ஒரு பிறப்பில் இரு வாழ்க்கை!

"வாழ்ந்தா அவங்க மாதிரி வாழனும்' என்று பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் யார் போல வாழ வேண்டும்'
ஒரு பிறப்பில் இரு வாழ்க்கை!

"வாழ்ந்தா அவங்க மாதிரி வாழனும்' என்று பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் யார் போல வாழ வேண்டும்' என்று விருப்பப்படுவீர்கள்'' என்று அந்த அழகிப் போட்டியின் நடுவர்கள் போட்டியாளர் ராஜலக்ஷ்மியிடம் கேட்டார்கள். "நான் வாழ்ந்த வாழ்க்கையை இன்னொருமுறை வாழ விரும்புவேன்'' என்று ராஜலக்ஷ்மி பதில் சொல்ல... அழகிப் போட்டி அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. ராஜலக்ஷ்மிக்கு போட்டியில் முதலிடம் தரப்பட்டு "வீல் சேர் இந்திய அழகிப் பட்டம்' வழங்கப்பட்டது. வரும் அக்டோபர் 7 - இல் போலந்தில் நடக்க இருக்கும் "வீல் சேர் உலக அழகிப் போட்டி'யில் ராஜலக்ஷ்மி பங்கெடுக்கிறார். பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான அழகிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அழகில் வனப்பில் ஏனைய அழகிகளுக்கு சவால்விடும் சரியான போட்டியாளினியாக இருக்கும் ராஜலக்ஷ்மி அடிப்படையில் ஒரு பல் மருத்துவர். முப்பத்தொரு வயதுக்காரர் . பெங்களூரைச் சேர்ந்தவர். ராஜலக்ஷ்மி தொடர்கிறார்:

"பல் மருத்துவத்தில் மேல்படிப்பு படித்தவள் நான். தேர்வில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கமும் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் பல் மருத்துவராகப் பணி புரிய மனு செய்த போது "நான் உடல் குறையுள்ளவள்' என்ற காரணத்திற்காக எனக்கு வேலை மறுக்கப்பட்டது. எனது படிப்பு, அதிக மதிப்பெண்கள், பெற்ற தங்கப் பதக்கம் எதையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுகினேன். உடல் குறையுள்ளவருக்கான ஒதுக்கீட்டில் எனது மனுவை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் ஆணையிட , வேலை கிடைத்தது. பல் மருத்துவராகப் பணி புரிந்து வருகையில், உடல் குறையுள்ள பெண்களுக்கான அழகிப் போட்டி குறித்து வலைதளத்தில் விளம்பரம் கண்டேன். மனு செய்தேன். மூன்று நிமிடம் ஓடும் வீடியோவையும் அனுப்பி வைத்தேன். அழைப்பு வந்தது. அழகிப் போட்டிக்காக சில பயிற்சிகளை மேற்கொண்டேன்.

ஒரு விபத்துதான் என்னை சக்கர நாற்காலியில் முடக்கிவிட்டது. ஒரு கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரை வாசிக்க வேண்டும் என்பதற்காக 2007- இல் பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பயணத்தின் போது ஓட்டுநர் தூங்கி விட.. கார் விபத்துக்குள்ளானது. எனக்கு முதுகில் பலமான அடி. மயக்கம் அடைந்தேன். உணர்வு வந்த போது, எனது இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டன என்பதை உணர்ந்தேன்... உள்ளிலும் வெளியிலும் உதிர்ந்து போனேன்.

விபத்து நடந்த போது எனக்கு இருபத்தொரு வயது. முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதால்... பல அறுவை சிகிச்சைகள் மாறி மாறி நடந்தன. ஒரு பலனும் இல்லை. கடைசியில் சக்கர நாற்காலியில் இருத்தப்பட்டேன். ஆனால் என் கனவுகளை நனவாக்க எனது உடல் பாதிப்பு ஒரு தடையாக நிற்பதை நான் அனுமதிக்கவில்லை. பல்மருத்துவப் படிப்புடன், ஆடை வடிவமைப்பிலும் தேர்ச்சி பெற்றேன். நான் வடிவமைத்த உடையை அணிந்துதான் அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன்.

இந்த வாழ்க்கையை ஒரு ஆசிர்வதிப்பாகவே கருதுகிறேன். ஒரு பிறப்பில் இரண்டு வகை வாழ்க்கை வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டு கால்களுடன் ஓடியாடி நடந்து பல இடங்கள் சென்று வாழ்ந்து பார்த்து விட்டேன். கால்கள் உணர்விழந்த நிலையில் வீல் சேரில் அமர்ந்து ஒரு மாற்றுத் திறனாளியாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். மோசமான நிலையிலும் என்னைத் தனிப்படுத்திக் காட்டும் அளவுக்கு எனது திறமைகளை விரிவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உளவியல், யோகாவையும் முறையாகப் படித்திருக்கிறேன். இன்று பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரிந்து வருவதுடன், பல் மருத்துவமனையையும் சொந்தமாக நடத்தி வருகிறேன்.

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளையும் , தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவும் இந்த அமைப்பு உதவி வருகிறது . அறக்கட்டளையின் நிதிக்காக பெண் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு ஒரு அழகிப் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்தேன். பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்களும் நடத்துகிறேன். வீல் சேர் கூடைப் பந்து விளையாட்டிலும், வீல் சேரில் அமர்ந்த படியே நடனம் செய்யும் போட்டிகளிலும் கலந்து கொள்கிறேன். என்னை எனது தன்னம்பிக்கையை, எனது சமூக சேவைகளை அநேக தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. கட்டட உள்ளலங்காரம், பாடுவது, ஓவியம் வரைவது , நீந்துதல் எனது பொழுது போக்குகள். சேரில் அமர்ந்தபடி பதினொரு நாடுகளை சுற்றி வந்திருக்கிறேன். நானே கார் ஓட்டுவேன். அதற்காக காரை என் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கச் செய்திருக்கிறேன். காரில் இந்தியா முழுவதும் சுற்றியுள்ளேன்.

பலரும் உடல் குறையுள்ளவர்களை வேறு மாதிரிதான் பார்க்கிறார்கள். குறை மனதிலும் எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் இருக்கிறது. ஆனால் பளிச்சென்று வெளிப்படையாகத் தெரிவது உடல்குறைதான். உடல்குறை உள்ளவர்களை ஏற்றுக் கொள்வதும், ஆதரவாக இருப்பதும் சமூகத்தில் குறைந்த அளவில்தான் உள்ளது.

சொந்தமாக கிளினிக் தொடங்கியபோது வருகையாளர்கள். " யார் டாக்டர்..?'' என்று என்னிடம் கேட்பார்கள். "நான்தான்'' என்று சொல்வேன். அவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள். போகப் போக அவர்களின் கண்ணோட்டம் மாறிவிட்டது'' என்று சொல்லும் ராஜலக்ஷ்மி போலந்து புறப்பட தயாராகி வருகிறார்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com