படகோட்டும் போட்டியில் ஒலிம்பிக் கனவு!

படகோட்டும் போட்டியில் ஒலிம்பிக் கனவு!

21-ஆம் நூற்றாண்டு பெண்களுடையது என்றே கூறப்படும் அளவுக்கு பெண்கள் தொடாத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கல்ல.

21-ஆம் நூற்றாண்டு பெண்களுடையது என்றே கூறப்படும் அளவுக்கு பெண்கள் தொடாத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கல்ல.  பல விளையாட்டுகளில் மகளிர் விளையாட்டு வீராங்கனைகள் நாட்டுக்கு பெருமைத் தேடி தந்திருந்தாலும், இதுவரை இந்திய பெண் எண்ணிப்பார்க்காத விளையாட்டு படகோட்டுதலே.

இந்த போட்டிக்கு அறிவுத்திறன், உடல்வலிமையுடன் கடும் உழைப்பு, நுணுக்கமான அணுகுமுறை, விடாமுயற்சி, திடமான இதயம், சமயோசிதபுத்தி, வலிதாங்கும் ஆற்றல், திண்மை, கால்பலம் ஆகியவையும் அவசியம் தேவைப்படுகிறது. ஆண்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்று கண்டுகொள்ளாமல் பெண்களால் ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டை தனது திறனாக மாற்றிக்கொண்டு படகோட்டும் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் தீபா மகாராஜா.  கர்நாடகத்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான இவர்  19 வயதிலிருந்து இந்தப் படகுப் போட்டியில் இருப்பதால் 8 பதக்கங்கள் தவிர ஏராளமான விருதுகள், பட்டயங்களை பெற்றிருக்கிறார்.  இது எப்படி சாத்தியமானது? விவரிக்கிறார் தீபாமகாராஜா:
"எனது தந்தை எஸ்.மகாராஜா, தாய்  எம்.லதா தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம்  பகுதியைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை மகாராஜா முன்னாள் ராணுவ வீரர் மற்றும் படகோட்டும் போட்டியில் வீரராக இருந்து பின்னாளில் பயிற்சியாளராகவும்  மாறியவர்.  "காயாகிங்' எனப்படும்  ஒருவகை படகோட்டும் போட்டியில் தேசிய அளவில் 98 பதக்கங்களை வென்றவர். கடந்த 25 ஆண்டுகளாக படகோட்டுதல் போட்டியில் ஈடுபட்டுவருகிறார். இத்துடன் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். அம்மா, என் ஊக்க  ஊற்று. எனது தம்பி மனோஜ்குமாரும் படகோட்டுதல் விளையாட்டில் ஈடுபட்டுவருகிறார். 

இந்திய அளவில் தற்போது படகோட்டும் விளையாட்டில் 300 பெண்கள்  பயிற்சி பெற்றுவருகிறார்கள். என் தந்தை படகோட்டும் பயிற்சியாளர் என்பதால், எனக்கு 15 வயதிருக்கும்போது அதாவது 2013-ஆம் ஆண்டில் கோடை  பயிற்சியைக் காண எனது குடும்பத்தோடு சென்றிருந்தேன். அப்போது  எனக்கு இந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கவில்லை.  உடல் எடையை குறைப்பதற்கு படகோட்டும் பயிற்சி உதவியாக இருக்கும் என்று கட்டாயப்படுத்தி பயிற்சியில் சேர்த்துவிட்டார் தந்தை. வேண்டா வெறுப்பாக படகோட்டும் விளையாட்டில் ஒரு மாதம் பயிற்சி எடுத்தபிறகு, விளையாட்டாக பெங்களூருவில் நடந்த 16-ஆவது சார் இளநிலை தேசிய படகோட்டும் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெண்கலப் பதக்கம் வென்றேன். 

எதிர்பாராமல் கிடைத்த இந்த வெற்றியை தொடர்ந்து, படகோட்டும் போட்டியை விளையாட்டாக கருதாமல், தீவிரமாக அணுக ஆரம்பித்தேன். அதே ஆண்டில் நவம்பர் மாதம் ஜார்கண்ட் மாநிலம், ரூர்கி நகரில் நடந்த 34-ஆவது தேசிய இளநிலை படகோட்டும் போட்டியில் நால்வர் அணியில் இடம் பெற்று மீண்டும் வெண்கலம் வென்றோம். இப்படி தான் படகோட்டும் விளையாட்டு மீதான ஆர்வம் என்னை தொற்றிக் கொண்டது. அதன்பிறகு  அடுத்தடுத்து நடந்த தேசிய படகோட்டும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றேன் . 2015, 2017-ஆம் ஆண்டுகளில் ரூர்கி, போபால் நகரங்களில் நடந்த படகோட்டும் போட்டியில் கர்நாடக அணியில் பங்கேற்று தங்கம் வென்றேன். கடந்த 4 ஆண்டுகளில் இருமுறை தாய்வான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடந்த பன்னாட்டு அளவிலான படகோட்டும் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக ஒருமுறை வெண்கலம் வென்றுள்ளேன். 

எனது அடுத்த இலக்கு, 2018-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2020-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக  படகோட்டும் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ஆகும். டோக்கியோ நகரில் படகோட்டும் போட்டியில் தங்கம் வெல்லும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். 

இந்தியாவில் ஒடிசா, கேரளம், கர்நாடகம் ஆகிய அணிகள் தான் படகோட்டுதலில் முன்னணியில் இருந்து வருகின்றன. இப்போட்டிக்கு பன்னாட்டுத்தரத்திலான  பயிற்சி மையங்கள், ஹைதராபாத்தை தவிர வேறு எங்கும் இல்லை என்பது பெருங்குறையாக உள்ளது. கர்நாடக அணியில் கீர்த்தனா, ஸ்நேகா, ஜோதி ஆகியோருடன் படகோட்டுகிறேன்.  படகோட்டும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும், கால்கள் சூடேறி வலிக்கும், மூளை சோர்வையடையும். இவற்றை முறையான பயிற்சிமூலம் பெறமுடியும் என்றால், அதற்குகந்த பயிற்சிமையம் இல்லாதது எங்களுக்கு பெருந்தடையாக உள்ளது. துடுப்பு செலுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் வழியில்லாமல் உள்ளது. பயிற்சிகளுக்கு தேவைப்படும் படகு, துடுப்பு, கருவிகள் உள்ளிட்டவைகளின் விலை ரூ.55 லட்சம் வரை இருப்பதால், இவற்றுக்கு அரசாங்கத்தையோ, பெருநிறுவனங்களையோ நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், கிரிக்கெட், கால்பந்து, பூப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் ஊக்கம், படகோட்டும் போட்டிக்கும்  கிடைக்க வேண்டும். எங்களைப் போன்ற நடுத்தர குடும்பத்தினருக்கு அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்கள் உதவ முன்வந்தால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வெல்லும் எனது ஆசை நிறைவேறும். பி.காம் முதலாமாண்டு படித்துவருகிறேன். இதற்கிடையயே ஒலிம்பிக் தங்கக்கனவு என்னை ஆட்டிப்படைத்துவருகிறது''  என்கிறார் தீபா.  
- ந.முத்துமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com