கவனம்... கண் பாதுகாப்பில்!

"கண்களைப் பாதுகாப்பது குறித்து இளைய தலைமுறை இடையே இப்போது விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும்,
கவனம்... கண் பாதுகாப்பில்!

"கண்களைப் பாதுகாப்பது குறித்து இளைய தலைமுறை இடையே இப்போது விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும், பள்ளியில் சேரும் கட்டத்திலேயே இதை அனுசரிப்பது பயன் தரும்' என்கிறார் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி.  இவர் கோவை தி ஐ ஃபவுன்டேஷனில் கண் மருத்துவர்.  கண்புரை மற்றும் லேசர் சிகிச்சையில் அகில இந்திய அளவில் சாதனை படைத்து, ரிஃப்ரேக்டிவ் சர்ஜரி (பார்வைக்குறைவு அறுவைச் சிகிச்சை) குறித்த ஆய்வுக் கட்டுரைக்காக ஷிவ் பிரசாத் ஹர்தியா விருதை அகில இந்திய கண் மருத்துவர் மாநாட்டில் பெற்றவர்.

குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு கண் பிரச்னை இருப்பது தவிர, குறிப்பிட்ட கண் பிரச்னைக்குப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  இருபத்தைந்து சதவிகிதம் பேருக்கு ரிஃப்ரேக்டிவ் எர்ரர் எனப்படும் பார்வைக் குறைவு இருக்கிறது.  18 வயது வரை கண் விழி வளர்ச்சி பெறுவதால், அதுவரை பவர் அதிகரிக்கிறது. அதனால் வருடத்துக்கு ஒரு முறை, ரெடினா உட்பட முழு கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இப்போது 18 வயதுக்குப் பிறகு, லேசர் சர்ஜரி செய்யும் வசதி இருக்கிறது.  அதற்கு முன் காஸ்மெடிக் வசதிதான் இருந்தது.  கான்டாக்ட் லென்ஸ் இப்போது மாதத்துக்கு ஒரு முறை, ஏன் - தினசரி ஒரு முறை கூட - பயன்படுத்திவிட்டு வீசியெறிந்து விடும் அளவுக்கு வந்துவிட்டது.  பல வண்ணங்களில்கூட இப்போது கான்டாக்ட் லென்ஸ் கிடைக்கிறது. கான்டாக்ட் லென்ஸைப் பராமரிப்பதில் கவனம் தேவை.  கையைக் கழுவிக் கொண்டுதான் போட்டுக்கொள்ள வேண்டும்.

லென்ஸ் போட்டுக்கொண்டு தூங்கக்கூடாது.  ஒரு நாளைக்கு 10 - 12 மணி நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் முறைகள் இருக்கின்றன. 

ரிஃப்ரேக்டிவ் சர்ஜரி என்கிற விஷயத்தில், ஏராளமான தகவல்கள் இப்போது கிடைக்கின்றன.  எல்லோருமே கண்களை முழுவதுமாகப் பரிசோதித்துக் கொள்ள முன் வருகிறார்கள். கருவிழியின் தடிமனுக்கு ஏற்ற மாதிரி, கார்னியாவைப் பண்ணுவோமா, கண்ணுக்குள் வைக்கக்கூடிய கான்டாக்ட் லென்ஸ் வைப்போமா, அல்லது எதுவுமே பண்ண வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு இந்த முழுமையான பரிசோதனை உதவும்.  

இதையே இருபது வருடங்களுக்கு முன், மைக்ரோ கெரடோம் கருவி உதவியோடு பண்ணினோம்.  ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, ஃபெம்டோ செகன்ட்ஸ் லேசர் முறையில், மிகத் துல்லியமான வகையில், இப்போது சிகிச்சை செய்ய முடிகிறது. 

