அம்மா! - இந்துமதி

உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்தானம் தாய் எனும் ஸ்தானம். அமெரிக்க ஜனாதிபதியானால் கூட தாய்க்குக்  கட்டுப்பட்டவர்தான்.
அம்மா! - இந்துமதி

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர் இது. எழுத்தாளர் இந்துமதி இத்தொடரைத் தனது தாயார்  அமிர்தவல்லி குறித்து எழுதி, தொடங்கி வைக்கிறார்.
உலகில் கெட்ட பிள்ளைகள்
இருக்கக் கூடும். ஆனால்
கெட்ட தாய் இருக்க முடியாது
 - ஆதிசங்கரர்

ஒவ்வொரு வீட்டிலும் கடவுள்
இருக்க முடியாது. அதற்குப்
பதிலாகத்தான் தாய் இருக்கிறாள்
- ஷீரடி சாய் பாபா

உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்தானம் தாய் எனும் ஸ்தானம். அமெரிக்க ஜனாதிபதியானால் கூட தாய்க்குக்  கட்டுப்பட்டவர்தான். மனிதர்களுக்கு மட்டுமின்றி ஈ, எறும்பு என எண்ணாயிரம் ஜாதிக்கும் தாய் உண்டு. பூனைத் தன்  குட்டியை வாயால் கவ்விக் கொண்டு செல்லும். குரங்கு குட்டி தாயை இறுகப் பற்றிக் கொள்ளும். கங்காரு தன் குட்டியை  மடியிலே ஏந்திக் கொள்ளும்.
 என் தாயார் பெயர் அமிர்தவல்லி. அவரும் எங்களைப் பூனை மாதிரி, குரங்கு மாதிரி, கங்காரு மாதிரிதான் வளர்த்தார்.  இத்தனைக்கும் நாங்கள் 5 பேர். எங்கள் ஐந்து பேரையும் ஒரே சீராக வளர்த்தார். ஒன்று போல பாவித்தார். எனக்கும் என்  தம்பிக்கும் ஒரு வயது வித்தியாசம். தம்பிக்குப் பின் இரு குழந்தைகள் ரவி, ரமேஷ். இருவரும் மரித்துப் போயினர்.  அதற்கு அடுத்து விஜயகுமார். பின்பு மாலினி, கடைசித் தங்கை தான் இந்துமதி (அவள் பெயரில் தான் நான்  எழுதுகிறேன்). 
 எல்லாத் தாய்மார்களைப் போலவே என் தாயும் மிகுந்த அன்பானவர். அதைவிட அதி அழகானவர். இன்று படுத்த  படுக்கையாக இருக்கும் 87 வயதிலும் முகம் சந்திர பிம்பம் தான். அத்தனைக் களையானவர். தலையை முடிந்து  கொண்டால் பின் கழுத்தில் மட்டைத் தேங்காய் அளவு நிற்கும், விரித்துப் போட்டால் முழு முதுகும் மறைக்கும் முடி.  பின்னித் தொங்கவிட்டால் கால் முட்டி தொடும். அம்மாவின் அழகு, கவர்ச்சிகரமான அழகோ, மருட்டுகிற அழகோ  இல்லை; கவிதை மயமான அழகு. ரவி வர்மாவின் படத்தில் காணப்படும் தெய்வீகமான அழகு. 
 அம்மா பெரிய மிராசுதார் குடும்பத்திலிருந்து வந்தவர். 860 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பம். அம்மாவின் ஊர்  திருவண்ணாமலை மாவட்டம் மேல் நர்மா கிராமம். வந்தவாசியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் போகும்  வழியில் உள்ளது. மேல் நர்மா கிராமம் தாத்தாவின் ஏகபோக ஜமீன். அம்மாவின் தந்தை பெயர் லஷ்மி நரசிம்மன்.  அம்மா பெயர் ராஜம்மாள். தாத்தா லஷ்மி நரசிம்மன் பிறந்ததில் இருந்து கழுத்தில் மரகத கண்டி போட்டிருந்தாராம்.  அதனால் அவரை "கண்டி' "கண்டி' என்றே அழைப்பார்கள். பாட்டி ராஜம்மா, பக்கத்து ஊரான மடத்தாங்கல் என்ற கிராமத்து  ஜமீன்தாரின் மகள்.
