தீபாவளி சமையல் டிப்ஸ்...

தீபாவளி சமையல் டிப்ஸ்...

கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது  நீர்த்து விட்டால் சோளமாவைச் சிறிது கரைத்து விட  அல்வா விரைவில் கெட்டிப்படுவதும் ருசியும் அதிகமாகும்.

• குலாப் ஜாமூன் மிக்ஸýடன் சர்க்கரைப் பொடி கலந்து பிசைந்து சற்று  தடிமனான சப்பாத்திகளாக திரட்டி சிறிய டைமண்டு வடிவில் வெட்டி நெய்யில் பொரித்து எடுத்தால் சூப்பர் ருசியாக இருக்கும்.

• கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது  நீர்த்து விட்டால் சோளமாவைச் சிறிது கரைத்து விட  அல்வா விரைவில் கெட்டிப்படுவதும் ருசியும் அதிகமாகும்.

• ஜாங்கிரி செய்த பிறகு அதன்மீது வண்ண தேங்காய்த் துருவலை தூவி பிறகு கொடுத்தால் வித்தியாசமான சுவையுடன் பார்க்க அழகாக இருக்கும்.

• மைசூர்பாகுக்காக கடலைப் பருப்பை அரைக்கும்போது சிறிது  வறுத்த முந்திரியையும் சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் கூடும்.

• அதிரசம் செய்யும் போது ஒருமாறுதலுக்கு தேங்காயை லேசாக வறுத்து போட்டு அதிரச மாவில் கலந்து செய்து பாருங்கள். அதிரசம் நன்றாக வரும் 
எண்ணெய் குடிக்காது.

• பாதுஷா பொரித்தவுடன் புத்தகம் தைக்கும் ஊசியால் ஐந்தாறு குத்து குத்தி பாகில் போட்டால் உள்ளே பாகு இறங்கி சுவைக்கூடும்.

• நாடா பக்கோடா செய்யும்போது அரிசிமாவு, கடலை மாவுடன் இரண்டு தேக்கரண்டி உளுந்து மாவையும் சேர்த்துச் செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. கூடுதல் கரகரப்பாகவும் இருக்கும்.

• சர்க்கரைப் பாகு காய்ச்சும் பொழுது சிலதுளி எலுமிச்சைப் பழச்சாறு விட்டால் பாகு முறுகாமல் இருக்கும்.

• சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

• தேங்காய் பர்ஃபி முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய்ப் பால் விட்டு கிளறினால் சூப்பராக இருக்கும்.

• ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் சேகரி செய்யும் போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

• ரவா உருண்டை செய்யும்போது சிறிதளவு பால் பவுடரையும் சேர்த்துச் செய்யவும். சுவை சூப்பராக இருக்கும்.

• குலோப் ஜாமூன் செய்யும்போது உருண்டையின் நடுவில் ஒரு டைமண்ட் கற்கண்டு அல்லது ஒரு கிஸ்மிஸ் வைத்துச் செய்தால் நடுபாகம் வரையிலும் வெந்து நன்றாக இருக்கும். சர்க்கரைப்பாகும் நன்றாகப் பிடிக்கும்.

• முந்திரி, பாதாம் பருப்பை சிறிது நீரில் ஊற வைத்து துருவியில் சீவினால் மெல்லிசாக வரும். ஸ்வீட் வகைகளுக்கு மேலே தூவி அலங்கரித்தால் சூப்பராக இருக்கும்.

• இனிப்பு சுகியம் செய்ய முதல் நாள் இனிப்பு பூரணம்  செய்து வைத்துக் கொண்டால் காலையில் மாவில் தோய்த்து போட்டு எடுக்கலாம். உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செய்து வைத்துக் கொண்டால் அதே மாவில் மசாலா  போண்டாவும் செய்யலாம்.

• முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மொறு மொறு வென்று இருக்க சிறிது  சோள மாவு சேர்த்து பிசைந்தால் போதும்.

• அல்வா செய்யும்போது சிறிது அன்னாசிப்பழச் சாறை ஊற்றினால் அல்வா சூப்பரான சுவையுடன் இருக்கும்.

• லட்டு செய்யும்போது பூந்தியை எடுத்து வடிகட்டி உடனே பாகில் போடாமல் எல்லா பூந்தியும் செய்தபின் பாகு வைத்து அதில் கொட்டிக் கிளறி சிறிது அழுத்தி வைத்த பின் லட்டு பிடித்தால்  லட்டு நன்றாக  வரும்.

• வடையும் பக்கோடாவும் மொரமொரப்பாக வர வேண்டுமா? ஒரு  தேக்கரண்டி ரவையைக் கலந்து செய்தால் சூடு ஆறிய பிறகும் கரகர மொரமொரதான். 

• பூந்தி தேய்க்கும்  மாவில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது வெது வெதுப்பான எண்ணெய் சேர்த்து கலந்து பூந்தி செய்தால் முத்து முத்தாக வரும்.

• எண்ணெய் காய்ந்ததும் ஓரிரு வெற்றிலையைப் போடவும். அது சடசடவென வெடித்து அடங்கியதும் வெளியே எடுத்து விடவும். பிறகு பலகாரங்கனை  வேக வைத்து எடுத்தால் எண்ணெய் குடிக்காது. பலகாரம்  தீரும் வரை காரல் வாடையும் வராது.

• குலாப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப்போகாமலும் இருக்கும்.

• எல்லா வகை முறுக்குகள்,  தட்டை, சீடைக்கு மாவுடன் வெண்ணெய் சேர்த்தால்தான் கரகரப்பாகவும் மணமாகவும் இருக்கும். ஒரு தட்டில் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய்யையும், உப்புப் பொடியையும் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். பிறகு இதில் முறுக்குக்குத் தேவையான பொருட்களை சேர்த்துப் பிசைந்தால்  மாவு நல்ல பதமாயிருக்கும்.

• பட்சணம் வைக்கும் டப்பாவின் உள்ளே ஒரு துணியில் உப்பை வைத்துக் கட்டி வைத்து டப்பாவை மூடினால் பட்சணம் நமுத்து போகாது.
- ஆர்.மீனாட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com