இப்படியும் ஒரு காதலா?

காதலுக்கு கண்ணில்லை என்பது எத்தனை  உண்மையோ,  அது மாதிரி   "காதலுக்கு வயதும் இல்லை'  என்பதும்  உண்மை.
இப்படியும் ஒரு காதலா?

காதலுக்கு கண்ணில்லை என்பது எத்தனை  உண்மையோ,  அது மாதிரி   "காதலுக்கு வயதும் இல்லை'  என்பதும்  உண்மை.

கோவையில்  ஆர்விஎஸ்    பள்ளியில்  "பிளஸ் டூ'வின்  ஒரே வகுப்பில்  படித்து வந்த  ஜெய்பிரகாஷுக்கு   சக மாணவி சுனிதாவை   ரொம்பவே  பிடித்துப் போயிருந்தது.  அது  "காதல்' என்று இனம் கண்டு  கொண்டாலும் , சுனிதாவிடம்  சொல்லும்  தைரியம்  இல்லை.   பள்ளி நாட்களும் ஒரு முடிவுக்கு   வந்தது. சுனிதா  பிஸியோதெரப்பி  படிக்க பெங்களூரு போக..   ஜெய்  கோவையில்  படிக்க...  பிரிவு  நிரந்தரமானது. 

இரண்டரை ஆண்டு இடை வெளியில்,   ஜெய்யின்  பிறந்த நாள் அன்று  மொபைல்  சிணுங்க...  பேசியது  சுனிதா.  சுனிதாவின் முகம்  கண் முன்னே    வந்து   நின்றது.  இது  ஜெய்யின் மனதில்  மீண்டும்  சுனிதாவிடம்  ஈர்ப்பு  ஏற்பட  காரணமாய்   அமைந்துவிட்டது.  நடுவில் 2010- இல்  நண்பர்கள்  சந்திப்பில்  சுனிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு  கிடைத்தது.  அப்போதும்  ஜெய்  தன்  காதலைச்     சுனிதாவிடம் சொல்லவில்லை.
சுனிதா தொடர்கிறார்: 

" பெங்களூருவில், நான் "கால்' சென்டரில் இரவு நேரம் வேலையில் சேர்ந்தேன். பகலில் பிஸியோதெரபி படிப்பு. 2011 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓணம் திருவிழாவை பெற்றோர்களுடன் கொண்டாட பெங்களூருலிருந்து காரில் தோழிகளுடன் கோவை வந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் இரவு நேரத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது. அதில் எனது முகம் மட்டும் சிதைந்து போனது. நெற்றி, மூக்கு , கன்னம், தாடை எலும்புகள் நொறுங்கிப் போயின. ஆனால் , கழுத்துக்கு கீழ் சிறு காயம் கூட ஏற்படவில்லை. 

பல்வேறு சிகிச்சைகளுக்கு பின் ஸ்டீல் பிளேட்டுகள் வைத்து எனக்கு ஒரு முகத்தைக் கட்டிக் கொடுத்தார்கள். பழைய முக அழகில் நூறில் ஒரு பகுதி கூட திரும்பக் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். ஒரு பெண்ணுக்கு முகம் சிதைந்து போனால் எதிர்காலம் இருட்டாகத்தானே அமையும். விபத்தைக் குறித்து நண்பர்கள் மூலமாக அறிந்த ஜெய் என்னைப் பார்க்க பெங்களூருவுக்கு ஓடோடி வந்தார். "விபத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம்.. எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம்' என்று நினைத்துக் கொண்டு வந்த ஜெய் என் கோலத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். நானும் அழுதேன். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினார். 

இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். மீண்டும் அழுகை. அன்று இரவு அவர் ஒரு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பினார் . "என் மனமெல்லாம் உன் பழைய முகம்தான் வியாபித்திருக்கிறது. சில நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. இப்போது உன் முகம் மாறியிருக்கலாம் . எனக்கு நீ பழைய சுனிதாதான்... உன்னைக் கவனித்துக் கொள்ள ஓர் ஆள் வேண்டும் . அது ஏன் நானாக இருக்கக் கூடாது .

என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?'' என்று ஜெய் எழுதியிருந்தார். எனக்கு சிரிப்பும் வந்தது . அதிர்ச்சியாகவும் இருந்தது. 

"தொடர்ந்து முகத்தில் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. மனதளவிலும், உடல் அளவிலும் திருமணம் பற்றி யோசிக்க இயலாத நிலையில் இருக்கிறேன். இந்த நிலைமையில் திருமணம் என்பது ஒரு விஷப் பரீட்சை. நாம் நல்ல நண்பர்களாகத் தொடருவோம்'' என்று ஜெய்யை அப்போதே அலைபேசியில் அழைத்து சொல்லி விட்டேன். 

ஆனால் , ஜெய்யோ ""சுனிதா உனக்காக நான் காத்திருப்பேன்'' என்று சொன்னார். காலம் அவர் மனதை மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் பெங்களூரு சென்று விட்டேன். நான் வேலை செய்த நிறுவனத்திடம் அனுமதி பெற்று வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஆரம்பித்தேன்.

இந்தக் கால இடைவெளியில், ஜெய் என்னுடன் தொடர்பில் இல்லை. கருணையின் அடிப்படையில் திருமணம் எனக்குப் பிடிக்காத ஒன்று. அப்படி செய்யப்படும் திருமணம் அதிக நாளுக்கு நீடிக்காது என்பதும் தெரியும். மனித மனம் .. அதுவும் ஓர் ஆண் மனம் எப்போது மாறும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் திருமணத்திற்குத் தயங்கினேன். ஜே என்னிடம் தூய்மையான பிடிப்புடன் இருக்கிறார் என்பதை, அவர் திருமணம் செய்யாது இருந்ததிலிருந்து புரிந்து கொண்டேன். அவரது நேர்மையான, தூய்மையான காதலை மதிக்க வேண்டும் என்று தோன்றியது. விபத்திற்குப் பிறகு என்னைக் கண்ணும் கருத்துமாய் கவனித்த தங்கை அஞ்சலி, "ஜெய்யைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினாள். எனது சம்மதத்தைச் சொல்ல அவரை வரவழைத்தேன். 

"நாம் திருமணம் செய்து கொள்ளலாம்' என்றேன். அவர் வீட்டில் ஜெய்யின் அம்மா முதலில் கொஞ்சம் யோசித்தார். ஜெய்யும் அவர் அப்பாவும் சேர்ந்து சமாதானம் செய்ததில், எதிர்ப்பு ஆசீர்வாதமாக மாறியது. 2014 - இல் மார்ச் 3 அன்று குருவாயூர் கோவிலில் வைத்து தமிழ் கலாசார முறையில் எங்கள் திருமணம் நடந்தது. மகள் ஆத்மியா பிரசவத்தின் போது ஜெய்யும் உடன் இருந்தார். ஆத்மியாவுக்கு இரண்டரை வயதாகிறது. இப்போது மகன் ஆத்மிக் பிறந்து ஆறு மாதம் ஆகிறது. இந்த பிரசவத்தின் போதும் ஜெய் உடன் இருந்தார் . ஜெய் ஓர் உத்தமக் கணவனாக எனக்கு கிடைத்திருக்கிறார். .. நான் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்தவள் மிகவும் கொடுத்து வைத்தவள்'' என்கிறார் சுனிதா.
- பாரதி கண்ணம்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com