டாக்டரைக் கேளுங்கள்

வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் சூசன் மார்த்தாண்டன்.,சென்னை அடையாறில் ஸ்மார்ட் விஷன் மற்றும் டயாபெடிஸ் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
டாக்டரைக் கேளுங்கள்

வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் சூசன் மார்த்தாண்டன்.,சென்னை அடையாறில் ஸ்மார்ட் விஷன் மற்றும் டயாபெடிஸ் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர், இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மறைந்த டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸின் புதல்வியாவார். இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் இயக்குநராகவும் இருக்கிறார். இவரின் கணவர் டாக்டர் மார்த்தாண்டன். 

அன்புள்ள டாக்டர், உடற்பயிற்சி இல்லாமல் வெறும் உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையைக் குறைப்பது ஆரோக்கியமானதா?
-வெ.வசந்தி, திருவெண்ணெய்நல்லூர்.
ஆரோக்கியமான உணவு உண்பதால் மட்டுமே ஒருவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூற முடியாது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு அகற்றப்படும். மேலும், இதயம் சீராக இயங்கவும், திசுக்களுக்கு தேவையான தூய்மையான காற்று சென்றடையவும் உடற்பயிற்சி மிகவும் உதவும்.

சர்க்கரை நோய்க்கும் கண் நோய்க்கும் தொடர்பு உள்ளதா?
- வாசகி, கோயம்புத்தூர்.
ஆம். சர்க்கரை நோய் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். அவற்றில் கண்களும் ஒன்று. கண்கள் வறண்டு போவது, கண்ணாடியில் சரி செய்யக் கூடிய பார்வை குறைபாடு. கண்புரை, கண் நீர் அழுத்த நோய், டயாபெடிக் ரெடினோபதி எனப்படும் கண்களின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கோடை காலத்தில் கண்களில் ஈரம் வறண்டு போகிறது. கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி?
- ராமதிலகம், வேலூர்.
கோடை காலங்களில் ஏற்படும் கண்களின் வறட்சியை பின்வருமாறு கட்டுப்படுத்தலாம். 
புற ஊதாக் கதிர்களை தடுக்கும் குளிர்கண்ணாடிகளை வெளியே செல்லும் போது அணிந்து கொள்ளலாம். நீச்சல் குளங்களில் நீந்தும் பொழுது கண்களை, க்ளோரின் போன்ற ரசாயனத்திலிருந்து பாதுகாக்க கண்ணாடிகளை அணிய வேண்டும்.
பெரும்பாலும் பகல் நேரங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது வெளியே செல்வதை தவிர்க்கலாம். மேலும் நல்ல உறக்கம், ஆரோக்கியமான உணவு, (பழவகைகள்) நிறைய நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்வதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இவையல்லாமல், கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, சொட்டுமருந்துகளும் தற்பொழுது கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப அவற்றை உபயோகிக்கலாம்.

ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைக்குக் கண்பார்வை குறைபாடு உள்ளது என்றால் அதை எப்படி நாம் அறிந்து கொள்வது?
- விஜயலட்சுமி, சேலம் மாவட்டம். 
ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பின், அதை கீழ்கண்ட முறைகளால் கண்டறியலாம்: 
குழந்தை கண்களை அவ்வப்பொழுது தேய்த்துக்கொண்டிருந்தால், குழந்தையின் கண்களில் வெள்ளையாக தெரிந்தால், மற்றும் தாய், தந்தை சொந்தத்தில் திருமணம் செய்திருந்தாலோ, இருவரில் எவரேனும் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு இருந்தாலோ, குழந்தை குறைமாதத்தில் பிறந்திருந்தாலோ, அல்லது குழந்தை வளர்ச்சியில் தாமதம் இருந்தாலோ கண் மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

