நெற்றிக்கண்! 11 - ஜோதிர்லதா கிரிஜா

அழுகிற அளவுக்கா இந்தப் பெண் என் மீது அன்பு கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய  துரை மலைத்துப்போனான்.
நெற்றிக்கண்! 11 - ஜோதிர்லதா கிரிஜா

அழுகிற அளவுக்கா இந்தப் பெண் என் மீது அன்பு கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய  துரை மலைத்துப்போனான். பெருமையாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தாலும், அவனுக்கும் கண்கள் கலங்கின. "நான் ஏன் என் காதலை அவளிடம் சொன்னேன்? சொல்லாமலே இருந்திருந்தால் அவள் தானாக என்னைக் காதலிக்க முற்பட்டிருக்கப் போவதில்லை. கடைசியில் உண்மையாய்க் காதலிக்கும் எல்லாக் காதலர்களையும் போல் நாங்களும் தோற்றுத்தான் போகப் போகிறோமா?' என்று அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
"அழுவாதீங்க, தாமரை! யோசிப்போம். என்ன செஞ்சு இந்த இக்கட்டுலேர்ந்து மீளலாம்னு பாப்போம்.  ஆனா நாம சந்திச்சுப் பேசவே முடியாது போல இருக்கே?''
"ஒரு நிமிஷம், துரை!'' என்று சொல்லிவிட்டுத் தாமரை ராணியுடன் பேசியபின் சொன்னாள்.  "அதுக்கு ஒரு வழி இருக்கு, துரை.  ராணி அதுக்கு உதவி பண்றேங்குது.  எப்பிடின்னா, அவங்கப்பாவுக்கு அனந்தப்பூருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயி, ரெண்டு நாளுக்கு முந்தித்தான் கௌம்பிப் போனாரு.  இப்ப அவங்க வீட்டில ராணியும் அவங்கம்மாவும்மட்டுந்தான் இருக்காங்க. அதனால நீங்க ராணிக்கு உங்க லெட்டர்ஸை அனுப்பலாம்.  அவ எங்கிட்ட சேர்த்துடுவா.  அப்படியே, என் லெட்டர்ஸையும் அவளே உங்களுக்கு அனுப்பிடுவா.  ஆனா, இங்கிலீஷ்ல தான் எழுதணும். என்ன சொல்றீங்க?''
இப்படித்தான் அவர்களுக்குள் கடிதப் போக்குவரத்து ஆரம்பித்து வளர்ந்தது.
 கெளசல்யாவின் திருமணத்துக்குச் சதாசிவம் வரவில்லை. ராணியும் மஞ்சுளாவும் வந்தார்கள். தாமரையிடமிருந்து ராணியின் மூலமாய்ப் பரிசுப்பொருள் மட்டும் வந்தது.  சதாசிவத்தின் எதிரொலி எதிர்பார்த்ததுதான் என்றாலும்,  சேதுமணி அவர் ஏன் வரவில்லை என்று கேட்ட கேள்விக்குத் துரை கணம் போல் திகைத்துவிட்டுத்தான்,  "அவருக்கு மேலுக்குச் சொகம் இல்லியாம்.  அவரு மகளோட  சிநேகிதிங்ககிட்ட சொல்லி யனுப்பியிருந்தாரு.  அதனாலதான் அந்தப் பொண்ணு கூட வரல்லே.  அப்பா ஆஸ்பத்திரியில இருக்கையிலே எப்படி  அது வரும்? ஆனா, பரிசுப் பொருள் குடுத்து அனுப்பியிருக்காரு, பாரு'' என்று தாமரை அனுப்பிவைத்திருந்த இரண்டு வெள்ளிக் குத்துவிளக்குகளை அவளிடம் காட்டினான்.                                                                                                                                           "கல்யாணத்துக்குப் பண உதவி பண்றேன்னாரே, பண்ணினாரா? பண்ணியிருந்தா நீயே என்கிட்ட சொல்லியிருந்திருப்பேதான். இருந்தாலும் மறந்துட்டியோன்றதுக்காகக் கேக்குறேன்,'' என்று அவள் தொடர்ந்தபோது, தேவையற்றுப் பொய் சொல்லும் பழக்கம் இல்லாத அவன் சற்றே வாயிழந்துதான் போனான். எனினும் சுதாரித்துக் கொண்டு, "இல்லேம்மா. ஒருக்கா, அப்பால குடுக்கலாம்னு இருக்காரோ என்னமோ! விடுங்கம்மா. பணக்காரங்க பேச்சுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது. நம்மள மாதிரி ஏழை பாழைங்களைப் பத்தியெல்லாம் அவங்களுக்கு ஞாபகமும் கிடையாதும்மா'' என்றான்.