 தெருவின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை இரண்டு கட்டு வீடு. தானியங்களும், நெற்குதிர்களும் நிறைந்த  வீடு. திரும்பிய பக்கமெல்லாம் வேலையாட்கள். எண்ணெய் தேய்த்துவிட மீனாட்சி என்றால், குளித்து விட காமாட்சி  என ராஜபோகமாக வாழ்ந்தவர். அம்மாவுக்குத் திருமணமானபோது பதினைந்து வயது. மூன்று நாத்தனார்கள். மாமியார்.  மாமியாருக்கு மாமியார், பெரியப்பா, பெரியம்மா. அவர்களின் இரண்டு பையன்கள், ஒரு பையன் என பெரிய குடும்பத்தில்  வாழ்க்கைப்பட்டவர். கிராமத்திலிருந்து சென்னை வந்தவர். அத்தனைப் பெரிய வீட்டில் ஆட்களும் படையுமாக வாழ்ந்த  அம்மா, புகுந்த வீடு வந்து மிகவும் திணறிப் போனார். சென்னை ஜார்ஜ் டவுன் கிருஷ்ணப்ப நாயக்கன் அக்ரகாரத்து  வீடும் பெரிதுதான். ஆனால் அம்மாவின் வீட்டோடு ஒப்பிட்டால் குருவிக் கூடு.
 பதினைந்து வயதுப் பெண், பாவாடை தாவணியோடு இருந்தவர். புடவைக் கட்டி பெரிய குடும்பத்தை நிர்வகிக்க  வேண்டும் என்பதால் மிகவும் தடுமாறிப் போனார். கிராமத்தில் அம்மா சமையல் கட்டு பக்கம் எட்டிக்கூடப்  பார்த்தவரில்லை. அப்படிப்பட்டவர் பத்து பேருக்கு சமைத்தார். மூன்று நாத்தனார்கள். கடைசி நாத்தனாருக்கு அம்மா  வந்தபோது எட்டு வயது.
 அந்த எட்டு வயதுப் பெண் பெரிதாகி, பதினைந்து, பதினாறு வயதை அடைந்ததும் இரு நாத்தனார்களுக்கும் சேர்ந்தே  திருமணம். அதற்குள் குடும்பம் ஜார்ஜ் டவுனிலிருந்து மயிலாப்பூர் எட்வர்ட் எலியட்ஸ் சாலை, ஜம்புலிங்கம் முதலியார்  சாலைக்கு குடிபெயர்ந்தது. அப்பா, அங்கு 4 1/2 கிரவுண்ட் நிலம் வாங்கி வீடு கட்டினார். நாங்கள் வளர்ந்ததெல்லாம் அந்த  வீட்டில்தான். 
 என் அம்மா சமைக்க ஆரம்பித்தால் தெருவே மணக்கும். ஐயங்கார் சமையலில் அம்மா "எக்ஸ்பர்ட்'. வெந்தயக் குழம்பு,  அடை, அரிசி உப்புமா, தவலை தோசை, மோர்க்களி இவையெல்லாம் அம்மாவின் ஸ்பெஷல். அவர் புளியோதரைச்  செய்தால் பத்து நாள்களானாலும் கெடவே கெடாது.
 மிகவும் கண்டிப்பான எனது அப்பா, மாமியார், பெரிய மாமியார், பெரியப்பா, நாத்தனார்கள், மச்சினர்கள் என ஒரு பெரிய  குடும்பத்தைக் கட்டி ஆள்வதிலேயே அம்மாவின் வாழ்நாளின் பெரும் பங்கு வீணாய் போயிற்று. அம்மா அப்பாவோடு  தனியாய் வெளியில் போனவரில்லை; வெளியூர் சென்றவரில்லை. தனியாக ஒரு புடவை வாங்கி உடுத்தியவரில்லை.  முதலில் அப்பாவின் குடும்பத்தையும், பின் தன் குடும்பத்தையும் நிலைக்குக் கொண்டு வருவதிலேயே அவரின்  பெரும்பான்மை வாழ்க்கையும் செலவழிந்தது, செலவழித்தார். ஒரு முணுமுணுப்போ, முகச்சுளிப்போ இன்றி  இத்தனையும் செய்தவர் அம்மா.
