப்படம் கூட்டணி சிற்றுண்டி தயார். 
குறிப்பு: அரிசிமாவில்  மாவுச் சத்தும், பச்சைப்பயறில் புரதச் சத்தும், தாது சத்தும் நினறந்து உள்ளதால்  இந்த புட்டு உடல்நலத்திற்கு நல்லது.

• வெந்தயக்கீரை கூட்டு

தேவையானவை:
வெந்தயக்கீரை - ஒரு சிறுகட்டு
பாசிப்பருப்பு - 50 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 1
புளிகரைசல் - 3 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - தேவைக்கேற்ப
உளுத்தம் பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றை நடுத்தர அளவு நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்புடன் போதிய அளவு தண்ணீர்விட்டு  வேக வைக்கவும். பாதிபதத்திற்கு வந்ததும், வெந்தயக்கீரை, தக்காளி, வெங்காயம் புளிகரைசல், மிளகாய்த் தூள், தனியாத்தூள், உப்பு, மஞ்சள்தூள் இவைகளைச் சேர்த்து, தொடர்ந்து வேக வைக்கவும். கலவை நன்கு வெந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். வெந்தயக்கீரை கூட்டு தயார். சாம்பார் சாதம், ரசம்சாதம், தயிர்சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடைக்கு ஏற்ற உணவு.

• அன்னாசிப்பழ அல்வா

தேவையானவை:
அன்னாசிப் பழம் - 1
வெல்லம் - அரை கிலோ
தேங்காய்ப் பால் - முக்கால் டம்ளர்
நெய் - 50 கிராம்
முந்திரிபருப்பு - 10
செய்முறை: அன்னாசிப் பழத்தின் மேல் தோல் பகுதியை நறுக்கி களைந்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதை மிக்ஸியிலிட்டு கூழாக அடித்து எடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டவும். பிறகு வாணலியில் வெல்ல கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம் வந்ததும், அன்னாசிப் பழக் கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து தொடர்ந்து காய்ச்சவும். இடையிடையே நெய்விட்டு, நன்கு கிளறி கொடுக்கவும். கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது அல்வா பதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும். அன்னாசிப்பழம் அல்வா தயார்.
குறிப்பு: அன்னாசிப்பழத்தில் பல தாதுப் பொருள்களும், வைட்டமின்களும் உள்ளதால் உடல் சோர்வை அகற்றி, புத்துணர்ச்சி தரும். 

• வெள்ளரிக்காய் தேங்காய் குழம்பு

தேவையானவை:
வெள்ளரிக்காய் - கால் கிலோ
தேங்காய்த் துருவல் -  1கிண்ணம்
மிளகாய்வற்றல் - 5
சின்ன வெங்காயம் - 8
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - எலுமிச்சைப் பழ அளவு
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வெள்ளரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், மிளகாய்வற்றல், தோலுரித்த நான்கு சின்ன வெங்காயம் , மஞ்சள் தூள் இவைகளை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியிலிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். புளியுடன் போதிய நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் வெள்ளரிக்காய் துண்டுகளை இட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும், புளி கரைசல் வைத்திருந்த மசாலா விழுது, உப்பு சேர்த்து தொடர்ந்து வேக விடவும். கலவை நன்கு வெந்து கமகம என குழம்பு வாசனை வந்ததும், வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து இறக்கவும். வெள்ளரிக்காய் தேங்காய் குழம்பு தயார்.

• கோவைக்காய் மசாலா

தேவையானவை:
கோவைக்காய் - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிது
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 சிட்டிகை
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வாணலியில் நறுக்கியவைகளை இட்டு, போதிய அளவு தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும். பாதிபதத்திற்கு வெந்ததும்,மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். தண்ணீர் முழுவதும் வற்றி, மசாலா கலவை நன்கு சுருண்டு கமகமவென வாசனை வந்ததும், கடுகு - கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். சுவையான கோவைக்காய் மசாலா தயார். 
குறிப்பு: கோவைக்காய் ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். கோடையில் அஜீரணம் வராது காக்கும் தன்மை இதற்கு உண்டு.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் உத்ரா ஆனந்த்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com