மடிசாரில் கால் கடுக்க ஓடினேன்!

ஆகஸ்ட் 20. ஹைதராபாத் நகரின் ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகில் இருக்கும் மிக அகலமான சாலை.
மடிசாரில் கால் கடுக்க ஓடினேன்!

ஆகஸ்ட் 20. ஹைதராபாத் நகரின் ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகில் இருக்கும் மிக அகலமான சாலை.

டி ஷர்ட்... அரைக் கால் டிரெளசர்... சிலர் டிராக் சூட்டில்.. எல்லாம் பல வண்ண நிறங்களில் அனைவரும் சொல்லி வைத்தது போல் காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து நின்று கொண்டிருந்தார்கள். 42.2 கி.மீ. ஓட வேண்டிய மாரத்தான் ஓட்டம், ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகிலிருந்து காலையில் தொடங்கியது. ஆண்கள் பெண்கள் என்று சுமார் இருபதாயிரம் பேர்கள் ஓடினார்கள் .

திடீரென்று பார்வையாளர்களை மலைக்கச் செய்தார் ஒரு பெண்மணி.. ஆம்..! அனைவரையும் திகைக்க வைக்கும்படியாக ஒரு மடிசார் பெண்மணி காலில் ஷூ இல்லாமல் செருப்பு அணிந்து ஓடி வந்து கொண்டிருந்தார். அவர் ஓட்டத்தில் தொழில்முறை ஓட்ட வீரர்களின் வேகம் இல்லையென்றாலும் சீரான வேகத்தில் சளைக்காமல் ஓடிக் கொண்டிருந்தார். "மாமி இப்ப ஓட்டத்திலிருந்து விலகிக் கொள்வார்' என்று பல இடைவெளிகளில் பலர் ஆரூடம் சொன்னாலும் அவை ஒன்றும் பலிக்கவில்லை. கடைசிவரை நிதானமாக ஓடி 42.2 கி. மீ. தூரத்தைக் கடந்து காட்டினார். அவரைப் பாராட்டாதவர்கள் இல்லை. முதல் மூன்று வெற்றியாளர்கள் வேறு யாரோ என்றாலும், அந்த மாரத்தான் ஓட்டத்தின் முக்கிய கவன ஈர்ப்பு மையமாக இருந்தது அந்த மடிசார் பெண்மணிதான் .

"ஏன் சேலை... அதுவும் மடிசார் அணிந்து மூச்சிரைக்க மாரத்தான் ஓட்டம் ஓடணும்' இந்தக் கேள்வியைத்தான் மாரத்தானைப் பார்த்த ஒவ்வொரு பார்வையாளர்களும் கேட்டார்கள்.

நாற்பத்தி நான்கு வயதாகும் அந்த "மடிசார் பெண்மணியான' ஜெயந்தி சம்பத் விளக்கினார்:
"நான் சென்னையைச் சேர்ந்தவள். "பத்மா சேஷாத்திரி'யில் படித்தவள். பி.டெக் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்தேன். கணினி விஞ்ஞானம் அமெரிக்காவில் முடித்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முதன்மை பொறியியல் மேலாளராக ஹைதராபாத்தில் பத்தாண்டுகளாகப் பணி புரிந்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள்.

மாரத்தானில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் ஓடவில்லை. நான் சேலைப்பிரியை. தினமும் சேலை கட்டுபவள். என் அம்மா, பாட்டியிடமிருந்து எனக்கு வந்த பாரம்பரியம். " வீட்டில் பீரோக்களில் கணவர் உடைகளை விட எனது சேலைகள் தான் அதிக இடங்களை ஆக்கிரமித்திருக்கிறது'' என்று கணவர் அடிக்கடி குற்றம் சாட்டுவார். இந்தியாவின் பல மாநிலங்களில் தயாராகும் சேலைகளை விரும்பி வாங்குவேன்.

