தீபாவளி ஸ்பெஷல்...சமையல்...

மைசூர் பாகு, தேங்காய் பர்ஃபி, பாதுஷா, ரிப்பன் பக்கோடா ( நாடா முறுக்கு), புளிப்பு  முறுக்கு, தட்டை

மைசூர் பாகு
தேவையானவை:
 கடலைமாவு - 1 கிண்ணம்
 சர்க்கரை - 2 கிண்ணம்
 நெய் - 2 கிண்ணம்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:  முதலில் கடலை மாவை எண்ணெய்விட்டு இட்லி மாவுப் பதத்திற்கு கிளறிக் கொள்ளவும்.  பின்பு அடிகனமான வாணலியில் சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். பாகு  கம்பி பதம் வந்ததும் அதில் கலந்து வைத்துள்ள மாவை சேர்க்கவும். பின்பு கிளறிக் கொண்டே  இடையிடையே நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மொத்தமாக நெய்யை சேர்க்கக் கூடாது.  சிறிது சிறிதாக  சேர்க்க வேண்டும். வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வந்ததும்  நெய் தடவிய  ட்ரேவில் போட்டு சமப்படுத்தி  வேண்டிய வடிவில்  வெட்டிக் கொள்ள  வேண்டும். சுவையான மைசூர் பாகு ரெடி.

தேங்காய் பர்ஃபி
தேவையானவை:
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
முந்திரி - 5
 நெய் - 1 தேக்கரண்டி
 செய்முறை: அடிகனமான வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை   வறுத்துக் கொள்ளவும்.  பின்பு அதில் துருவிய தேங்காயைச்  சேர்க்கவும். ஒரு கிளறு கிளறிக்  கொண்டு சர்க்கரை சேர்க்கவும்.  பின்னர்,  சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் நன்கு கிளறிக் கொண்டே  இருக்கவும். பாகு வெள்ளையாக பூத்து வரும் கெட்டியாக வரும்போது ஏலக்காய் முந்திரி சேர்க்கவும்.  பின்னர், நெய் தடவிய ட்ரேவில் கொட்டி பீஸ் போட வேண்டும்.  சுவையான தேங்காய்  பர்ஃபி ரெடி.

பாதுஷா
தேவையானவை :
மைதா மாவு - 1 கிண்ணம்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
சமையல் சோடா - 2 சிட்டிகை
சர்க்கரை - 2 கிண்ணம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்,  சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்த பின்பு மைதா சேர்க்கவும். பின்னர், மீண்டும்  நன்கு கலந்து.  சிறிது சிறிதாக  நீர் சேர்த்து நன்கு பதமாக சேர்க்கவும்.  கெட்டியாக பிசைந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு  காய்ச்சவும். லைட்டாக ஒரு கம்பி பதம் பாகு காய்ச்சவும். மாவை எடுத்து சிறு உருண்டை எடுத்து நன்றாக உருட்டி நடு பகுதியில் ஒரு  அழுத்தம் கொடுத்து செய்து வைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும்  குறைந்த  தீயில் செய்து வைத்துள்ளதை  எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக எடுத்து அதை சர்க்கரை பாகில் போட்டு, எடுத்து வைத்து விட வேண்டும். சுவையான பாதுஷா ரெடி.

ரிப்பன் பக்கோடா ( நாடா முறுக்கு)
தேவையானவை: 
 பச்சரிசி மாவு - 4 கிண்ணம்
கடலை மாவு - ஒன்றரை கிண்ணம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:  ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,  வெண்ணெய், உப்பு, எள், மிளகாய்த்தூள் சேர்த்து நீர்விட்டு கலந்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முறுக்கு அச்சில் நாடா  அச்சு போட்டு  சூடான  எண்ணெய்யில் பிழியவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.
 குறிப்பு : புழுங்கல் அரிசி மாவிலும் செய்யலாம்.

புளிப்பு  முறுக்கு
 தேவையானவை: 
அரிசிமாவு - 4 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
எலுமிச்சை - 1
பச்சைமிளகாய் - 4 -5
எள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எள் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:  முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்,  உப்பு, எள், பெருங்காயம், மாவு சேர்த்து நன்கு  கலந்து கொள்ள வேண்டும்.  பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொண்டு மாவு சேர்க்கவும். எலுமிச்சைப் பழச்சாறு எடுத்து மாவில் சேர்க்கவும்.  நன்கு  கலந்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.  முறுக்கு அச்சில் போட்டுப் பிழியவும்.  சுவையான  புளிப்பு முறுக்கு ரெடி.
 குறிப்பு: உளுந்தை தோலுடன் வாசனை வருமளவு வறுத்து அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதே போன்று பூண்டு, புதினா விழுதும் சேர்க்கலாம். சுவையாக இருக்கும்.

தட்டை
தேவையானவை:
அரிசி மாவு - 1 கிண்ணம்
எள் - 1 தேக்கரண்டி
 பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எள், உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள், பெருங்காயம், மாவு சேர்த்து நன்கு பிசையவும். அதில் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். நீர் சேர்த்து நன்கு பதமாக பிசைந்து சிறு உருண்டையை தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான தட்டை ரெடி. 

எளியமுறை தீபாவளி மருந்து
 தேவையானவை:
 இஞ்சி - 50 கிராம் ( தோல் சீவியது)
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பனை வெல்லம் - 50 கிராம்
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:  இஞ்சியைத் தோல்  நீக்கிவிட்டு பின்பு பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் மல்லிவிதை, சீரகம், மிளகு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு பனைவெல்லம் பாகு காய்ச்சவும். இஞ்சியை நைசாக அரைத்து அதில் சேர்க்கவும். நன்கு கெட்டியாக வந்த பின்பு வறுத்ததைப் பொடி செய்து அதில் சேர்த்து கிளறவும். பின்பு இறக்கி 2 தேக்கரண்டி நெய்  சேர்க்கவும் சுவையாக இருக்கும். தீபாவளி மருந்து ரெடி.

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குபவர் கு.பத்மபிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com