"ஸ்மைல்'  ரிஃப்ரேக்டிவ் சர்ஜரி இப்போது உருவாகியிருக்கிறது. ஃபெம்டோ செகன்ட்ஸ் லேசர் மூலம் இரண்டு முதல் நான்கு மி.மீ.கார்னியாவில் இன்ஸிஷன் செய்து, விழியின் தடிமனைக் குறைத்து, விழிகளில் லெங்க்டிக்யூலை (பாதிக்கப்பட்ட திசுவை) அகற்றிவிடலாம். இதன் மூலம் நல்ல பார்வை பெற முடியும். குறைந்த அளவுக்கே சிகிச்சை செய்யப்படுவதால், வேகமாகக் குணமடைந்துவிடலாம்.  வறண்ட கண்கள் பிரச்னை இருந்தால்கூட, விரைவில் குணமடைந்துவிடும்.

கண்களுக்குள் வைத்துவிடும் (இம்ப்ளான்டபிள்) கான்டாக்ட் லென்ஸ் காரணமாக, மெல்லிய கார்னியா அல்லது மைனஸ் 10 அல்லது அதிக பவர் உள்ளவர்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து உடனடியாகப் பயன் பெறலாம்.  இந்த முறையில், வெகு விரிவான பரிசோதனை செய்து துல்லியமாகக் கணக்கெடுத்து, அதற்கேற்றவாறு லென்ஸ்கள் தயாரிக்கப்பட்டுப் பொருத்தப்படுகின்றன.  இதன் மூலம் மைனஸ் மற்றும் ப்ளஸ் தவிர சிலின்ட்ரிகல் பார்வைக் குறைபாடுகளையும் சரி செய்துவிடலாம்.

வயதான பெண்மணிகள், கண்புரை முற்றட்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை.  பார்வைக் குறைபாட்டை உணரும்போதே சர்ஜரி பண்ணிவிட முடியும்.  இதை நவீன ஃபேக்கோ எமல்ஸிஃபிகேஷன் தொழில் நுட்பம் மூலம் செய்துவிடலாம்.  இதை ஐந்து முதல் பத்து நிமிடங்களில் செய்து முடித்துவிட முடியும் என்பதால், பெண்மணிகள் அச்சப்படத் தேவை இல்லை.  இப்போது பலப்பல இன்ட்ரா ஆக்யுலர் லென்ஸ்கள் வந்துவிட்டன.

தூரப் பார்வை, கிட்டப் பார்வை எல்லாவற்றுக்கும் ஏற்ற மல்ட்டிஃபோகல் லென்ஸ்கள் சிறப்பான பார்வையைத் தர முடியும்.

சிலருக்கு டயபடீஸ் அல்லது அதிக ரத்த அழுத்தம் இருக்கும்.  இவர்களுக்கு வழக்கமான பரிசோதனை தவிர, கண்கள் பரிசோதனை மிகவும் அவசியம்.   நோய் முற்ற முற்ற, கண்ணுக்குள் விழித்திரையில்  (ரெட்டினா) ரத்தக் கசிவு ஏற்பட்டு, பார்வைக் குறைவு ஏற்பட்டால், பரிசோதனை செய்து குணப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். முற்றிய பாதிப்புகளுக்கு, ஊசி மருந்து, லேசர் மற்றும் அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.  

நாற்பது வயதுக்கு மேல், சற்று அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது க்ளுகோமா தாக்குதலுக்குத்தான்.  இதை சைலன்ட் கில்லர்  (மௌனமாகக் கொல்வது) என்பார்கள்.  ஆப்டிக் நெர்வ் எனப்படும் விழி நரம்பு பாதிக்கப்பட்டு, பார்வைக் குறைபாடு ஏற்படும்.  அப்போதே கவனித்துவிட்டால், அந்த நிலையிலேயே பார்வையைக் காப்பாற்ற முடியும்.  ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சொட்டு மருந்து அல்லது அறுவைச் சிகிச்சை மூலம்கட்டுப்படுத்திவிடலாம்.  
- சாருகேசி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com