பாலிவுட் இசைக்கேற்ப என்னால் பாட முடியாது! மனம் திறக்கிறார்: லதா மங்கேஷ்கர்

1942-ஆம் ஆண்டு தனது 12வது வயதில் தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரை இழந்த லதா மங்கேஷ்கர் குடும்பமே ஓர் இசை குடும்பமாகும்.
பாலிவுட் இசைக்கேற்ப என்னால் பாட முடியாது! மனம் திறக்கிறார்: லதா மங்கேஷ்கர்

1942-ஆம் ஆண்டு தனது 12வது வயதில் தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கரை இழந்த லதா மங்கேஷ்கர் குடும்பமே ஓர் இசை குடும்பமாகும். இவரது உடன்பிறந்த ஆஷா, இருதயநாத், உஷா, மீனா அனைவருமே சாஸ்திரிய சங்கீதம் தெரிந்தவர்கள்.

87 வயதாகும் லதா இன்றும் தொடர்ந்து பாடி வந்தாலும் திரைப்படங்களில்  பாடுவதை தவிர்த்து பக்தி பாடல்களை மட்டுமே பாடி வருகிறார்.

"இன்றைய பாலிவுட் இசைக்கேற்ப தன்னால் பாட முடியாது என ஒதுங்கியுள்ள லதா, ரசிகர்கள் தங்கள் ரசனைக்கேற்ப இன்றைய இசையை விரும்புகிறார்கள். அதனால் இதைப் பற்றி விமர்சிக்கவோ நியாயப்படுத்தி கருத்து சொல்லவோ நான் விரும்பவில்லை'' என்று கூறும் லதா, தனது அனுபவங்களை பற்றி கூறுகிறார்:

"என்னுடைய தந்தை மறைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அவரைப் பற்றிய நினைவுகள் என்னுடைய மனதில் நீங்காத நினைவுகளாக இருப்பது உண்மைதான். ஒவ்வொரு பாடகரும் சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படையை கற்றுக் கொள்வது முக்கியமென்று என்னுடைய தந்தை அறிவுறுத்தியதை உங்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று திறமை மிக்க கலைஞர்களுக்கு மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிக்கிறோம்.

பிறமொழிகளில் பாடும்போது நான் அந்த மொழிகளுக்கு ஏற்ப உச்சரிப்பை முறையாக கடைப்பிடிப்பதாகவும், இன்றைய தலைமுறையினரிடம் இந்த அர்ப்பணிப்பு குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். என்னுடைய தாய்மொழி மராத்தி. இந்தி, பெங்காலி, உருது உள்பட பல மொழிகளில் பாடியுள்ளேன். வேறு மொழிகளில் பாடும்போது அந்த மொழியைப் பற்றியும், உச்சரிப்பைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். அதன் அர்த்தமென்ன? படத்தில் நடிப்பவரின் காட்சியமைப்பு என்ன? என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வேன். உச்சரிப்பு முறையாக இருக்கவேண்டுமென்பதற்காகவே உருது மொழியை கற்றதும் உண்டு.

முகமது ரபி, முகேஷ், கிஷோர்குமார், தலத் முகமது போன்று பல பாடகர்களுடன் சேர்ந்து பாடியது பிடித்தமாக இருந்தது என்றாலும், கிஷோர்குமாருடன் சேர்ந்து பாடுவதை மிகவும் விரும்பினேன். என்னுடைய சகோதரர் இருதயநாத் இசையமைத்த மீரா பஜனில் பாடிய "சலா வஹி தேஷ்...' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானதாகும். இன்றையப் பாடகர்களில் சோனுநிகாம், ஜவேத் அலி, ஷான், சங்கர் மகாதேவன் மற்றும் ஷ்ரேயா கோஷல், சுனிதி சவ்ஹன், சித்ரா, அல்கா யாக்னிக் ஆகிய பெண் பாடகிகளையும் பிடிக்கும். மேற்கத்திய இசையில் சிம்போனிகள் எனக்கு பிடிக்கும். பீட்டில்ஸ் இசை பிடிக்கும். மற்றபடி இன்றைய மேற்கத்திய இசை கலைஞர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

என்னுடைய பாடல்களை தெளிவாக வெகு அழகாக திரையில் வாயசைத்து பாடிய நடிகைகளில் சாதனா, மீனாகுமாரி, நர்கீஸ், மதுபாலா, காஜோல் ஆகியோரை குறிப்பிடலாம். பாடலை புரிந்து கொண்டு அதன்படி நடித்தவர்களில் ஜெயாபச்சன் குறிப்பிடத்தக்கவர். நான் பாடும்போது எப்படி நிற்கிறேன்? பாடுகிறேன்? புடவையை சரி செய்கிறேன் என்பதை கவனித்து அதே போன்றும் "அபிமான்' படத்தில் வாயசைத்து பாடியதோடு, என்னைப் போலவே வெள்ளைப் புடவை அணிந்து நடித்தது மறக்கமுடியாததாகும்.

சமையல் செய்வதென்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சில ஐயிட்டங்களை செய்வதில் என்னைவிட திறமைசாலி வேறு யாருமில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். இந்த நாட்டின் எல்லா விருதுகளும் எனக்கு கிடைத்துவிட்டன. எந்த விருதாக இருந்தாலும் அதை வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் மீதுள்ள மரியாதை மற்றும் அன்பு காரணமாக அளிக்கப்படும் விருதுகள் என்னுடைய ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com