விண்வெளி வீராங்கனையாக வேண்டும்!

இந்திய விமானப் படையில் பணி புரிந்து கொண்டு, இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியில் விளையாடி வரும் ஃபிளைட் லெஃப்டினண்ட் ஷிகா பாண்டே இரண்டு பொறுப்புகளையும் சீரியஸாக எடுத்துக் கொள்பவர்
விண்வெளி வீராங்கனையாக வேண்டும்!

இந்திய விமானப் படையில் பணி புரிந்து கொண்டு, இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியில் விளையாடி வரும் ஃபிளைட் லெஃப்டினண்ட் ஷிகா பாண்டே இரண்டு பொறுப்புகளையும் சீரியஸாக எடுத்துக் கொள்பவர். இருபத்தெட்டு வயதாகும் ஷிகா கிரிக்கெட்டில் "வலது கை' பந்து வீச்சாளர். ஷிகாவின் ஜெர்ஸி எண் 12 ஆகும். ஷிகா பொறியியல் பட்டதாரி. இந்திய விமானப் படையில் அதிகாரி.

"இவை எல்லாம் எளிதாக என்னிடம் வந்துவிடவில்லை. அப்பா கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர். நானும் அங்கேதான் படித்தேன். அப்பாவும் கிரிக்கெட் ஆர்வலர். நானும் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். அப்பாவுக்கு கோவாவுக்கு மாறுதல் கிடைத்ததால் எட்டு வயதிலிருந்து கோவாவில்தான் வசித்து வருகிறோம். கல்லூரியில் படிக்கும் போது கிரிக்கெட்டை முறையாக கற்றுக் கொண்டேன். ஒரு கிரிக்கெட் போட்டியில் ஐம்பது ரன்களை மூன்று முறை எடுத்தேன். அதைப் பார்த்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பொறுப்பாளர், "தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விருப்பமா'' என்று கேட்டார். நானும் "ஆம்' என்று பதில் சொன்னேன். ஆனால் அப்பாவோ "கிரிக்கெட்டை எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம்'' என்றார். அதனால் கிரிக்கெட்டிற்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.

பிறகு கிரிக்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். கோவா அணியில் சேர்ந்து விளையாடினேன். 2010-இல் இங்கிலாந்திற்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடினேன். 2011-இல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதினோம். விமானப் படையில் சேர்வதற்காக என்னைத் தயார் செய்தேன். அதிலும் வெற்றி கிடைத்தது. விமானப் படையில் நான் கிரிக்கெட் விளையாட அனுமதிப்போம் என்று வாக்குறுதி தந்தது, என் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. 2012 ஜு ன் 30- இல் விமானப்படையில் அதிகாரியாகச் சேர்ந்தேன் .

விமானப் படையில் ஆண்கள் ஆடுவதற்காக கிரிக்கெட் அணி இருக்கிறது. அதிக பட்சம் வெளியே வேறு அணிகளுடன் ரஞ்சி போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள். நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் சார்பாக கிரிக்கெட் ஆட அனுமதியை முறைப்படி கேட்டேன். விமானப் படையில், சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் ஆட அனுமதி கேட்ட முதல் ஆள் நான்தான். அனுமதி கிடைத்தது. பயிற்சியைத் தொடங்கினேன்.

பலனும் கிடைத்தது. ப-20 போட்டியில் 2014-இல் பங்களாதேஷை எதிர்த்து விளையாட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் எனக்கு இடம் கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் பெண்கள் கிரிக்கெட் அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் மித்தாலி ராஜுடன் ஜோடிசேர்ந்து ஆடி இரண்டு பேரும் 68 ரன்களை எடுத்தோம். அந்த ஆண்டில் , "ஒரு நாள்' கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த வீராங்கனை என்ற பெருமையும் எனக்குக் கிடைத்தது.

2014 -இல் தென்னாப்பிரிக்கா பெண்கள் அணியின் சவாலை எதிர் கொண்டு மூன்று விக்கெட்களை வீழ்த்தி பாராட்டுகளை பெற்றேன். இதுவரை 32 "ஒரு நாள்' போட்டிகள், 22 ப-20 போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டதுதான் எனது உச்சம். இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. விமானப் படைத் தளபதி எனக்கு பரிசு வழங்கி என்னை கெளரவித்தார்.

இந்திய விமானப் படையிலும் சரி.. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியிலும் சரி... நாட்டை நான் பிரதிநிதித்துவம் செய்கிறேன். அது எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் என்பேன். அடுத்து விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதே எனது ஆசை'' என்று சொல்கிறார் ஃபிளைட் . லெஃப்டினண்ட் ஷிகா பாண்டே.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com