பாலியல் அபாயமா?

பாலியல் தொந்தரவுக்கும் பாலியல் வன்முறைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னால் ஆன பங்களிப்பைச் செய்திருக்கிறார் சென்னையில் படித்த பொறியியல் கல்லூரி மாணவி மணிஷா மோகன்.
பாலியல் அபாயமா?

பாலியல் தொந்தரவுக்கும் பாலியல் வன்முறைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னால் ஆன பங்களிப்பைச் செய்திருக்கிறார் சென்னையில் படித்த பொறியியல் கல்லூரி மாணவி மணிஷா மோகன். அதற்காக ஒரு கருவி ஒன்றையும் அவர் கண்டுபிடித்துள்ளார். "Intrepid' என்பது அந்தச் சிறிய கருவியின் பெயர். 
மணிஷா தொடர்கிறார்:
"Intrepid' ஒரு ஸ்டிக்கரைப் போன்றது. இந்தக் கருவியை பெண்கள் தங்கள் உடையுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கருவி செயல்பட ஒரு செல்லிடப்பேசி செயலியுடன் (Application) தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பாலியல் தொந்தரவு செய்யும் விதத்தில் பெண்கள் அணிந்திருக்கும் உடையை முரட்டுத்தனமாக அல்லது வலுக்கட்டாயமாக இழுக்கவோ, அவிழ்க்கவோ, கிழிக்கவோ முற்படும்போது இந்தச் சிறிய கருவி வன்முறை அல்லது அத்துமீறல் நிகழ்கிறது என்று புரிந்து கொள்ளும். 
உடனே அபாய ஒலி செல்லிடப்பேசியில் அலறும். அதே சமயம், செல்லிடப்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து எண்களுக்கும், குறிப்பிட்ட பெண் அபாயத்தில் இருப்பதாகவும், அவர் இருக்கும் இடம் குறித்த விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்; அழைப்பும் போகும்.
அழைப்பை ஏற்பவர்களுக்கு அந்தப் பெண்ணுக்கு என்ன ஆபத்து என்று புரிந்துவிடும். குறுஞ்செய்தி கண்டவரோ, செல்லிடப்பேசி அழைப்பை ஏற்றுக் கொண்டவரோ உடனடி நடவடிக்கையில் இறங்க இந்தக் கருவி உதவும். 
ஒரு அசம்பாவிதம் நடக்கத் தொடங்க வேண்டும் என்று இல்லை, பாலியல் ஆபத்துகள் அல்லது வழிப்பறி நிகழப் போகிறது என்பதைப் பெண்கள் உணர்ந்து கொண்டதும், எச்சரிக்கையாக கருவியில் இருக்கும் உணர்வியைத் (sensor) தொட்டு லேசாக அழுத்தினால் போதும். உடனே எச்சரிக்கை ஒலி அலறத் தொடங்கும், அக்கம்பக்கத்தவரின் கவனங்களை ஈர்க்கும். குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் எண்களுக்கு உடனே செல்லத் தொடங்கும் 
நான் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் பட்டம் பெற்றேன். பொறியியல் பட்டம் பெற்றதும் 2015-ஆம் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கே மஸாசூசட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறேன். அப்போதுதான் இந்தக் கருவியைக் கண்டுபிடித்தேன்.
நான் பிறந்தது பீகாரில், வளர்ந்தது சண்டிகரில். பள்ளிப் பருவத்தில் இருந்தே அறிவியல் என்னைக் கவர்ந்தது. நான் படித்த கல்லூரி வளாகத்தில் பெண்கள் மாலை ஆறரை மணிக்குள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு விடுதி அறைக்குச் சென்றுவிட வேண்டும். நூலகத்திலும், ஆய்வுக்கூடத்திலும் ஆறரை மணிக்கு மேல் அமர அனுமதியில்லை. மாணவிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற நிர்வாகத்தினரின் பயம்தான் காரணம். 
பெண்களுக்கு வீட்டில், விடுதியில் கிடைக்கும் பாதுகாப்பு சூழலை வெளியிலும் உருவாக்க வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற சிந்தனை என்னுள் ஓடத் தொடங்கியது. படித்த தொழில்நுட்பத்தை பெண்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த முடியுமா என்று மூளையைக் கசக்கிக் கொண்டேன். 
தில்லியில் நடந்த "நிர்பயா' சம்பவத்தைக் கேள்விப்பட்டதும்தான் பாலியல் கொடுமைகளைத் தடுக்க ஏதாவது கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பு ஏற்பட்டது. எனது பேராசிரியர்கள் மற்றும் சக மாணவிகளுடன் விவாதித்தேன். அவர்களின் வழிகாட்டல்கள், யோசனைகள், உதவிகளை ஏற்றுக் கொண்டேன். அதன் விளைவுதான் Intrepid கருவி. 
இதைப் பலமுறை பரீட்சித்துப் பார்த்த பிறகே அறிமுகம் செய்தேன். அலுவலகம், கல்லூரி, பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஆடை மாற்றும் சாதாரண நிகழ்வைப் புரிந்து கொள்ளும் விதத்தில் இதனைத் தயார் செய்துள்ளேன். அசாதாரண சந்தர்ப்பத்தில் ஆடைகள் இழுக்கப்படும் வேகத்தை வைத்து அபாயத்தை கருவி உறுதி செய்து உடனடியாகச் செயல்பட ஆரம்பித்துவிடும். 
கருவியில் தண்ணீர் பட்டாலும் வேலை செய்யும். இந்தக் கருவியை அதிக அளவில் தயாரிக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாராகி வருகிறது. உடலை மறைக்கும் ஆடைகளில், இந்தக் கருவி பொருத்தப்பட்டால் மானம் காக்கும் கவசமாக மாறிவிடும் என்கிறார் மணிஷா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com