"நீ ஞாபகப்படுத்தலாமேப்பா?'' என்று அவள் விடாப்பிடியாய்த் தொடரவும், "அது நல்லாருக்காதும்மா. பிச்சை கேக்குற மாதிரி இருக்கும்.  அதான் கல்யாணச் செலவைக் கடன் கிடன் வாங்காமயே சமாளிச்சுட்டோமில்ல?'' என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டான். சேதுமணியும்  அந்தப் பேச்சை அதன் பிறகு எடுக்கவில்லை.
ஆனால், அவன் சதாசிவத்தின் கீழ் வேலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு சேதுமணிக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம் மிகச் சில  நாள்களில் நிகழ்ந்து விட்டது. 
அவன் புறப்பட்டுப் போன பின், எதிர்வீட்டு அம்மாளுடன் கடைக்குப் போன சேதுமணி வெகு நேரம் பேருந்துக்கு நின்று அலுத்துப் போய், ஆட்டோவில் போகலாம் என்று அந்த அம்மாளின் சம்மதத்துடன் தீர்மானித்தாள்.  தீர்மானித்த இரண்டே நிமிடங்களில் ஓர் ஆட்டோவைக் கைகாட்டி அவர்கள் நிறுத்த,  அது துரையின் ஆட்டோவாக இருந்தது. ஓட்டுநரின் இடத்தில் அவனைப் பார்த்துவிட்டு இருவருமே வியப்படைந்தார்கள்.
சேதுமணி தன்னைப் பார்த்துவிட்டது தெரிந்ததால், ஆட்டோவை நிறுத்துவதைத் தவிர அவனுக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று.
"என்னப்பா!?'' என்று வியந்தும் அதிர்ந்தும் கேட்டவாறு எதிர்வீட்டுக் கனகம்மாளுடன் ஆட்டோவினுள் ஏறியமர்ந்த தாயிடம், "இன்னைக்கு எங்க முதலாளி வரல்லேம்மா. எனக்கும் லீவு குடுத்துட்டாரு. அதான் ஆஃபீஸ் வாசல்ல சும்மா நிறுத்தியிருந்த வண்டியை ஓட்டி நாலு காசு பாக்கலாமேன்னு கிளம்பிட்டேன்,'' என்று அவன் சமாளித்தான்.
"எங்க கிட்டேர்ந்து நீ காசு பாக்க முடியாதேப்பா!'' என்று சேதுமணி சிரித்த சிரிப்பில் அவன் கலந்துகொண்டான்.
வீட்டையடைந்ததும், சேதுமணி வாங்கியிருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு அவளுடன் உள்ளே போன அவனுக்குக் காப்பி போட்டுக் கொடுத்துத் தானும் குடித்த பின் அவள், "உக்காருப்பா.  ஆட்டோவை எடுத்துக்கிட்டுக் கௌம்பிறாதே. உன்னோட   நான் கொஞ்சம் பேசணும்!''  என்றாள்.    
அப்போதே அவனுக்குப் புரிந்துவிட்டது தனது வண்டவாளம் எப்படியோ சேதுமணிக்குத் தெரிந்து விட்டது எனும் உண்மை. எனினும் எவ்வாறு தெரிந்தது என்பதைத்தான் ஊகிக்க முடியவில்லை. அவன் உட்கார்ந்தான்.
மாமியாருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிய தாமரையின் எண்ணங்கள் தொடர்ந்தன. 