இப்போதைய பெண்கள் சேலை கட்டுவது வெகுவாக குறைந்துவிட்டது . இந்த நிலை நீடித்தால் சேலை நெய்யும் நெசவாளர்களின் கதி என்ன ஆகும் ..? அதனால் கைத்தறி உடைகளை பிரபலப்படுத்தவும், சேலையில் பெண்களுக்கு மன திடம் ஒரு நம்பிக்கை உருவாகும் என்பதைச் சொல்லவும், பெண்களை இந்த மாதிரி ஓட்டங்களில் பங்கெடுக்க ஊக்குவிக்கவும்தான் மடிசார் கட்டிக் கொண்டு மாரத்தான் ஓடினேன்.

நான் அடிப்படையில் சைக்கிள் சவாரி செய்பவள். சைக்கிளில் நீண்ட தூரம் போவது எனக்கு பொழுது போக்கு. ஆனால் இந்த மாரத்தானில் 2013- இல் அறுபத்தொன்று வயதான லதா பகவான் கரே என்ற பெண்மணி சேலை அணிந்து காலணி ஏதும் போட்டுக் கொள்ளாமல் வெறும் காலில் ஓடி சாதனை புரிந்திருக்கிறார். நானும் வெறுங் காலால் ஓடலாம் என நினைத்திருந்தேன். சாலையில் இருக்கும் கற்கள் பாதத்தைப் பதம் பார்க்கும் என்பதால் சாதா செருப்பு ஒன்றை மாட்டிக் கொண்டேன். மாரத்தானை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதினால் மடிசார் அணிந்து ஓடினேன். துணையாக இருபத்தேழு வயதாகும் உதயபாஸ்கர் என்பவர் வேட்டி அணிந்து கொண்டு ஓடிவந்தார். நான் ஓடியதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று நண்பர்கள் சொன்னதால் அதற்கு முயன்று கொண்டிருக்கிறேன்.

இந்த மாரத்தான் ஓட்டத்திற்காக 2016-ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே பயிற்சி எடுக்க ஆரம்பித்து விட்டேன். முதலில் ஐந்து கி. மீ தூரம் ஓடி.. பிறகு படிப்படியாக மாரத்தான் தூரம் ஓடி பயிற்சியைத் தொடர்ந்தேன். 2015 - இல் ஹைதராபாத்தில் நடந்த மாரத்தானில் ஓடியுள்ளேன். பத்தாயிரம் மீ. தூர ஓட்டங்களிலும் பங்கெடுத்துள்ளேன். கணவரும் என்னுடன் ஓடுவார். அந்த ஓட்டங்கள் எல்லாம் டிராக் சூட்டில் ஓடியது. சேலையுடன் ஓட பயிற்சி வேண்டுமே... அதனால் ஆறு கஜ, ஒன்பது கஜ நீள சேலைகளை மஹாராஷ்டிர, மடிசார் ஸ்டைல்களில் உடுத்திக் கொண்டு ஓடி ஐந்து மாதமாகப் பயிற்சி பெற்றேன். அப்படி ஓடியதில் பல முறை சேலை தடுக்கி கீழே விழுந்துமிருக்கிறேன். காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டன. கடைசியில் மடிசார் ஸ்டைலில் சேலையை சில மாற்றங்களுடன் உடுத்தி ஓடி ஓட்டத்தை எளிதாக்கிக் கொண்டேன்.

சேலை அணிந்து மாரத்தான் ஓடத் தீர்மானித்த பிறகு, மாரத்தான் ஓட்டத்தில் சம்பிரதாய உடை அணியாமல் வேறு யாராவது ஓடியிருக்கிறார்களா என்று வலைத் தளத்தில் அலசினேன். அப்படி அலசியதில். "பாதி மாரத்தான்' ஓட்டத்தில் ஒருவர் கோட் சூட்டுடன் ஓடிய செய்தி கிடைத்தது. இந்த செய்திதான் என்னை சேலை உடுத்தி ஏன் ஓடக் கூடாது என்று தூண்டியது'' என்கிறார் ஜெயந்தி..
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com