அம்மா

அம்மாவைப் பற்றிச் சொல்லவேண்டுமாம், என்ன சொல்ல...?சின்னஞ்சிறு வயதில், எழுத்துக்களோ வரி வடிவமோ தெரியாத வயதில், விடிகாலை நேரத்தில், தூக்கத்திலிருந்து எழுப்பிப் படுக்கையிலேயே உட்கார
அம்மா

அம்மாவைப் பற்றிச் சொல்லவேண்டுமாம், என்ன சொல்ல...?
சின்னஞ்சிறு வயதில், எழுத்துக்களோ வரி வடிவமோ தெரியாத வயதில், விடிகாலை நேரத்தில், தூக்கத்திலிருந்து எழுப்பிப் படுக்கையிலேயே உட்கார வைத்து, அம்மாவும் அப்பாவும் திருக்குறள் சொல்லிக் கொடுப்பார்கள். 
அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி, என் அம்மா சாரதா அடிக்கடி சொல்லும்

குறள்: 

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் 
பெருமை யுடைத்துஇவ் வுலகு 

(இப்போதும்கூட, புத்தகத்தில் இதன் வடிவம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது; அம்மாவின் குரல் வடிவம்தான் மனத்தில் நிற்கிறது.) இரவு 11 மணிக்கு எழுந்து வந்து, "காத்தால சீக்கிரமா மோட்டார் போட்டுடு. சீக்கிரமா கிளம்பிடு' என்று சொன்ன அம்மா, இரவு 12.20 போல "என்னமோ செய்கிறது' என்று முனகிவிட்டு 5 - 10 நிமிடங்களில் இல்லாமல் போனபோது தான், இந்தக் குறளின் ஆழம் புரிந்தது. 
அம்மாவைப் பற்றி... என்ன சொல்ல...?
சின்ன வயதில், அம்மாவைப் பற்றி இருந்த எண்ணம், அம்மா கண்டிப்புக்காரி. கண்களாலேயே மிரட்டுவாள். தெருவில் விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது போன்றவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டாள். எதிர்த்துப் பேசினாலோ தப்பு செய்தாலோ பிறருக்குத் தெரியாமல் கண்ணை உருட்டுவாள்; "நிமிட்டாம்பழம்' (ஆழமான கிள்ளுக்கு இப்படியொரு கெத்து) கொடுத்து விடுவாள். 
ஆனால், கல்லூரிக் காலங்களில், எங்கு சென்றாலும் அம்மா துணை இருந்திருக்கிறாள். பல்வேறு வகையான பேச்சு - இசை - கட்டுரை - கவிதை - பல்சுவைப் போட்டிகளுக்குப் போன காலத்தில், முகவரி தேடுவதற்கும், போட்டி நடக்கும் இடத்தில் பழி கிடந்து பகலோ இரவோ எந்நேரமானாலும் திரும்ப அழைத்து வருவதற்கும், வேண்டியதை வாங்கித் தருவதற்கும் அம்மா எப்போதும் கூட இருந்திருக்கிறாள். அவளுடைய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, சில சமயங்களில் அவளுடைய மருத்துவப் பணியைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு, கூடவே இருந்திருக்கிறாள். 
அம்மாவைப் பற்றி... என்ன சொல்ல?
அம்மாவின் சில செய்கைகள், ஆரம்பத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. அம்மா அதிகமாகச் செலவழிக்கமாட்டாள். ஆடம்பரமும் கிடையாது. அப்படிப்பட்டவள், தெருவில் புத்தகம் விற்பவர்கள், கம்பளம் விற்பவர்கள் போன்றவர்களையெல்லாம் அழைத்து அந்தந்தப் பொருள்களை வாங்கி வைத்திருப்பாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று - மாலையில் வீட்டுக்குப் போனதும் காட்டுவாள். அதுவும் ஒன்று, இரண்டு என்றல்ல; பத்து செட் குழந்தை நூல்கள், ஐந்து கம்பளங்கள் என்று கூட்டு கூட்டாக இருக்கும். ""எதற்கம்மா இத்தனை? நம்மகிட்ட ஏற்கெனவே இருக்கே?'' என்றால், ""பாவம், வேகாத வெயில்ல வீடு வீடா, கேட் கேட்டா போய் ஏறி இறங்கினான்; அதுதான் வாங்கினேன்'' என்பாள். அன்றைக்கு இரவோ, மறுநாளோ மெல்லச் சொல்லுவாள்: ""நமக்கு வேண்டான்னா, யாருக்கானும் கொடுத்துடு''. 
