சமையல்.... சமையல்.... சமையல்....

அரிசிமாவுடன் 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து பளபளவென வரும்போது அடுப்பை அணைக்கவும்.
சமையல்.... சமையல்.... சமையல்....

ராகி கூழ் தோசை

தேவையானவை:
ராகி மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1/4 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: அரிசிமாவுடன் 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து பளபளவென வரும்போது அடுப்பை அணைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ராகிமாவு, அரைத்த இஞ்சி கலவை, கிளறி வைத்துள்ள அரிசிக்கூழ், உப்பு, பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். 3 மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் சேர்த்து இருபுறமும் திருப்பி எடுக்கவும். உடனடியாக செய்ய வேண்டுமெனில் சிறிது புளித்த மோர் சேர்க்கலாம். 

ஆந்திர புட்ட காக்ரா தோசை 

தேவையானவை:
இட்லி அரிசி - 2 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
உளுந்து - 1/2 கிண்ணம்
அவல் - 1/2 கிண்ணம்
மிகப்பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
புளித்த கீரை - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
சிவப்பு மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: இட்லி அரிசி, பச்சரிசி, அவல் ஒன்றாகவும், உளுந்து, வெந்தயம் ஒன்றாகவும் ஊற வைத்து நன்றாக அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெயில் புளித்த கீரையை வதக்கவும். இத்துடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். சிவப்பு மிளகாயை ஊற வைத்து அத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். தவாவை சூடாக்கி 1/4 அங்குல கனத்துக்கு மாவை ஊற்றவும். அரிந்த வெங்காயம், மிளகுத்தூள் தூவவும். தோசையின் ஒரு பகுதியில் புளித்த கீரை சட்னி சேர்த்து தேய்க்கவும். மறுபாதியில் மிளகாய் சட்னி சேர்த்து தேய்க்கவும். நல்லெண்ணெய் தாராளமாகச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, மூடி, வேகவைத்து எடுக்கவும். தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

கர்நாடக பொரி தோசை

தேவையானவை:
பச்சரிசி - 1 1/2 கிண்ணம்
அரிசிப் பொரி - 1 1/2 கிண்ணம்
புளித்த கெட்டி மோர் - 2 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிதளவு
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் அரிசிப்பொரி, உப்பு, மோர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும். சமையல் சோடா சேர்த்து, கலந்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும். தொட்டுக்கொள்ள காரசாரமான பச்சை மிளகாய் சட்னி அருமையாக இருக்கும்.

செட்டிநாடு ஸ்பெஷல் தோசை

தேவையானவை:
பச்சரிசி மாவு - 1 கிண்ணம்
மைதா - 1/2 கிண்ணம்
ஜவ்வரிசி - 1/2 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
மிளகாய் வற்றல் - 4
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு, நெல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை: ஜவ்வரிசியை ஊற வைத்து, வேக வைத்து மையாக அரைக்கவும். இத்துடன் அரிசிமாவு, மைதா, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு வதக்கி, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்து வைத்துள்ள மாவை தவாவில் சற்றே கனமாக ஊற்றித் தேய்க்கவும். வெங்காய சட்னி சேர்த்து தடவவும். ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து எடுக்கவும். நடுவில் கொத்துமல்லி தூவி, வெண்ணெய் சேர்த்து ரோல் போல சுருட்டவும். காரமில்லாத வெள்ளைச் சட்னியுடன் சாப்பிடலாம்.

அழகர்கோவில் தோசை

தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
கருப்பு உளுந்து - 1/2 கிண்ணம்
புளிக்காத கெட்டித் தயிர் - 1 கிண்ணம்
மிளகு, சீரகம் - தலா 2 தேக்கரண்டி
சுக்குள்தூள் - 1 தேக்கரண்டி
நெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக ஊற வைத்து, உப்பு, தயிர் சேர்த்து கரகரப்பாக அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். இத்துடன் பொடித்த மிளகு, சீரகம், சுக்குத்தூள் சேர்த்து கலக்கவும். கெட்டியான தோசைகளாக வார்த்து சுற்றிலும் நெய் சேர்த்து மொறுமொறுவென எடுக்கவும். தயிரில் தோய்த்துச் சாப்பிடலாம்.

கர்நாடக அவரேகாளு தோசை

தேவையானவை:
பச்சரிசி -1 கிண்ணம்
துருவின தேங்காய் - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
பச்சை மொச்சை - 1/2 கிண்ணம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து, தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சூடான தண்ணீரில் பச்சை மொச்சையை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். நீரை வடித்து மொச்சையை மாவுடன் கலக்கவும். சூடான தவாவில் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து மொறு மொறுவென சுட்டெடுக்கவும். தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com