ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு! - மைதிலி ராவ்

காலம் சென்ற நடிகை ஸ்மிதா பாட்டீலை நேரில் சந்திக்காமலேயே அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள்  மூலம் கேட்டறிந்த தகவல்களை வைத்தே, அவரின் வாழ்க்கை வரலாற்றை
ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு! - மைதிலி ராவ்

காலம் சென்ற நடிகை ஸ்மிதா பாட்டீலை நேரில் சந்திக்காமலேயே அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள்  மூலம் கேட்டறிந்த தகவல்களை வைத்தே, அவரின் வாழ்க்கை வரலாற்றை   சினிமா    விமர்சகரான மைதிலிராவ்  "ஸ்மிதா பாட்டீல்,  எ ப்ரீஃப் இன்கேன்டெஸ்சென்ஸ்' என்ற பெயரில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் எப்படி எழுதப்பட்டதென்பதை மைதிலி ராவ் விளக்குகிறார்:
"ஸ்மிதா பாட்டீல் நடித்த திரைப்படங்களில் அவரது நடிப்புத் திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர் மற்ற  நடிகர்களைப் போல் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து படித்து திரையுலகத்துக்கு வந்தவர் இல்லை. இந்திய திரையுலகத்துடன்  நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த அவரது நடிப்புத் திறமை, கடின உழைப்பு குறித்து இதுவரை யாரும் எழுதவில்லை.  அப்போது தான் "அவரைப் பற்றி எழுதுங்கள்' என்ற வேண்கோளுடன் பதிப்பாளர் ஒருவர் என்னை அணுகினார்.
 ஸ்மிதா பாட்டீலைப் பொறுத்தவரை நடிப்பைத் தீவிரமாகக் கருதியதோடு பெண் உரிமைக்காகப் போராட வேண்டுமென்ற  உணர்வும் அவரிடம் இருந்தது. அவரை நேரில் சந்தித்ததில்லை என்பதால் அவரது குடும்பத்தினர், நண்பர்கள்,  பத்திரிகையாளர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரித்தேன். 
அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே "சீரியஸ் ரோல்' என்பதால் அவர் குணத்திலும் அப்படித்தானோ என்று பலர்  நினைத்ததுண்டு. ஆனால் உண்மையில் அவர் நகைச்சுவை உணர்வும், துணிச்சலும் கொண்டவர். கார் ஓட்டுவதில்  அலாதி பிரியம். ஒருமுறை நண்பர்களுடன் மும்பையிலிருந்து தில்லிக்கு ஜீப் ஒட்டிச் சென்றது, அவரது தமக்கையைத்  தவிர வேறு யாருக்கும் தெரியாது. பைக் ஓட்ட ஆசைப்பட்ட அவருக்கு மேல்நாட்டு உடைகள் மிகவும் பிடிக்கும்.
 இது ஒரு வழக்கமான வரலாறு இல்லை. அவரது நடிப்புத் திறமைக்காக முன்னுரிமை கொடுத்து எழுதப்பட்டது.  தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஸ்மிதாவை அடையாளம் கண்ட இயக்குநர்கள், தங்கள் படங்களில்  கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவரை எப்படி பயன்படுத்தினர் என்பதை இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன். அவரது தனிப்பட்ட  வாழ்க்கை, வதந்திகளைப் பற்றி ஏதும் எழுதவில்லை. அவருடன் பல படங்களில் நடித்த ராஜ் பப்பரைத் தொடர்பு  கொண்டபோது என்னுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். பத்தாண்டுக்கு முன் ஸ்மிதா பாட்டீல்  பற்றிய சிறிய புத்தகமொன்றை எழுதியபோது இது அவரது திறமைக்கு தரும் முறையான அங்கீகாரம் அல்ல என்று  கருதியே, விரிவான புத்தகத்தை  எழுதத் தொடங்கினேன்.
 கமர்ஷியல் சினிமாவுக்கு எதிராக கலைப்படங்களில் ஷபனா ஆஸ்மி, நஸ்ருதீன் ஷா போன்றோர் நடிக்கத்  தொடங்கியபோது, ஸ்மிதா பாட்டீலை பலரும் அணுகத் தொடங்கினர். முதலில் மறுத்தவர் பின்னர் ஷியாம் பெனகல்  அழைப்பை ஏற்று நடித்தார். கமர்சியல் மற்றும் கலைப்படங்கள் இரண்டுக்குமே தான் பொருத்தமானவர் என்பதை  நிரூபித்துக் காட்டினார். கலைப்படங்களாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தியது இவரது நடிப்புத் திறமைக்குக் கிடைத்த  வெற்றி. கமர்ஷியல் படங்களில் கிடைக்கும் ஊதியத்தைவிட கலைப்படங்களில் ஊதியம் குறைவு என்றாலும், இரண்டு  வகையான படங்களிலும் விருப்பத்துடன் நடித்தார் என்பதே உண்மை.
 அமிதாப் பச்சனுடன் " நமக்ஹலால்' படத்தில் நடித்தபோது, மழையில் நனைந்தபடி ஆடும் நடனக் காட்சியில் நடனமாட  ஸ்மிதா மிகவும் சிரமப்பட்டதாகவும், அவரது பாணியிலேயே நடனமாடி காட்சியை நிறைவு செய்ததாகவும் அமிதாப்  குறிப்பிட்டார். இதன் பின்னர் பல படங்களில் நடனக் காட்சிகளில் நடிப்பதை ஸ்மிதா தவிர்த்துவிட்டாராம். நஸ்ருதின்  ஷா, ஓம்புரி ஆகியோருடன் நடித்தப் படங்கள் மட்டுமின்றி ஆக்ரோஷ், பூமிகா, மிர்ணால் 
சென்னின்,  "ஆகலே சந்தானே'  (வங்காளம்), "அன்வெஷ்கா' (கன்னடம்). "சிதம்பரம்' (தமிழ்) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
 ஸ்மிதா பாட்டீல் மிகவும் எளிமையானவர். சைவ உணவை விரும்பிச் சாப்பிடுபவர் என்பதால் மராட்டிய உணவான  அரிசி சாதம், பருப்பு மிகவும் பிடிக்கும். ஒருமுறை படப்பிடிப்புக்காக கொல்கத்தா அருகில் கிராமமொன்றுக்கு  சென்றிருந்தபோது, வங்களாத்தைச் சேர்ந்தவர்கள் மீன் இல்லாமல் சமையலே செய்வது இல்லை என்பதால், அவரே  உணவைத் தயாரித்து சாப்பிட்டதுண்டு. இதே போன்று திரைப்பட விழாவுக்காக தன் சகோதரியுடன் பாரிஸ்  சென்றிருந்தபோது, வெறும் ரொட்டியைச் சாப்பிட்டே உணவு பிரச்னையைச் சமாளித்துள்ளார். மழையில்  நனைவதென்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். பந்த்ராவில் ஜோகர்ஸ் பார்க் எதிரில் பிளாட் ஒன்றை வாங்கினார்.  அதைக் கட்டி முடிப்பதற்குள் மரணமடைந்தது எதிர்பாராத சம்பவமாகும் என்றார் மைதிலி ராவ். 
-பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com