கேதார கௌரி விரத மகிமை!

சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார்
கேதார கௌரி விரத மகிமை!

சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பது இவ்விரதத்தின் சிறப்பு. இத்தகைய சிறப்பு பெற்ற "கேதார கெளரி விரதம்  குறித்து ஒரு புராண வரலாறு உண்டு.

கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் பார்வதி  சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய ரம்பையானவள் அற்புதமான நடன விசேஷங்களை நடித்துக் காட்டுகிறாள்.

அப்போது சிவ பக்தராகிய பிருங்கி மகரிஷி பக்தியோடு விசித்திரமான விகட நாட்டியம் ஒன்றை ஆடிக் காட்டுகிறார். பார்வதியும் அங்கே இருக்கின்றாள். தேவர்கள் ஆனந்தத்தால் சிரித்து மகிழ்கின்றார்கள்.  பரமசிவனும் பிருங்கியின் நாட்டியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்கிறார். பரமசிவன் அனுக்கிரகமும் பிருங்கி மகரிஷிக்குக் கிடைக்கிறது. அதைக் கண்டு சபையிலுள்ளோர் பிருங்கி மகரிஷியை கெளரவித்து பாராட்டுகிறார்கள். 

இவ்வேளை பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்டதிக்குப் பாலகர்களும், முனிவர்களும், பதினெண்ணாயிரம் ரிஷிகள் என்போரும் இருவரையும் மூன்று தடவை பிரதர்சனம் செய்து வணங்கிச் சென்றனர். ஆனால்; அந்த நேரத்தில் பிருங்கி மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். (வண்டின் உருவம் பெற்றதால் இம் முனிவர் "பிருங்கி முனிகள்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்). பிருங்கி என்றால் வண்டு.

பிருங்கி ரிஷியின் இச்செய்கையைக் கண்டு கோபமுற்ற பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனும் ஒரு புன்முறுவலுடன் பின்வருமாறு கூறினார்: 
"தேவி! பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மாறாக மோட்சத்தை நாடுபவர். மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் உன்னை வணங்காது மோட்சத்தை நல்கும் என்னை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே,''  எனக்கூற, இதனைக் கேள்வியுற்ற லோகமாதா மேலும் கோபமுற்றவளாக "எனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் உங்கள் பக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் இங்கிருந்து ஓர் அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாது அவ்வாறான சக்தியைக் கொடுக்கும் என்னை ஏளனம் செய்தாய்.

ஆதலால் "நிற்க முடியாமல் போகக் கடவாய்', என முனிவருக்கு சாபம் கொடுத்தார். நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார். 

இந்நிலையில் "என் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம்' எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றை சிவன் கொடுத்தார். 

தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம் என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி தனது ஆசிரமத்தை அடைந்தார்.

இதனைக் கண்ட லோகமாதாவுக்கு மேலும் கோபம் உண்டாகின்றது. பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கோபத்தில் ""மற்றவர்கள் முன்பு என்னை அவமதித்த உங்களுடன் இனி நான் வாழப் போவதில்லை'' எனக் கூறி கயிலையை விட்டு நீங்கிப் பூலோகத்துக்கு வருகிறாள். 

வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனத்தில் ஒரு விருட்சத்தின் அடியில் அமர்ந்திருக்கிறாள்.  மல்லிகை, முல்லை, மந்தாரை, பாரிஜாதம் போன்ற செடிகள் பூத்துக் குலுங்கியதுடன் அவற்றின் நறுமணம் வனத்தின் நாற்றிசையும் வீசுவதைக் கண்ட வால்மீகி மஹரிஷி; தனது ஞானக் கண்ணால் தனது ஆசிரமம் அமைந்துள்ள வனத்தில் பரமேஸ்வரி எழுந்தருளி உள்ளதைக் கண்டார்.

முனிவர் பார்வதி தேவி எழுந்தருளியுள்ள வில்வமரத்தடிக்கு வந்து, ஆச்சரியத்துடன் தேவியை நோக்கி "மும் மூர்த்திகளிலும் முதற் பொருளே! லோக மாதாவே! தாங்கள் பூலோகம் வந்து சிறியோனின் பர்னசாலை அமைந்துள்ள வனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு யான் என்ன தவம் செய்தேனோ?' எனக் கூறி, அன்னையை மெய்சிலிர்க்க வணங்கி, "தாயே! தாங்கள் பூலோகம் வந்ததற்கான காரணத்தை அடியேன் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே?' என வினாவி மீண்டும் வணங்கி நின்றார்.  அதற்கு பார்வதி தேவி  "பிருங்கி முனிவரின் அலட்சியத்தால் கோபமுற்ற நான் பிரியக் கூடாத என் நாதனை விட்டுப் பிரிந்து நீண்ட தூரம் வந்து விட்டேன்' என தனது தவறை உணர்ந்து கவலையுடன் கூறினார்.

வால்மீகி முனிவர் பரமேஸ்வரியை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்து தினமும் வணங்கி வந்தார். இவ்வேளை பார்வதிதேவியானவள் வால்மீகி முனிவரை நோக்கி "எனது அறிவீனத்தால் என் சுவாமியைப் பிரிந்து இங்கே வந்து விட்டேன். எனவே இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தினை அனுஷ்டித்து இறைவனை மீண்டும் அடைந்து ஆறுதல் அடைய விரும்புகின்றேன். எனவே, அவ்வாறான விரதம் இருப்பின் கூறும்படி கேட்டார். அதற்கு வால்மீகி பின்வருமாறு கூறினார்.

"தாயே! இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அதனை மெய்யன்புடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்தால் விரத முடிவில் பரமேஸ்வரனின் அருள் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் எனக் கூறி, அத்தகைய சிறப்புப் பெற்றதும் யாராலும் இதுவரை அனுஷ்டிக்கப்படாததுமான விரதம் "கேதார கெளரி விரதம்', எனக் கூறி இவ்விரதத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரத நியதிகளை பின்வருமாறு கூறுகின்றார்.

"புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்துத் தீபாவளித் திருநாளான அமாவாசை வரை 21 நாள்கள் பிரதி தினமும் நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆலமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம், நோன்பு நூல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடல் வேண்டும்' என்று கூறினார். 

சிவனை மனதில் தியானம் செய்து விதிப்படி வணங்கியதால் 21 ஆம் நாள் அம்பிகையின் விரதத்தில் மகிழ்ந்து அம்பாளின் முன் தேவ கணங்கள் புடைசூழ ரிஷபவாகனத்தில் பூலோகத்தில் அம்பிகையின் முன் காட்சி கொடுத்து "என்ன வரம் வேண்டும் தேவி?' எனக் கேட்டார். அப்போது "இமைப் பொழுதும் உமைப் பிரியாத வரம் வேண்டும் சுவாமி" என்றார். "தந்தோம் தேவி' என தனது இடது பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் பெற்று கயிலாயம் சென்றார். இறைவி இவ் விரதத்தை அனுஷ்டித்தமையால் ஓர் உயிரும் ஓர் உடலுமாக இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. எனவே தீபத்திருநாளில் இவ்வரிய நோன்பினை நோர்ப்பவர்களுக்கு  திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள் என்பது நம்பிக்கை. 
- ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com