வெற்றி ஒரு தொடக்கம்தான் - இந்திய பெண்கள் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்

சென்ற மாதம் டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி மலேசிய அணியைத்  தோற்கடித்து சாம்பியனாகியது.
வெற்றி ஒரு தொடக்கம்தான் - இந்திய பெண்கள் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்

சென்ற மாதம் டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி மலேசிய அணியைத்  தோற்கடித்து சாம்பியனாகியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு  வெற்றி கிடைத்துள்ளதால், இந்திய ஹாக்கி ஆர்வலர்கள்  இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வெற்றிக்கு கிரீடம் வைப்பது போல இந்தியப் பெண்கள் அணியும்  ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.  
 பெண்கள் அணி தோற்கடித்திருப்பது சீன அணியை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பதிமூன்று ஆண்டுகள்  கழித்து தற்போதுதான் பெண்கள் ஹாக்கி அணி தங்கக் கோப்பையைப் பெற்று பெருமையுடன் தாயகம் திரும்பி உள்ளது.  கடந்த ஆண்டு நடந்த "ஆசிய சாம்பியன்ஸ்' கோப்பைக்கான ஹாக்கி போட்டியிலும் சீன அணியை இந்திய பெண்கள்   அணி வென்றது. அந்தப் போட்டியை விட முக்கியத்துவம் வாய்ந்த ஆசியக் கோப்பைக்கான போட்டியில் வென்றது   இந்தியப் பெண்கள் அணிக்கு அதிகப் புகழையும் முக்கியத்துவத்தையும் அளித்துள்ளது.
 வெற்றிக்கான காரணங்களை கேப்டன் ராணி ராம்பால் விவரிக்கிறார்:
 "நிச்சயமாக இந்த வெற்றி மிகவும் பேசப்பட வேண்டிய ஒன்றுதான். இந்தப் போட்டியில்  நமது அணி  பல நிலைகளில்  பல நாடுகளின் அணியுடன் மோதினாலும், எந்த ஆட்டத்திலும் எந்த அணியிடமும் தோற்காமல், கடைசிவரைத் தனித்து   நின்றோம். இது குறிப்பிட வேண்டிய முத்திரை விஷயம். அனைத்து ஆட்டக்காரர்களும் வெற்றியை மட்டுமே இலக்காக  வைத்து விளையாடினோம். அந்த ஒற்றுமைதான் வெற்றி கோப்பையை ஏந்தி நாடு திரும்ப உதவியது.  
 திறமையான சீன அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது மிக முக்கியத் தருணம். மனதுக்குள் கவலை,  கலவரம் இருந்தது உண்மைதான். ஆட்டம் முடியும் வரை ஒரே திக்... திக்...  ஒவ்வொரு நொடியும் மிகப் பதட்டமாக  கழிந்தது. முத்தாய்ப்பாக அந்தத் தருணம் வந்தது. அதிர்ஷ்டவசமாக "பெனால்ட்டி ஷூட் அவுட்' கிடைத்தது. கிடைத்த  வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்டோம். ஐந்துக்கு நான்கு என்ற கோல் கணக்கில் சீன அணியை  வென்றோம். எல்லா ஆட்டத்திலும் பதட்டத்துக்கு இரையாகாமல் எப்படி ஆட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோமோ  அதிலிருந்து சற்றும் விலகாமல் ஆடினோம். முடிவு எப்படி  அமைந்தாலும் சரி...கட்டுக்கோப்பான விளையாட்டை விட்டு  விலகக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். 
இந்த ஆண்டுதான் முதல் முறையாக, இந்திய ஹாக்கியின் ஆண்,  பெண்  அணிகள் ஒரே  விளையாட்டில் ஒரே ஆண்டில் சாம்பியனாகியிருக்கிறோம்.  ஹாக்கி விளையாட்டைப்  பொறுத்தவரை இது ஓர் அபூர்வ பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்கள் அணியின் வெற்றி எங்களுக்கு  ஊக்கத்தைக் கொடுத்தது. நாமும் ஆண்கள் அணியைப் போல் சாதிக்க  வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்ற முனைப்பை உள்ளில் பாய்ச்சியது. இதே  உணர்வுகளைப் பாதுகாத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில், உலகக்  கோப்பைக்கானப்  போட்டியில் வெளிக் கொண்டு வர வேண்டும். கடினமான பயிற்சி மூலம் எங்கள் திறமை, நம்பிக்கைகளை வளர்த்துக்  கொள்வோம். 
 இந்த வெற்றிக்குப் பிறகு நாங்கள் இந்தியா வந்து சேரு முன் சமூக வலைதளங்களில், பிரதமர் மோடி, சச்சின் மற்றும்   ஹாக்கி ஆர்வலர்கள் எனப் பலரிடம் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்துவிட்டன. 
ஆனால் நாங்கள் சீன அணியுடன்  போராடியதையம், வேறு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்றதையும் எந்த இந்திய டிவி சானல்களும் ஒளிபரப்பாதது  வருத்தம். இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இந்த வெற்றி  பெண்களை அதிகம் ஹாக்கி விளையாடத் தூண்டும்  தூண்டுகோலாக அமையும்'' என்று சொல்லும் ராணி ராம்பால் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருபத்து மூன்று  வயதாகிறது.  
 "இந்திய விளையாட்டு வாரியத்தில் நான் பணிபுரிகிறேன். அதனால் எனது எதிர்காலம் பற்றி கவலை இல்லை. ஆனால்  என் சக ஹாக்கி விளையாட்டு தோழிகளுக்கு அரசு வேலை இல்லை. அதே சமயம் ஆண் வீரர்களுக்கு பல்வேறு  அரசு  வேலைகள் கிடைத்துவிடுகின்றன. வீராங்கனைகளைப் பொறுத்தமட்டில் பால் வேறுபாடுகள், பாகுபாடுகள்  குறுக்கிடுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வீராங்கனைகளுக்கும் வேலை கொடுத்தால் அவர்களும்  எதிர்காலம் குறித்த பயமின்றி விளையாட்டில் கவனம் செலுத்த முடியும்'' என்கிறார் ராணி ராம்பால்.
- பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com