சமையல்.... சமையல்.... சமையல்....

பனீர் கோஃப்தா, ரவா இட்லி, பட்டன் காளான் ஃப்ரை, சுக்கு குழம்பு, வத்தல் குழம்பு

பனீர் கோஃப்தா

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2
பன்னீர் - 100 கிராம்
கல் உப்பு - 2 தேக்கரண்டி
பால் பவுடர் - 1 தேக்கரண்டி
அரைத்த கருப்பு மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மக்காச்சோளம் மாவு - 2 டேபிள் ஸ்பூன் (பிரட்டுவதற்கு)
உலர்ந்த பழங்கள் கலவை (பாதாம், முந்திரி சேர்ந்தது நறுக்கியது) - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு 
செய்முறை: முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பௌலில் எடுத்து கொள்ளவும். அதனுடன் பனீர் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் பால் பவுடர் சேர்க்கவும். பிறகு மிளகு பொடி, மிளகாய்த் தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். அப்புறம் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்துமல்லி இலைகளைச் சேர்க்க வேண்டும். கொஞ்சம் மக்காச்சோளம் மாவையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை சரிசமமாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளங்கைகளால் வேண்டிய வடிவில் உருட்டவும். கைவிரலால் உருண்டையின் நடுப்பகுதியில் அழுத்தவும். அதன் நடுப்பகுதியில் ஒரு தேக்கரண்டி உலர்ந்த பழங்களைச் சேர்க்கவும். நன்றாக மூடி விட்டு எல்லா பக்கத்தையும் நன்றாக மூடி நீள்வட்ட வடிவில் உருட்டவும். ஒரு தட்டில் மக்காச்சோளம் மாவை பரப்பிக் கொள்ளவும். பின்னர், உருட்டிய கோஃப்தாக்களை மக்காச்சோளம் மாவில் நன்றாகப் புரட்டி எடுக்க வேண்டும். இதை முடித்த பிறகு கோஃப்தாக்களை அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். ஒவ்வொரு கோஃப்தாக்களாக எண்ணெய்யில் போட வேண்டும். இரண்டு பக்கமும் நன்றாக வேகும் படி திருப்பி விட வேண்டும். பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அதை எண்ணெய்யிலிருந்து எடுத்து, சூடாக பரிமாறவும்.

ரவா இட்லி

தேவையானவை: 
ரவை - 1 கிண்ணம் 
தயிர் - 1 கிண்ணம்
கொத்துமல்லி இலை - 1 கைப்பிடி (நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 1 தேக்கரண்டி 
நெய் - 1 தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 
கடுகு - 1 தேக்கரண்டி
முந்திரி - 5 (உடைத்தது)
சீரகம் - 1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - 4 
பச்சை மிளகாய் - 2 தேக்கரண்டி (நறுக்கியது)
பெருங்காயம் - ஒரு சிட்டிகை 
செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் ரவா, தயிர், உப்பு , தேவையான தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கலந்து தனியாக வைக்கவும். பின்னர், ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகு, உளுந்து, கறி வேப்பிலை, முந்திரி, சீரகம் மற்றும் பெருங்காயம் தாளிக்கவும். இவை அனைத்தும் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். தாளித்த பொருட்கள் அனைத்தும் தயாரான உடன், இதை இட்லி மாவு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் அதில் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து சிறிது நேரம் வைக்கவும். மாவு நன்கு பொங்கி வர ஆரம்பிக்கும். அதன் பின்னர் மாவு கலவையை நன்கு கலந்து இட்லிதட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான ரவா இட்லி தயார். 

பட்டன் காளான் ஃப்ரை

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 1 கிண்ணம் 
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) 
இஞ்சி - 1 துணுக்கு (நறுக்கியது)
வெங்காயம் - 1 நடுத்தர அளவு (துண்டுகளாக்கப்பட்டது)
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப 
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 1 தேக்கரண்டி (பொடித்தது) 
வினிகர் - 1 தேக்கரண்டி 
சோள மாவு - 2 தேக்கரண்டி 
கொத்துமல்லி - 1 கொத்து (நறுக்கியது) 
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வறுபட்ட பின்னர் காளான் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். காளானில் உள்ள தண்ணீர் வற்றிய பின்னர், சில்லி சாஸ் சேர்க்கவும். அதன் பின்னர் சோயா சாûஸ சிறிது சிறிதாக சேர்க்கவும். இறுதியாக சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். சிறிது தண்ணீரில் சோள மாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதனை காளானுடன் சேர்த்து கலந்து நன்கு கிளிறிவிட்டு 5 நிமிடம் மூடிவிடவும். பின்னர், காளான் நன்கு வெந்து சுருண்டு வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். அதனுடன் நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். பின்னர் வினிகர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டன் காளான் ஃப்ரை தயார்.

சுக்கு குழம்பு

தேவையானவை: 
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி, 
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கிண்ணம்
நறுக்கிய தக்காளி - கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியை ப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க் கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

வத்தல் குழம்பு

தேவையானவை: 
கத்திரி வத்தல் - 100 கிராம்
புளித் தண்ணீர் - அரை லிட்டர்
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு ,
பெருங்காயம் , மஞ்சள் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு லேசாக வறுத்து, கத்திரி வத்தலை லேசான சுடு தண்ணீரில் அலசிவிட்டு அப்படியே சேர்க்கவும். வத்தல் நன்கு வறுபட்டதும், புளித் தண்ணீரை விட்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். இதில், வேக வைத்த கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்
கடலையை சேர்த்தும் செய்யலாம் .
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com