போர்க்கப்பல்களைக்  கண்காணிக்கும் வீராங்கனைகள்

இந்திய விமானப்படையில் சென்ற மாதம்தான் மூன்று பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்க அனுமதித்துள்ளனர்.
போர்க்கப்பல்களைக்  கண்காணிக்கும் வீராங்கனைகள்

இந்திய விமானப்படையில் சென்ற மாதம்தான் மூன்று பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்க அனுமதித்துள்ளனர். அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோஹனா சிங் என்ற மூன்று பெண்களும் ஓராண்டு கடினப் பயிற்சிக்குப் பிறகு போர் விமானத்தை இயக்கும் விமானிகளாக்கியிருக்கின்றனர். "ஆண் போர் விமானிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல இந்த மூன்று பெண் விமானிகள்' என்று இந்திய விமானப்படைத் தளபதி இவர்களை பாராட்டியிருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் இந்த மூன்று பெண்களும் முழு நேர போர் விமானிகளாவார்கள்.
 இந்திய விமானப்படை பெண்களைப் போருக்குத் தயார் செய்யும்போது, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கப்பல்படை நினைத்ததோ என்னவோ 20 கடல் படை வீராங்கனைகளைக் கண்டெடுத்து சீன போர்க் கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்களைத் தீவிரமாகக் கண்காணிக்க நியமித்துள்ளது. இந்தப் பெண்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் திறமை வாய்ந்த விமானத்தில் பறந்து கண்காணிப்பார்கள். 
 இந்தக் கண்காணிப்புக்குப் பயன்படும் "பொசிடியன் - 8'  என்னும் கப்பல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் செலவில் எட்டு விமானங்கள் சென்னையை அடுத்த அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் நான்கு விமானங்கள் வர உள்ளன. 
 இன்னொரு ரஷ்ய விமானத்தில் 30 பெண்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானங்கள் 250 கி.மீ. தூரத்தில் கடலின் உள்ளே பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பலைக்கூட கண்டு பிடித்து அழிக்கக்கூடிய திறன் பெற்றது. ஆனால் இந்த ரஷ்ய விமானம், அமெரிக்க விமானத்தைவிட திறன் குறைவானதுதான். இந்தப் போர் விமானங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க வல்ல  ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதே சமயம் எதிரியின் கப்பல்களில் இருக்கும் பீரங்கிகள் இவர்கள் பறக்கும் விமானத்தை வீழ்த்தும் அபாயமும் உள்ளது. இந்த அபாய சூழ்நிலையில் சுமார் 50 வீராங்கனைகள் இந்திய மண்ணின் பாதுகாப்புக்காக கடல் மேல் பறந்து கண் மூடாமல் கண்காணித்து வருகின்றனர்.
"சமீபத்தில் 26 இந்திய வீரர்களுடன் காணாமல் போன எம்வி எமரால்டு கப்பலைப் பெண் குழு ஒன்றுதான் கண்டுபிடித்தது. 16 போர் வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பத்து பேர் சம்பவ இடத்தில் இறந்து போயிருக்கலாம். இந்த ரோந்து மற்றும் போர் விமானங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் பெண்களே. அவர்களால் எந்தச் சவால்களையும் சந்திக்க முடியும்'' என்கிறார் இந்திய கப்பல்படைத் துணைத் தளபதி சாவ்லா.  
 இந்திய சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அதிநவீன கண்காணிப்பு இந்தியாவுக்கு வெகு அவசியமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கண்காணிப்புப் பணியை 50 வீராங்கனைகள் ஏற்றிருக்கின்றனர் என்பது இந்தியப் பெண்களுக்குப் பெருமை தரும் விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  
- கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com