சமையல்.... சமையல்.... சமையல்....

பால் கொழுக்கட்டை, பசலைக் கீரை பஜ்ஜி, கேரட் ஹெல்த் பானம், கருப்பு உளுந்து கிச்சடி, கேரட் புதினா சாதம்

பால் கொழுக்கட்டை

தேவையானவை:
பால் - அரை லிட்டர்
பச்சரிசி மாவு - 1கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 2 சிட்டிகை
வெல்லம் - 1 கிண்ணம்
முந்திரி - 5
நெய் - 50 கிராம்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
செய்முறை:   அரிசியை 2 மணிநேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து மாவாக அரைத்து சலித்து பின்பு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.  பின்னர் தண்ணீரில் 2 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொதிக்க வைத்து  இறக்கி அதனுடன்  தயார் செய்து வைத்த  அரிசி மாவை சேர்த்து  கொழுக்கட்டை மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து  கொள்ளவும்.  பின்னர், மாவை நீள வடிவில் உருட்டி ஆறவிட வேண்டும். 
பிறகு, அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும்.  பின்னர், உருட்டி வைத்துள்ள  அரிசி மாவை  காய்ச்சியப்  பாலில்  சேர்த்து நன்கு வேக விடவும்,  மாவு நன்கு வெந்ததும், அத்துடன் வெந்த  கடலைபருப்பை சேர்த்து, பின்னர்  கெட்டிப்பாகாக காய்ச்சிய வெல்லத்தை அத்துடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.  பின்னர், நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி இறக்கி விடவும். சுவையான பால் கொழுக்கட்டை  ரெடி.

பசலைக் கீரை பஜ்ஜி

தேவையானவை:
 பசலைக்கீரை  - 10
கடலைமாவு - 100  கிராம்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
 சின்ன வெங்காயம் - 2
மிளகாய் - 5
சீரகம் அல்லது ஓமம் - 1 தேக்கரண்டி
 பெருங்காயம் - 1 சிட்டிகை
சோடாமாவு - 1 சிட்டிகை
 எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:   பசலைக்கீரையை நன்கு கழுவி துடைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய்விட்டு காய வைக்க வேண்டும் அதற்கு முன்பு  மிக்ஸியில் பூண்டு, சின்னவெங்காயம்,  மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதனை கடலைமாவு, அரிசி மாவுடன் சேர்த்து பெருங்காயம், உப்பு, சோடாமாவு  சேர்த்து நன்கு கெட்டியாக தோசை மாவு பதத்திற்கு  கரைத்துக்  கொள்ளவும்.  பின்பு கீரையை எடுத்து மாவில் தோய்த்து எண்ணெய்யில் சுட்டு எடுக்கவும். இலை பெரியதாக இருந்தால் இரண்டாக வெட்டிக் கொள்ளலாம்.  இந்த பஜ்ஜி வேக சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.  ஆனால்  நல்ல மொறு மொறப்பாக இருக்கும். சுவையான பசலைக் கீரை பஜ்ஜி தயார்.

கேரட் ஹெல்த் பானம்

தேவையானவை:
 கேரட் - 2
பாதாம் - 10
முந்திரி - 10
பிரவுன் சுகர் - 1 கிண்ணம்
பால் - அரை லிட்டர்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 2 சிட்டிகை
செய்முறை:   மிக்ஸியில் வேகவைத்த கேரட், தோல் நீக்கிய பாதாம், முந்திரி சேர்த்து நன்கு அடித்து பின்பு ஒரு பாத்திரத்தில் பால், சிறிதளவு நீர் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். அதில்  நைசாக அரைத்து வைத்துள்ள  கலவையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். (லேசாக கொதித்தால் போதும்) பின்பு  அதில் ஏலக்காய்த் தூள், பிரவுன் சுகர் சேர்த்து கலந்து கொடுத்தால் கேரட் ஹெல்த் பானம் தயார்.
குறிப்பு: குழந்தைகளுக்கு மிகவும் நல்லதொரு ஹெல்த் பானம் இது.  குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர செய்து பிறகு கொடுத்தால் குழந்தைகள் விரும்பி 
அருந்துவார்கள்.

கருப்பு உளுந்து கிச்சடி

தேவையானவை:
சீரகச் சம்பா அரிசி - 1 கிண்ணம்
வறுத்த கருப்பு உளுந்து - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1 கிண்ணம்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
 தாளிக்க: 
இலவங்கம் பட்டை
இலை, ஏலக்காய் -  தலா 2 துண்டுகள்
முந்திரி - 5
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:   முதலில் குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை தாளித்து கொண்டு, வெங்காயம் சேர்க்கவும். பின்பு இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பின்பு அரை மணி நேரம் ஊற வைத்த சீரக சம்பா அரிசி, உளுந்து சேர்த்து வதக்கவும்.  பின்னர்,  காய்கள், தக்காளி சேர்த்து வதக்கவும்.     உப்பு சேர்க்கவும். பின்னர்  (1கிண்ணம் அரிசிக்கு 2 கிண்ணம் தண்ணீர் மற்றும் 1 கிண்ணம் உளுந்துக்கு ஒன்றரை கிண்ணம் தண்ணீர் வீதம்)  மூன்றரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து  3 விசில் விடவும். சுவையான சத்தான உளுந்து  கிச்சடி ரெடி.

கேரட் புதினா சாதம்
தேவையானவை:
புதினா - ஒரு கட்டு
பாஸ்மதி அரிசி - ஒரு கிண்ணம்
துருவிய கேரட் - 3
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - ஒன்று
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2   தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் -  2 
எண்ணெய்  - 4  தேக்கரண்டி 
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :  புதினா இலை,  சின்ன வெங்காயம், சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து அரைத்து வைக்கவும். அரிசியை  அரை  மணி  நேரம்  ஊறவைக்கவும்.  குக்கரில்  எண்ணெய், நெய்   விட்டு சோம்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு  நன்கு  வதக்கவும். அதனுடன்   கேரட்டை போட்டு வதக்கவும்.  பின்பு அரைத்த புதினாவைப் போட்டு வதக்கி, அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு , 2 கிண்ணம் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு  குக்கரை  மூடி  அடுப்பை  10 நிமிடங்கள்   சிம்மில்  வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும். பின் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து  நன்கு கிளறி பரிமாறவும்.  சுவையான கேரட் புதினா சாதம்  ரெடி.

கோஸ் மசாலா

தேவையானவை 
கோஸ் - கால் கிலோ
பொடியாக நறுக்கிய  வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு -  தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மசாலாவுக்கு வறுத்த அரைத்தப் பொடி :
தனியா - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், மிளகாய் தாளித்து பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும் கோஸ், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் உப்பு  சேர்த்து கிளறி, லேசாக தண்ணீர்  தெளித்து  மூடி விடவும்.  கோஸ்   வெந்ததும்  கொர கொரப்பாக வறுத்து அரைத்தப் பொடி சேர்த்து  கிளறி  கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை தூவி 
இறக்கவும்.  சுவையான  கோஸ்  மசாலா ரெடி.  

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் கு.பத்மபரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com