ஆசிரியையைத் தேடி வந்த விருது!

சிறு வயதில்  போலியோவால்  பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறன்  கொண்ட அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியைக்கு  "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது'  கல்வித் துறை அலுவலர்களால் தேடி வந்து வழங்கப்பட்டுள்ளது.  
ஆசிரியையைத் தேடி வந்த விருது!

சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியைக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' கல்வித் துறை அலுவலர்களால் தேடி வந்து வழங்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் செம்மலை தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு முதல் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் மு. செல்வகுமாரி. இவர், குழந்தைகளுக்கு போதிக்கும் பணியைத் தவிர, கவிதை எழுதுதல், பாட்டு, ஓவியம் வரைதல், ஒயர் கூடை முடைதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் திறன் பெற்றுள்ளார். இவர் வரைந்த பாரதியார், திருவள்ளுவர், அப்துல் கலாம் போன்றோர் படங்களை மாணவர்கள் அறிந்து விழிப்புணர்வு பெறும் வகையில், விளக்கங்களுடன் வர்ணத்தில் தீட்டி பள்ளியில் பார்வைக்கு வைத்துள்ளார். இவர் தனக்குள்ள திறனைப் பயன்படுத்தி தன் வகுப்பு மாணவர்களும் அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வழக்கமான பாடங்களைத் தவிர திருக்குறள் எழுதல், பாரதியார் கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், பாட்டுப் பாடுதல் போன்றவற்றிலும் தனித்திறனுடன் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

போலியோவால் பாதித்த இவரது வாழ்க்கை பயணம், இதுவரை பேருந்து பயணம் இல்லாமல் கடந்து விட்டது. மருத்துவப் பரிசோதனை காலங்களில் மட்டும் மிகக் குறைவான வாகனப் பயணம் மேற்கொண்ட இவர், வேறு எதற்காகவும், பேருந்து பயணம் மேற்கொண்டதில்லை என்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, தவறி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, இரு சக்கர வாகனத்தையும் தற்போது தவிர்த்து, வாக்கர் உதவியுடன் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வருகிறார்.

மனைவி போலியோவால் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ, ஆசிரியை செல்வகுமாரியின் கணவர் வெங்கடாஜலபதி போலியோவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரோட்டரி சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சேவையாற்றி வருகிறார்.

இடைநிலை ஆசிரியை தனக்கு வழங்கப்பட்ட விருதைப் பெறுவதற்கு சென்னை செல்ல முடியாத நிலையில், அரசிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார். இதன்பேரில், அரசு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் விருதை வழங்க அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷாதேவி இந்த விருதை மு.செல்வகுமாரிக்கு அண்மையில் வழங்கிப் பாராட்டினார். இவருக்கு வெள்ளி விருது, அரசு சான்றிதழ், ரூ.10 ஆயிரம் ரொக்கம் போன்றவை வழங்கப்பட்டன.
- ஆர்.ரமேஷ் கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com