வீட்டுக்காவலில் தான் வைக்கப்பட்டது,  தன் அப்பா தன்னிடமிருந்து கைப்பேசியைப் பறித்துக்கொண்டது, அதன்  பிறகு ராணியின் ஒத்தாசையுடன் வாராவாரம் இரண்டு கடிதங்கள் தாங்கள் இருவரும் பரிமாறிக்கொண்டது, எனினும் இருவரும் எழுதிக்கொண்டவை அர்த்தமற்ற வெறும் புலம்பல் கடிதங்களாகவே இருந்தது, இடையிடையே வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ராணியின் வீட்டு மொட்டை மாடியில் அவளது கைப்பேசியில் தான் அவனுடன் பேசியவை யாவும் அவளுக்கு ஞாபகம் வந்தன. 
இருவருக்குள்ளும் இரகசியக் கடிதப் போக்குவரத்தும், தொலைபேசி உரையாடல்களும் நிகழத்தொடங்கியதன் பின் சில நாள் கழித்துத் துரை அவளுக்கு ராணியின் கைப்பேசியில் அந்தச் சேதியைச் சொன்னான். 
"தாமரை! ரெண்டு, மூணு விஷயம் இருக்கு சொல்றதுக்கு. ஒண்ணு, நானும் மொபைல் வாங்கிட்டேன். அதுலேர்ந்துதான் பேசறேன். ராணியோட மொபைல்ல டிஸ்ப்ளே ஆகியிருக்கும், பாத்து, குறிச்சு வச்சுக்குங்க. எங்க அம்மாவுக்கு நம்ம விஷயத்தைச் சொல்லும்படி ஆயிடிச்சு.  அவங்களுக்கும் தெரிய வேண்டிய விஷயந்தான்னாலும், இப்பவே கவலைப்பட ஆரம்பிப்பாங்களேன்னுதான் ஒத்திப் போட நினைச்சேன். ஒரு நாள் நான் ஆட்டோ ஓட்டினதை அவங்களே பாத்துட்டாங்க. நான் அன்னைக்கு உங்கப்பா லீவுன்னும் அதனால நானும் லீவுன்னும் சொன்னதை அவங்க நம்பல்லே. நம்பாததுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.  அன்னைக்குக் காலையில எங்கம்மாவுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்திருந்திருக்குது.''
"மொட்டைக் கடுதாசியா? என்ன எழுதியிருந்திச்சு அதிலே?''
"தமிழ்ல டைப் அடிச்ச கடுதாசி அது.  உங்க அப்பா ஆஃபீஸ் டைப்ரைட்டர்ல அடிச்சதுதான். "எ', "இ', "உ' இந்த மூணு எழுத்துகளும் லைன் பிசகி மேலாக எழும்பி நின்னதுலேர்ந்து கண்டுபிடிச்சேன்.''
"எங்கப்பாவே டைப் அடிச்சு அனுப்பியிருப்பாருன்றீங்களா?  எங்கப்பாவுக்கு இங்கிலீஷ் டைப்பிங்தான் தெரியும்...''
"ஆளு வெச்சுப் பண்ணியிருக்கலாமே. தவிர அதொண்ணும் பிரமாதமில்லே.  தட்டித் தடவி அடிச்சுடலாம்.''
"சரி. சொல்லுங்க.''
"உங்க மகன் இப்ப வேலையிலே இல்லே. அவர் வேலை செய்துட்டிருந்த ஆஃபீஸ்ல பணம் கையாடிட்டதால வேலையை விட்டு நிப்பாட்டிட்டாங்க.  அதுவும் இல்லாம, ஆஃபீஸ் மேனேஜரோட பொண்ணைக் கல்யாணம் கட்ட ஆசைப்பட்டிருக்கான். அது மேனேஜருக்குத் தெரிய வந்தது இன்னொரு காரணம். அந்தப் பொண்ணைக் கல்யாணம் கட்டுற எண்ணத்தை விடல்லேன்னா உங்க மகன் உசிருக்கே ஆபத்து.  உங்க மகன் உங்களுக்கு உசிரோட வேணுமா, வேண்டாமா? அவன் உசிரோட இருக்கணும்னா, அந்த எண்ணத்தைக் கைவிடச் சொல்லுங்க''  அப்படின்னு அதில எழுதியிருந்திச்சு. காட்டினாங்க. அப்பால எல்லாத்தையும் எங்கம்மா கிட்ட சொல்ல வேண்டியதாச்சு.''
