பி. டி. உஷாவாக பிரியங்கா சோப்ரா!

குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி வாழ்க்கை திரைப்படமானதைத் தொடர்ந்து இறகுப் பந்தாட்ட வீராங்கனை
பி. டி. உஷாவாக பிரியங்கா சோப்ரா!

குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி வாழ்க்கை திரைப்படமானதைத் தொடர்ந்து இறகுப் பந்தாட்ட வீராங்கனை - சர்வதேச தர வரிசையில் நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கும் பி. வி. சிந்துவின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது என்ற செய்தி அடிபட்டது. என்றாலும், சிந்துவாக நடிக்கும் நடிகை யார்... படப்பிடிப்பு எப்போது தொடங்கும் போன்ற செய்திகள் இன்னும் வெளியாகவில்லை. 

இப்போது அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் ஓட்ட வீராங்கனை பி.டி. உஷா. ஆம்.. உஷாவின் வாழ்க்கைத் திரைப்படமாகிறது. மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பி.டி.உஷா, பல கஷ்டங்களுக்கு உள்ளாகி விரைவு ஓட்டத்தில் மின்னல் ராணியாக மாறியவர். உஷாவின் பட்டப் பெயரே "பையோலி எக்ஸ்பிரஸ்" என்பதுதான்..! 

1984- இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்சில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவற விட்டவர். ஒரு சர்வதேச போட்டியில் அதிக தங்கப் பதக்கங்கள் பெற்றவர் உஷா மட்டுமே. ஒலிம்பிக்சில் மிகக் குறைந்த வயதில் ஓடியவரும் உஷாதான்..! அன்று விளையாட்டரங்கில் அகில இந்திய அளவில் பேசப்பட்ட உஷா, தற்சமயம் ஓடுவதற்கு பயிற்சி தரும் நிறுவனம் ஒன்றினைத் தனது சொந்த ஊரான பையோலியில் நடத்தி வருகிறார். உஷா சிறந்த ஓட்ட பயிற்சியாளரும் கூட. சர்வதேச அளவில் திறமையான ஓட்ட வீராங்கனைகளை உஷா உருவாக்கியிருந்தாலும், அவர்கள் யாரும் உஷா தொட்ட உச்சத்தைத் தொட இயலவில்லை என்பதுதான் உண்மை.

தென்னிந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஒருவரின் வாழ்க்கை முதன் முதலாக வெள்ளித்திரையில் காட்டப்பட உள்ளது. பி. டி. உஷாவாக நடிக்க சோனம் கபூர் உட்பட அநேக நடிகைகள் ஆர்வம் காட்டினாலும், முடிவில் உஷாவாக நடிக்க இருப்பவர் பிரியங்கா சோப்ரா. மேரி கோம் வாழ்க்கை திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட போது மேரி கோமாக நடித்தது பிரியங்கா சோப்ராதான். 

பிரியங்காவின் உடல் அமைப்பு உஷாவின் முக, உடல் அமைப்புடன் ஒத்துப் போவதால் உஷாவாக நடிக்க பிரியங்காவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். படத்தை இயக்கப் போவது விளம்பர, முழு நீள திரைப்படங்களை பல மொழிகளில் இயங்கி வரும் கேரளத்தைச் சேர்ந்த ரேவதி வர்மா. ரேவதி டில்லியில் வாழ்ந்து வருபவர். படத்தின் இசை, இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான். படத்தின் தயாரிப்பு செலவு சுமார் நூறு கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரும் "பி. டி. உஷா' தான்..!

"உஷாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க திட்டமிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பிரியங்காவிற்கும் படத்தில் உஷாவாக நடிக்க அதீத விருப்பம். ஆனால் பிரியங்கா ஹாலிவுட் படங்களில், டிவி தொடரில் நடிக்க வேண்டியிருந்ததால் "பி. டி. உஷா' படத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. உஷாவின் குழந்தைப் பருவம், ஓட்ட வீராங்கனை, ஒரு தாய் மற்றும் பயிற்சியாளர் என்ற மூன்று நிலையில் உஷாவின் வாழ்க்கை படமாக்கப்படும். படம் ஒரு செய்திப்படமாக அமையாது. பொறுப்பான பொழுது போக்கும் படமாக, உஷாவின் பெருமைகளை சொல்லும் விதமாக அமையும். உஷா வாழ்க்கையில் நடந்த, அதே சமயம் யாரும் அறியாத பல சம்பவங்கள் திரைப்படத்தில் இடம் பெறும். 

உஷாவின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர்கள் மூன்று ஆண்கள். உஷாவின் அப்பா, பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார். உஷாவின் கணவர் ஸ்ரீநிவாசன். இவர்களின் சாயலைப் பிரதிபலிக்கும் நடிகர்களைத் தேடி வருகிறோம். பி.டி. உஷா திரைப்படம் ஆங்கிலம், ஹிந்தி, சீனா, ரஷ்யா மற்றும் இந்திய மொழிகளில் உருவாகும். இன்னும் ஆறு மாதத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும்'' என்கிறார் பட இயக்குநர் ரேவதி. 

கேரளத்தைச் சேர்ந்த ஓட்ட வீராங்கனை பி. யூ. சித்ரா உலக ஓட்டப் போட்டியில் சமீபத்தில் சேர்க்கப்படாமல் போனதைக் கண்டு கொள்ளாமல் பி. டி. உஷா மெüனத்துடன் இருந்ததை கேரள மக்கள் கண்டனம் செய்தார்கள். அன்று ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கத்தைத் தவற விட்ட உஷாவிற்கு வீடும், காரும் அன்பளிப்பு செய்து, ஓட்ட பயிற்சி நிலையத்தைச் சொந்தமாகத் தொடங்க நிலமும், நிதியும் தந்து கேரள அரசு உதவியது. தற்சமயம் உஷாவுக்கு கோழிக்கோடு நகரில் வீடில்லை என்று நிலம் ஒதுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கேரள மக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. கோழிக்கோடு மாநகரசபையும் கட்சி வேறுபாடின்றி தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. கொச்சி நகரில் "பி. டி. உஷா' சாலை "பி. யூ.சித்ரா' சாலையாக பொது மக்கள் மாற்றியுள்ளனர்.

ஒரு காலத்தில் கேரளத்தின் கெüரவமாக மதிக்கப்பட்ட உஷா இன்று விமர்சனத்திற்கும் மக்களின் கசப்புணர்வுக்கும் இலக்காயிருக்கும் சூழ்நிலையில், "பி. டி. உஷா'வின் பெருமை சொல்லும் படம் உஷாவின் புகழுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை போதிய அளவுக்கு கட்டுப்படுத்தும்..!
- பிஸ்மி பரிணாமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com