சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சாகசம்!

மும்பையைச் சேர்ந்த சினிமா சாகச பெண் ("ஸ்டன்ட் உமன்') கீதா தாண்டன். இவர் பாலிவுட் திரைப்படங்களில் சாகசம் அல்லது சண்டைக் காட்சிகளில் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி
சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சாகசம்!

மும்பையைச் சேர்ந்த சினிமா சாகச பெண் ("ஸ்டன்ட் உமன்') கீதா தாண்டன். இவர் பாலிவுட் திரைப்படங்களில் சாகசம் அல்லது சண்டைக் காட்சிகளில் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு "டூப்'பாக பணியாற்றி வருகிறார். சினிமாவில் மட்டுமல்ல, தன் வாழ்க்கையிலும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி தான் இந்த இடத்துக்கு வர முடிந்தது இவரால். 9 வயதில் தாயை இழந்தவர், 15 வயதில் திருமணம், குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர் என அவர் தாண்டி வந்த இடர்பாடுகள் ஏராளம். அந்த இடர்பாடுகள் தான் தன்னை வெற்றியை நோக்கி வேகமாக உந்தித் தள்ளியது என்கிறார்.
தனது வாழ்க்கை குறித்து அவரே கூறுகிறார்:
""எனக்கு 9 வயதாகும் போது உடல்நலக் குறைவால் என் அம்மா இறந்து போனார். அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு குழந்தைகள். என் அம்மா இறந்ததற்கு பின்னர் வாழ்க்கை திசை மாறத் தொடங்கியது. பத்தாம் வகுப்போடு என் படிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சந்தோஷமாகவே வாழ்க்கையே நகர்த்த நினைத்தேன். எனது வீட்டில் அருகில் உள்ள சிறுவர்களோடு தெருவில் விளையாடுவது வழக்கம். இதனைக் கண்டு எரிச்சலடைந்த உறவினர்கள், என் அப்பாவைச் சம்மதிக்க வைத்து எனக்கு திருமண ஏற்பாடு செய்தனர். 15 வயதில் 24 வயதுள்ள நபருக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தனர்.
திருமண பந்தம் எனக்கு ஒரு வீட்டை, உணவை, நிரந்தரமான அன்பான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிந்தது அந்த பந்தம் எனக்கு நரகத்தையும், சித்ரவதையையும் மட்டுமே கொடுத்தது என்று. இளவயதில் குடும்ப வன்முறைக்கு ஆளானேன். 16 வயதில் கர்ப்பந்தரித்தேன். கர்ப்பக் காலம் என் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அடியும் உதையும் தொடர்ந்ததே தவிர, தீரவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தபோது, வாழ்க்கை இன்னும் மோசமாகியது. எனது குழந்தை பாலுக்கு அழும்போது, என் கணவர் என்னை ஓர் அறையில் வைத்து சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருப்பார். குழந்தையின் அழுகுரல் கேட்டாலும் அவர் அடிப்பதை நிறுத்த மாட்டார். அந்த வீட்டிலிருந்து மூன்று முறை தப்பிக்க முயற்சி செய்தேன், நடக்கவில்லை. போலீஸாரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்களோ வீட்டுப் பிரச்னைகளை வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர்.
குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என் சகோதரி வீட்டில் சென்று வாழ்ந்தேன். அங்கும் எனது கணவர் தனது அராஜகத்தைக் காட்டினார். ஒரு கட்டத்தில் என் சகோதரியையும் அடித்துவிட்டார். இதனால் என் சகோதரியின் கணவருக்கு என்னை வீட்டை விட்டு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. எனது குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியேறினேன். ஆனால் மீண்டும் என் கணவர் வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். 
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் நல்ல வேலை தேடுவது சரியான முடிவாக இருக்காது என்று நினைத்தேன். எனவே, கிடைத்த வேலையை எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். மாதம் ரூ.1,250 சம்பளத்தில் ஓரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 250 ரொட்டிகளை உருட்ட வேண்டும். அதன் பின்பு பங்காரா நடனக் குழுவில் இணைந்தேன். விழாக்கள், திருமணங்களில் நடனக் குழுவின் நிகழ்ச்சிகள் இருந்தால், ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.800 சம்பளம் கிடைக்கும். அந்தக் குழுவில் உள்ள ஒரு பெண் என்னை சினிமாவில் ஸ்டன்ட் உமனாக சேருவதற்கு வழியைக் காட்டினார்.
சினிமாவில் என் முதல் வேலையே தீயினுள் புகுந்து வெளியேறுவது போன்ற காட்சியில் நடிக்க வேண்டும். முதலில் பயந்தேன். இதனை வெற்றிகரமாக முடிந்தால் என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே தீயினுள் பாய்ந்தேன். முகத்தில் தீக்காயங்களோடு வெளியே வந்தேன். அந்த சண்டைக் காட்சிக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள்.
ஒருமுறை சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது ஓர் உயர்ந்த கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. நகர முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது வாடகை கொடுக்க முடியததால், வீட்டு உரிமையாளர் என் குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விட்டார். பின்னர் எப்படியோ முயன்று என் குழந்தைகளை நான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் தங்க வைத்தேன். 
வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்தித்து இப்போது சினிமாவில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளேன். அதிகமான பெண்கள் ஈடுபடாத கார் சாகசக் காட்சிகளிலும் நடித்து வருகிறேன். பாலிவுட் முன்னணி நடிகைகள் அனைவருக்கும் டூப் போட்டிருக்கிறேன்.
இன்று மும்பையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கிக் குடியிருக்கிறேன். என் பிள்ளைகள் (17 மற்றும் 15 வயது) இருவரும் படிப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெண்கள் தங்கள் மன தைரியத்தை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு என் வாழ்க்கைப் பயணமே சான்று. 
எந்த ஆணும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டுமா? வேண்டாமா? என்பதை பெண்களே நீங்களே தீர்மானியுங்கள்'' என்கிறார் கீதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com