முதலில் ஓரிரு முறை புரியவில்லை. பகுதி நேர வேலை செய்யும் இளைஞர்கள், கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காகப் புத்தகம் விற்பவர்கள் என்று வருபவர்களை நட்போடு அழைத்து, காபி கொடுத்து, விளையாட்டு பேரம் பேசி, அவர்களிடம் பொருள் வாங்கி, அவற்றைப் பின்னர் தொட்டுத் தொட்டு அவள் சிலாகித்தபோது புரிந்தது; வீட்டுச் செலவில் மிச்சம் பிடித்தும், அவளுக்கென்று கொடுக்கப்பட்ட சொல்ப பணத்தில் மீதம் வைத்தும் அவள் ஏன் அப்படிச் செய்தாள் என்று புரிந்தது. 
தன்னுடைய சின்ன வயதில் (பூர்வீகம்: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர்) சூழ்ந்திருந்த வறுமைக்கும், தடைபட்ட கல்விக்கும், தேர்வுக் கட்டணம் கட்டாமல் குடும்ப உறுப்பினர் கைவிட்டபோது அதைக் கட்டிய ஆசிரியருக்கும் அவள் செலுத்திய நன்றிக் கடன் என்று புரிந்தது. 
அம்மா நல்ல படிப்பாளி, அறிவாளி. ஆரம்பப் பிராயத்தில் கல்வி தடைபட்டாலும், பின்னர் நெடுந்தூரம் பள்ளிக்குப் பயணப்பட்டும், தடங்கல்களைத் தாண்டியும் படித்தவள். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், நாகபுரி பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தாள். முயற்சியை விட்டுவிடாமல், சித்த மருத்துவம் படித்தாள். திருமணத்திற்குப் பின்னர், டி.எம். & எஸ். படித்து எம்.பி.பி.எஸ்.ஸýம் படித்தாள். எத்தகைய கடினமான பிரசவமாக இருந்தாலும், தன்னந்தனியாக வெற்றிகரமாக நடத்திவிடுவாள். ஆயுதம் போட்டுக் (ஃபார்செப்ஸ்) குழந்தையை எடுக்க வேண்டும் என்றாலும் தனியாகவும் திறமையாகவும் செய்வாள். 
அம்மாவைப் பற்றி... என்ன சொல்ல?
தாத்தா (அம்மாவின் அப்பா) கற்றுக் கொடுத்த ஷேக்ஸ்பியரையும் வர்ட்ஸ்வொர்த்தையும் ஷெல்லியையும் கீட்ûஸயும், அம்மாவும் பெரியம்மாவும் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்கள். எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதற்கு அடிக்கடி அம்மா கூறும் அறிவுரை, ஷேக்ஸ்பியரின் "ஹேம்லெட்'டில், போலோனியஸ் தனது மகன் லெயர்டீஸýக்குக் கூறும் அறிவுரைதான்: ""காஸ்ட்லி ஆஸ் தை பர்ஸ் கேன் பை, பட் நாட் எக்ஸ்பிரெஸ்ட் இன் ஃபேன்ஸி; ரிச், நாட் காடி''. உள்ளுக்குள் ஊறிப்போன இது, ஒவ்வொரு நாளும் காதில் ஒலிக்கிறது. 
"நெருநல் உளன் ஒருவன்' குறளைச் சொல்லிவிட்டு, பால் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்ட கசடைக் கீறிக்கொண்டே, ""டெத் லேஸ் ஹிஸ் ஐஸி ஹாண்ட்ஸ் ஆன் கிங்ஸ், ùஸப்டர் அண்ட் க்ரவுன் மஸ்ட் டம்பிள் டவுன்'' என்று ஜேம்ஸ் ஷர்லியின் "டெத் - த லெவலர்' கவிதையைச் சொல்லுவாள். தட்டில் சாதம் பிசைந்து கையில் கொடுத்துக் கொண்டே ""மென் மே கம் அண்ட் மென் மே கோ'' என்று டென்னிசனின் ப்ரூக் ஓடுவதையும், ""அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம்'' என்று பாரி மகளிரையும் நினைவூட்டுவாள். 
அப்பா சில காலம் வெளி மாநிலங்களில் பணியாற்ற வேண்டி வந்தது. அம்மா எனக்காகச் சென்னையில் இருந்தாள். தினமும் அப்பாவுக்குக் கடிதம் எழுதுவாள். அப்பா ஊருக்குப் புறப்படும்போதெல்லாம், எனக்குத் தெரியாமல், முகத்தை மறைத்துக் கொண்டு கண்ணீர் சிந்துவாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏறத்தாழ 17 வயது வித்தியாசம். அப்பா நோய்வாய்ப்பட நேர்ந்தபோது, அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய மருத்துவ பிராக்டீûஸ முழுமையாக நிறுத்தினாள்; அவரோடு இருப்பதற்காகக் கல்யாணம் - காட்சி - வெளியுலக நிகழ்வுகள் அத்தனையும் தவிர்த்தாள். அப்பா காலமான பின்னர், ஆடை அணிகலன்களில் அவள் கவனம் போனதேயில்லை. புடவை வாங்கிக் கொடுத்தால்கூட, ""ஒங்கப்பா வாங்கிக் கொடுத்து நிறைய கட்டிண்டுட்டேன், இனிமே எனக்கெதுக்கு'' என்பாள். 