"பாவம்ங்க உங்கம்மா. .. ஆனா குலைக்கிற நாய் கடிக்காதுங்க. எங்கப்பா அந்த அளவுக்கெல்லாம் போக மாட்டாருன்னுதாங்க நினைக்கிறேன்.''
"நினைச்சிட்டு இருங்க. என் மேல திருட்டுப் பழி சுமத்தி வேலையை விட்டு நிப்பாட்டினது பத்தாதுன்னு, மேல மேல டார்ச்சர் குடுக்கிறதுன்ற எண்ணத்துலதான் உங்கப்பா இருக்காரு. நேத்து ஒரு தடியன் என்னை மிரட்டினான். நான் இந்த ஊரை விட்டே போயிறணுமாம். விட்டேன் பாருங்க ஒரு கராத்தே குத்து.  ஆளு ரெண்டு மணி நேரத்துக்கு எந்திரிச்சிருக்க மாட்டான்.... அப்புறம் நேத்து என்னை வழியில ஆட்டோ ஸ்டாண்ட்கிட்ட பாத்துட்டுக் காரை நிறுத்தி உங்கப்பா என்னைக் கூப்பிட்டாரு. என்னதான் சொல்றாரு பாத்துடலாம்னு போனேன்.  கார்ல ஏறச் சொல்லல்லே.  நான் கராத்தே தெரிஞ்சவன்கிற பயமாய் இருக்கலாம். வெளியவே என்னை நிக்க வெச்சு மிரட்டினாரு. "கராத்தேயெல்லாம் கத்து வெச்சிருக்கிறே போல இருக்கே? அடுத்த வாட்டி நானும் கராத்தே தெரிஞ்ச ரெண்டு மூணு ஆளுங்களை அனுப்பறேன். அப்ப என்ன பண்ணுவே'' ன்னாரு. "அனுப்பிட்டு, அப்பால பாருங்க'' ன்னேன். அப்புறம், இந்த ஊரை விட்டே ஓடிடு. உனக்கு அஞ்சு லட்சம் தர்றேன்னாரு''
"அது ஏன்னு தெரியுமா? முந்தாநாளு ஒருத்தரைப் பொண்ணு பாக்கக் கூட்டிட்டு வர்றதா இருந்தாரு. நான் அழுது ரகளை பண்ணிட்டேன். முகமெல்லாம் வீங்கிப் போயிடிச்சு. கண்ணும் இடுங்கிப் போயிடிச்சு. அதனால அதைக் கேன்சல் பண்ணிட்டாரு. சரி. அது கிடக்கட்டும் அஞ்சு லட்சத்துக்கு நீங்க என்ன சொன்னீங்க?''
"நான் என்ன சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க?''
"அம்பது லட்சமே குடுத்தாலும் அது நடக்காதுன்னு தானே?''
"அதைப் பத்தால பெருக்குங்க... புரியலியா? அஞ்சு கோடியே குடுத்தாலும் நடக்காதுன்னு சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகந்துட்டேன், தாமரை!''
அவன் இவ்வாறு சொன்ன கணத்தில், "மொட்டை மாடியில என்னடி பண்ணிட்டு இருக்கே? யாரோட டீ செல்லுல பேசிக்கிட்டு இருக்கே?'' என்னும் கனத்த குரல் அவன் செவிகளிலேயே விழுகிற அளவுக்கு வலுவாய்க் கேட்க, பேசும் மும்முரத்தில் இருந்த தாமரை அருகில் நெருங்கிவிட்ட அம்மா விசாலாட்சியைப் பார்த்ததும் வெலவெலத்துப் போனாள். 
 -  தொடரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com