கேரம் விளையாட்டிலும் சாதிக்க முடியும்! 

"கறுப்பு, வெள்ளை காய்களோடு  கேரம் போர்டு முன்னால் அமர்ந்தால் பலருக்கு நேரம் போவதே தெரியாது.  அப்படி சுண்டி இழுக்கும் இந்த "சுண்டாட்டம்'  பொழுதுபோக்காக மட்டுமல்ல .
கேரம் விளையாட்டிலும் சாதிக்க முடியும்! 

"கறுப்பு, வெள்ளை காய்களோடு  கேரம் போர்டு முன்னால் அமர்ந்தால் பலருக்கு நேரம் போவதே தெரியாது.  அப்படி சுண்டி இழுக்கும் இந்த "சுண்டாட்டம்'  பொழுதுபோக்காக மட்டுமல்ல .  உலக சாதனைக்காகவும் விளையாடலாம்'' என்று சொல்கிறார் கேரம் விளையாட்டில் மூன்று முறை உலகளவில்  சாம்பியன் பட்டம்  வென்று  உச்சம் தொட்ட இளவழகி.  6 வயதிலிருந்து விளையாடி வரும் இவர்,  25 ஆண்டுகளில் 210 தங்கமும், 35 வெள்ளியும், 17 வெண்கலமும்  தட்டி வந்தவர்.   இவரை சந்தித்தோம்:

"என் அப்பா இருதயராஜ் ஒரு ரிக்ஷா ஓட்டுநர், அம்மா செல்வி குடும்பத்தலைவி. எனக்கு இரு சகோதரிகள் உண்டு. நான்தான் மூத்தவள்.   என் அப்பாவுக்கு என்னை கேரம் விளையாட்டில் கொண்டு வர வேண்டும் ஆசை இருந்ததால் பெரிதும் பாடுபட்டு கேரம் விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டார்.

ஆறு வயதிலிருந்து கேரம் விளையாடி வருகிறேன்.  ஒவ்வொரு போட்டியிலும் வென்று வர வர அவருக்கு ஆர்வம் அதிகமாகி எனக்காக மேலும் மேலும் உழைக்க ஆரம்பித்தார்.  இந்நிலையில் 2003-இல்  இந்தியா சார்பில் அமெரிக்கா சென்று  விளையாட    ஓர் வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் அதற்கான ஸ்பான்ஸர் கிடைக்கவில்லை. இந்நிலையில் எப்படி அமெரிக்கா செல்வது என்று நினைக்கும்போது,  ஐ.ஏ.எஸ். காந்தி ஐயாவை  சந்திக்க  வாய்ப்பு கிடைத்தது.

அவர் என் நிலையை அறிந்து  எனக்கு ஸ்பான்ஸர் வழங்கி என்னை அமெரிக்கா அனுப்பி வைத்தார்.  அந்த போட்டியில் மூன்றாமிடமும் "பெஸ்ட்' அவார்டும் கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவர்தான் இன்றுவரை எனக்கு ஸ்பான்ஸர் வழங்கி வருகிறார்.  அவரால்தான் இன்று நான் ஒரு உலக கேரம் சாம்பியனாக வர முடிந்தது. 

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எங்கள் பகுதியில் உள்ள பின் தங்கிய மக்களின் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  இதனால் எங்கள் பகுதியில் வாடகைக்கு ஓர் இடம் பிடித்து அதில் WORLD CARROM CHAMPION  ACADEMY  என்ற  பயிற்சி மையத்தை தொடங்கினேன்.  

இந்த பயிற்சி மையத்தில் இருக்கும் பிள்ளைகள்  எல்லாம் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்த  ஆட்டோ டிரைவர் பிள்ளைகள், கூலி தொழிலாளி பிள்ளைகள்தான்.  மாதவரம் தவிர,  தற்போது  அம்பத்தூர், திருவாரூரிலும் எங்கள் பயிற்சி மையம் இருக்கிறது.  இந்த மையங்களில் கிட்டத்தட்ட   60 பிள்ளைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.  இவர்களை எல்லாம் வருங்கால கேரம் சாம்பியன் ஆக்க வேண்டும்  என்பதே என் லட்சியம்.  ஆனால் தற்போது நாங்கள் தங்கியிருக்கும் வாடகை இடத்திற்கே பெரும்பகுதி செலவாகிவிடுவதால்.  இந்த குழந்தைகள் பயிற்சிக்கான போதிய நிதி கிடைக்காமல் சிரமப்படுகிறோம். வாடகை சுமை குறைந்தாலே அது இன்னொரு பிள்ளைக்கு பயன்படும் என்பதால் தற்போது  சொந்தமாக  ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்று முயன்று வருகிறோம்.  அதற்கு ஸ்பான்ஸர் கிடைத்துவிட்டால் இந்த குழந்தைகளுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கித் தரமுடியும். 

இதற்காகவே சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்துஅவர்கள் நாட்டிற்காக விளையாட வரும்படியும்   5 லட்சம் சம்பளத்துடன்  எனக்கு வந்த அழைப்பையும் தவிர்த்து விட்டேன். 

தற்போது எங்கள் பயிற்சி மையத்திலிருந்து சப் - ஜூனியர் மாநில அளவில் விளையாட  மேத்யூ எனும்  10 வயது  சிறுவனும்,   சீனியர் நேஷனலுக்கு ஒன்பது பேரும்,   ஜூனியர் நேஷனலுக்கு  4 பேரும் தேர்வாகியிருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் நல்ல ஸ்பான்ஸர் கிடைத்தால் இவர்களும்  வருங்காலத்தில் இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி வருவார்கள்.
 - ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com