ஃபாரன்ஹீட் பெண்கள்!

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ளது "ரைட்டர்ஸ் கஃபே'. உள்ளே நுழைந்தால் ஒருபுறம் மேசையில்  உட்கார்ந்து  நான்கு பேர் சாப்பிட்டவாறே அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஃபாரன்ஹீட் பெண்கள்!

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ளது "ரைட்டர்ஸ் கஃபே'. உள்ளே நுழைந்தால் ஒருபுறம் மேசையில்  உட்கார்ந்து  நான்கு பேர் சாப்பிட்டவாறே அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர். அருகில் இருந்த பகுதியில்  தயாரிக்கப்பட்ட சாக்லெட் கேக்கை வேக வேகமாக அலங்கரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். மற்றொரு புறம்  புத்தகக் குவியல். அடுத்த அறையில் கல்லூரி மாணவி ஒருவர் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். முதல்  மாடிக்குச் சென்றால் அங்கு ஒரு கதாசிரியர் எழுதிக் கொண்டிருந்தார். 

பேக்கரி  தொழிலில் ஓரியன்டல் குசின்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பரிணாமம்தான் இந்த "ரைட்டர்ஸ் கஃபே'.  ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த "கஃபே'யானது சுவிட்சர்லாந்து (சுவிஸ்)  உணவுகளைக் கொண்டது. இங்கு அமர்ந்து சாப்பிடலாம், சிறிய நிகழ்ச்சிகளை நடத்தலாம், கவிதைகள் வாசிக்கலாம்.

முதல் அறையில் சிறுவர்களுக்கான புத்தகங்கள், அவர்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிய அறை.  தரைத்தளத்திலும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனைக்கு (மட்டுமே) உள்ளன.

உள்ளே உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் கருப்பு, வெள்ளைச் சீருடையோடு பலர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். பிற "கஃபே'க்களைப் போன்றுதான் இதுவும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சத்தமில்லாமல் சமூகத்தில் மாபெரும்  புரட்சிக்கான அடியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆம்! இங்கு பணியாற்றும் பெண்களில் பெரும்பாலானோர்  அமிலம் அல்லது தீக்காயங்களில் இருந்து மீண்டவர்கள். 

தீக்காயங்களால் தோற்றம் மாறியதால், பல நிறுவனங்களில் நிராகரிப்புகளைச் சந்தித்தவர்கள். இங்கு சமையலறையில் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுபவர்கள், வழிகாட்டுபவர்கள் என அனைவரும் இந்தப் பெண்கள்தான். சர்வதேச குற்றங்கள் தடுப்பு மற்றும் மீண்டவர்கள் பராமரிப்பு அறக்கட்டளையைச் (பிசிவிசி) சேர்ந்த பெண்கள் தான்  "ரைட்டர்ஸ் கஃபே'யில்  பணியாற்றி வருகின்றனர்.

நம்மை வரவேற்றவர் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் மேலாளர் சாரதா தர்மராஜ். "இங்கு தீக்காயங்களில் இருந்து மீண்ட  8 பெண்கள், செவித்திறன் மற்றும் வாய் பேச முடியாத 3 பெண்கள் பணியாற்றுகின்றனர். முதலில் 6 மாத கால பயிற்சி,  அதற்கு பின்பு இங்கே பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால் இந்தப் பெண்கள் விரும்பினால் மட்டுமே அவர்களிடம்  பேசலாம். மேலும் தங்கள் பழைய நிகழ்வுகளை மறந்து புதிய பாதையில் பயணிக்கும் இந்தப் பெண்களின் கடந்த கால  சம்பவங்களையும் கிளற வேண்டாமே'' என்று அன்பான நிபந்தனையும் விதித்தார்.

முதலில் பேசியவர் யசோதா, தீக்காயத்தில் உருமாற்றம் ஏற்பட்டதோடு, பார்வையிலும் குறைபாடுள்ளவர். இவர் புத்தகப்  பிரிவில் பணியாற்றுகிறார், கஃபேக்கு வருவோருக்கு புத்தகங்கள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறார். கணினி  திரையைப் பார்க்க இயலாது என்பதால் கைகளால் புத்தகங்களுக்கான ரசீது எழுதிக் கொடுக்கிறார். "முகத்தை இப்படி வச்சுகிட்டு வேலை கேட்குறீங்களே என்று நேராகவே பலர் சொல்லியிருக்கின்றனர். பல நிராகரிப்புகளைச்  சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதற்கு முன்பும் சில இடங்களில்  பணியாற்றியிருக்கிறேன். இந்த மனநிறைவு கிடைக்கவில்லை. 