டாக்டர், கண் மருத்துவத்தில் இப்போது வந்துள்ள நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?
பத்மப்ரியா, சென்னை.
கண் மருத்துவத்தில் உள்ள நவீன சிகிச்சை முறைகள்: 
பார்வை குறைபாடு என்னும் (MYOPIA கிட்டப்பார்வைக்கு) LASTIC என்னும் LASAR சிகிச்சை. 
கண்புரை -  PHACOEMULSIFICATION என்னும் கண்புரை அகற்றும் லேசர் சிகிச்சை.
 KERATOCONUS எனப்படும் கூம்புக்கருவிழி C3 R INTACS கருவிழியில் வெள்ளைப் படிதல் அல்லது தழும்பு - DSAFK, DALK, DMEK (கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் விழித்திரையில் சர்க்கரை நோய் மற்றும் வயதாவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு லேசர் மற்றும் சில நவீன ஊசிகள் குருத்தணுக்கள் STEM CELLS, GLAUCOMA எனப்படும் கண்நீர் அழுத்த நோய் மிகுந்த செயல்திறன் வாய்ந்த சொட்டு மருந்துகள், லேசர் சிகிச்சை VALVES, SHUNTS எனப்படும் நவீன அறுவை சிகிச்சை முறைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு  கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
- இ.விஜயா, மன்னார்குடி.
ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் சில பெண்களுக்குக் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம். இதற்குக் காரணங்கள் பல உள்ளன. உதாரணமாக, கண்களுக்குச் செல்லும் இரத்தக் குழாயில் பாதிப்பு  (HYPENTENSIVE RETINOPATHY - கண் நரம்பு பாதிப்பு அடைதல். உடல் பருமனான மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு IIH எனப்படும் IDIOPATHIC INTRACRANIAL HYPERTENSION (மூளையில் இரத்த அழுத்தம்) ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது முக்கியமாக கண் நரம்பை பாதிக்கும். இந்நோய்க்கு PAPILLEDEMA என்று பெயர்.

லேசர் சிகிச்சை முறைகளில் பின் விளைவுகள் ஏதும் ஏற்படுமா?
- வாசகி, சென்னை.
லேசர் சிகிச்சையினால், குறிப்பாக பார்வை குறைபாட்டிற்காக செய்யும் லேசர் சிகிச்சையினால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவை, கண் கூச்சம், பார்வை ஒரு சில நாட்களுக்கு சற்று மங்கலாக இருக்கலாம், கண் சற்று வறண்டு இருத்தல், இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுதல் சில நாட்களுக்கு சற்று சிரமமாக இருக்கலாம்.

மருத்துவர் நோயாளிடம் அன்புடன் நடந்துகொள்வது பாதி நோயைக் குறைக்கும் என்பது உண்மையா?
- அமுதா, சத்தியமங்கலம்.
ஆம். மருத்துவர்கள் நோயாளிகளிடம் அன்போடும், அக்கறையோடும் கனிவோடும் பேசுவதால், தேவையற்ற மன உளைச்சல் இல்லாமல் தங்களுக்கு வந்திருக்கக்கூடிய நோயை அவர்கள் எளிதாக கையாள முடிகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. உடல் வலிமைக்கு மனவலிமை கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

கண்களில் சொட்டு மருந்து விட்டால் தொண்டைப் பகுதியில் மருந்தின் கசப்புணர்வு ஏற்படுகிறதே எப்படி?
- தேவி, மதுரை.
நமது கண்களுக்கு, மூக்கு மற்றும் தொண்டைப்பகுதிக்கும், இயற்கையாகவே இணைப்பு உள்ளதை, மனித உடல்கூறியல் மூலம் அறியமுடிகிறது. இதனால் கண்களில் சொட்டு மருந்து விடும் பொழுது, அது தொண்டைக்கு இறங்குவதால், அந்த மருந்தின் கசப்புணர்வை, பொதுவாக அனைவரும் உணரமுடியும்.
(பதில்கள் தொடரும்)
 தொகுப்பு : ரவிவர்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com