 அப்பாவிடம் மிகவும் கஷ்டப்பட்டவர். ஒரு சின்ன தவறுக்குக் கூட கடுமையான தண்டனை தரும் அப்பாவிடமிருந்து  எங்களைக் காப்பாற்றியதெல்லாம் அம்மாதான். பாதி அடிகளைத் தன் முதுகில் வாங்கிக் கொண்டவர். நான்  எழுதியதற்கும், இவ்வளவு புகழ் பெற்றதற்கும் காரணம் அம்மாதான். என் தம்பி இன்று பெரிய தொழிலதிபராக,  கோடீஸ்வரனாகத் திகழ்வதற்கும் அம்மா தான் காரணம். தங்கைகளை வளர்த்ததற்கும், அவர்கள் இன்று நியூஸிலாந்தில்  இருப்பதற்கும், கடைசித் தங்கை விவாகரத்து பெற்று பெண் கைக் குழந்தையோடு வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்று  அந்தப் பெண் குழந்தை எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு படிப்பதற்கும் அம்மாவே காரணம்.
 அப்பாவின் கோபத்திலிருந்து எங்களைக் காப்பாற்ற அம்மா விதவிதமாக சமாளிப்பார். எழுத ஆரம்பித்த சமயத்தில்  நிறைய பேட்டிகளும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது பாலச்சந்தரின்  "அரங்கேற்றம்' திரைப்படம்  வெளிவந்த சமயம். அதைப் பற்றிய உரையாடலில் கலந்து கொள்ளும்படி என்னை அழைத்திருந்தனர். இரவு 7 மணிக்கு  ஆரம்பித்த நிகழ்ச்சி முடிய 11 மணி ஆகிவிட்டது.
 இரவு 11 மணிக்கு மேல் வீட்டுக்குப் போனால் அப்பா என்ன சொல்லப் போகிறாராரோ என்ற பயம். எதைக்கொண்டு  அடிக்கப் போகிறாரோ என்று நினைத்து உடல் நடுங்கிற்று. ஆனால் நான் வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா மடமடவென்று  பேச ஆரம்பித்துவிட்டார்.
 "ஃபிரெண்டோட தங்கைப் பெரிசான ஃபங்ஷனுக்குப் போனமா, வந்தமான்னு இல்லாம இப்படியா 11 மணி வரை  
இருக்கிறது? சாப்டியா இல்லையா?''
 "சாப்டாச்சும்மா''
"யார் கொண்டு வந்து விட்டாங்க?''
 "அவங்களே கார்ல அனுப்பிட்டாங்க''
"இனிமே இந்த மாதிரி நேரமானா எந்த ஃபங்ஷனுக்கும் நீ போக வேணாம்''
 "சரிம்மா''
 "படுத்துக்கோ...போ!''
 அப்பாவின் கோபத்துக்கு நான் ஆளாகாமல் அந்தச் சூழலை மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்தார் அம்மா. எவ்வளவோ  சமாளிப்புகள்!
  எங்கள் அத்தனைப் பேரையும் உயிரைக் கொடுத்து வளர்த்தார். சமையற் கட்டு தவிர வேறெதுவும் அறியாதவர்.  இத்தனைக்கும் அம்மா நன்கு படித்தவர். கிராமத்தில் வீட்டுக்கே ஆசிரியரை வரவழைத்துப் படிப்பு கற்றுக் கொண்டவர்.  மிகச் சரளமாக ஆங்கிலம் பேசுவார். ஒரு வரி
விடாமல் "தி ஹிந்து' நாளிதழைப் படிப்பார். சிவாஜி கணேசன், பத்மினியின்  ரசிகை. திரைப்படங்கள், கதைகள் பற்றி நன்கு விவாதிப்பார்.
 அத்தனை வேலைகள் செய்த அம்மா, கிட்டத்தட்ட பத்துப் பதினோரு பேரை வளர்த்தவர் இன்று படுத்த படுக்கையாகக்  கிடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வாழ்நாள் முழுதும் கஷ்டங்களையே அனுபவித்த அவர், இப்போதும்  கஷ்டத்தையே அனுபவிப்பது வேதனை அளிக்கிறது. இறைவனின் விருப்பம் அதுவாக இருந்தால் என்ன செய்வது?  ஆண்டவன் 
கட்டளையை யாரால் மீற முடியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com