அம்மா அசாத்திய தைரியசாலி. தன்னந்தனியாளாக ஏழுமலை மேஸ்திரியிடமும் கிருஷ்ணமூர்த்தி ஆசாரியிடமும் நட்போடு அவள் வேலை வாங்கிய விதம்....வீட்டுப் பராமரிப்பு... எனக்கான பொருட்கள்... காலையில் புறப்படும்போது இல்லாமல் மாலையில் நுழையும்போது கண்சிமிட்டும் புது ஊஞ்சல், புதிய தண்ணீர் மோட்டார் போன்றவை... எங்கே பணம் வைத்திருந்தாள்? எப்படி செலவு செய்தாள்? அப்பாவும் அவளும் எப்போது கலந்தாலோசித்தார்கள்?
அம்மாவைப் பற்றி... என்ன சொல்ல? 
பிற்காலங்களில், ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, பிரச்னை வந்தாலோ, அதைப் பற்றிச் சில சமயங்களில் அம்மாவிடம் பேசியிருக்கிறேன். ""பாத்துப் பண்ணு'' என்று மட்டும் சொல்லுவாள். சில மணிநேரம் கழித்தோ மறுநாளோ அவளுடைய அணுகுமுறையில் ஏதோவொரு தீர்வு சொல்லுவாள். அந்தத் தீர்வு ஒத்து வராததாகக் கூட இருக்கும். ஆனால், சிக்கலைச் சந்திப்பதற்கான தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் அவள் குரலில் ஒலிக்கும். 
அம்மாவைப் பற்றி... என்ன சொல்ல? 
அம்மாவுக்குள் இருந்த குழந்தைத்தனம் எனக்குக் குதூகலத்தைக் கொடுத்ததுண்டு. "கொட்டு கொட்'டென்று மழை கொட்டும்போது, அடையாற்றையும் கூவத்தையும் வேடிக்கை பார்ப்பதற்காக இருவரும் செல்வோம்; மெரினாவில் நின்று ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். தொட்டிகளிலும் தரையிலுமாக நான் செடிகள் வளர்த்தால், நான் இல்லாத மதிய நேரங்களில் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் புதிய ஆலோசனைகள் கூறுவாள்; கண்களில் பெருமையோடு கவனிப்பாள். 
அம்மாவின் "டேஸ்ட்' ரொம்பவே "ரிஃபைண்ட்'... மென்மையான வெளிர் வண்ணங்கள், பழங்கால மர மற்றும் உலோகச் சிற்ப ஓவியங்கள், தேக்கு - நூக்க மர அறைகலன்கள்...இவையெல்லாம் அம்மாவுக்குப் பிடிக்கும். 
அம்மாவைப் பற்றி...என்ன சொல்ல?
கடைசிப் பத்தாண்டுகள்...அம்மா இருக்கும் தைரியத்தில் வேலைகளையும் நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு, தாமதமாக வீடு செல்வேன். அவள் தனியாக இருப்பாள்; தனியாகவே எல்லா வேலைகளையும் செய்திருப்பாள்; வீட்டிலிருக்கும் செல்ல நாய்களையும் பார்த்துக் கொண்டிருப்பாள்; தொலைக்காட்சி பார்த்துச் சிரித்து மகிழ்வாள்; வாசல் ஊஞ்சலில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பாள். எங்கேயாவது நீண்ட நேரமோ வெளியூரோ போக வேண்டி வந்தால், ""அம்மா, அவசரத்துக்கு இந்த நம்பருக்கு ஃபோன் செய்'' என்று எழுதி வைத்தால் தெளிவாகச் சொல்வாள்: ""எந்த அவசரமும் வர வேண்டாம். எல்லாம் பகவான் பாத்துப்பார். நீ கவலைப்படாம, இங்க பத்தி நெனக்காம வேலையை முடிச்சுண்டு வா''. 
எங்களூர் கொல்லஞ்சாவடிப் பிள்ளையாரிடம் (குரோம்பேட்டை) அம்மாவுக்கு அலாதி நம்பிக்கை. பெரிய பிரச்னையாக இருந்தாலும் சரி, நாய் ரகு காணாமல் போனாலும் சரி, வீட்டிலிருந்தபடியே அவரிடம் முறையிட்டு விடுவாள். மறுநாளே எல்லாம் சரியாகிவிடும். 
அம்மாவைப் பற்றி... என்ன சொல்ல?
என் பரிசுகளையோ விருதுகளையோ வெற்றிகளையோ அம்மா பெரிதாகக் கொண்டாடியதில்லை. சில சமயங்களில் கண்டு கொண்டதாகக் கூட காட்டியதேயில்லை. ஆனால், அவளுக்கு அவற்றில் அசாத்திய பெருமையுண்டு. அது அவளுடைய சொல்லிலோ அடக்கமான பெருமூச்சிலோ கண்ணோரத்துப் பார்வையிலோ அவ்வப்போது வெளிப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com