இங்கு உள்ளே நுழைந்ததும் உலகமே மறந்துவிடும். இங்கு வருவோரும் எங்களை வித்யாசமாகப் பார்க்கவோ, பழகவோ  இல்லை. ஆனால் பொது இடங்களில்தான் இன்னும் மக்கள் எங்களோடு சமமாகப் பழகுவதில்லை. வேலைக்கு ஒருநாள்  வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னால் பேருந்தில் உள்ள பலகையைப் படிக்க முடியாது.  எனவே, அருகில் இருந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம் "24-ஆம் எண் பேருந்து வந்தா கொஞ்சம் சொல்லுங்க, எனக்கு  கண்ணில் பிரச்னை' என்றேன். அவ்வளவுதான் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். 

அடுத்து ஒரு கல்லூரி மாணவியிடம் கேட்டேன், அவரும் பதில் கூட சொல்லாமல் நகர்ந்துவிட்டார். எங்களைப்  போன்றவர்கள் முன்னேறிவிட்டோம், ஆனால் சமுதாயம் இன்னும் முன்னேற வேண்டும்'' என்றார்.

அடுத்து செல்வி பேசினார், "எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவர் ஆட்டோ ஓட்டுவராகப்  பணியாற்றுகிறார். எனக்கு தீக்காயம் ஏற்படுவதற்கு முன்பு டெலி காலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தச்  சம்பவத்துக்குப் பின்பு வெளியே வரவே அசெüகரியமாக உணர்ந்தேன். பேருந்தில் பயணிக்கும் என் கையின் அருகில்  கையை வைக்கக்கூட சிலர் விரும்ப மாட்டார்கள். நான் எங்காவது நின்று கொண்டிருந்தால் என் முகத்தையை திரும்பிப்  திரும்பிப் பார்ப்பார்கள். அந்த நேரங்களில் என் கணவர் தான் என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். "யாரும் பார்க்கிறார்கள் என்பதற்காக முகத்தை மறைத்து துணியைக் கட்டுவது, மறைத்துக் கொண்டு நடப்பது எல்லாம் கூடாது.  நீ நீயாக இரு' என்பார். 

இங்கு முதலில் வந்ததும் சற்றும் அறிமுகம் இல்லாத உணவுகளின் பெயர்களைக் கூட உச்சரிக்கத்  தெரியவில்லை. ஆனால் பயிற்சி முடித்ததும் சகஜமாகிவிட்டது. பயிற்சிக் காலத்தை முடித்து இப்போது சந்தோஷமாக வேலை பார்த்து வருகிறேன்'' என்றார். 

இதே போன்று அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிக்கதை. ஆனால் இவர்களின்  ஒட்டுமொத்தக் குரலும், எந்தப் பிரச்னை வந்தாலும் பெண்கள் தவறான முடிவை எடுக்கக் கூடாது என்பதாகத் தான் இருக்கிறது. 

இதில் கிடைக்கும் லாபம் அனைத்துமே இந்தப் பெண்களுக்காக பணியாற்றி வரும் பிசிவிசி அறக்கட்டளைக்கே  அளிக்கப்படுகிறது. இதே போன்ற கஃபே ஒன்றை சென்னை தரமணியில் தொடங்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது என்று கொசுறு செய்தியாகத் தெரிவித்தார் சாரதா. 

ரே பிராட்பரி எழுதிய "ஃபாரன்ஹீட் 451' நாவலில் புத்தகங்களைத் தேடி  தேடி தீயால் அழிப்பார்கள்.    ஆனால் தீயால் உருமாற்றத்தை  அடைந்த இந்தப் பெண்களோ புத்தகங்களைக் காப்பாற்றி 
வருகின்றனர். வாழு! வாழ விடு!
- ஜெனி
படம் : ஏ.எஸ். கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com