சக்கைப்போடு போடும் சர்கம்!

சேர்ந்திசை என்றால் எம்.பி. சீனிவாசன் நினைவு வராமல் இருக்காது.  இப்போது அவர் விட்ட இடத்தை பெருமிதம் கொள்ளும் வகையில் சுதா ராஜா  "சர்கம்' என்ற அமைப்பு மூலம் நிரப்பியிருக்கிறார் என்பதுதான் ஆறுதல் தரும் செய்தி.
சக்கைப்போடு போடும் சர்கம்!

சேர்ந்திசை என்றால் எம்.பி. சீனிவாசன் நினைவு வராமல் இருக்காது.  இப்போது அவர் விட்ட இடத்தை பெருமிதம் கொள்ளும் வகையில் சுதா ராஜா  "சர்கம்' என்ற அமைப்பு மூலம் நிரப்பியிருக்கிறார் என்பதுதான் ஆறுதல் தரும் செய்தி.

சுதா ராஜா பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடச் சொல்லிக் கொடுப்பது, சேர்ந்திசை மூலம்.  உலகின் அமெரிக்கா போன்ற முக்கிய நகரங்களில் இவர் தம் குழுவுடன் சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடத்திப் பரிசுகள் பெற்று வருவது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.   "ஸ்பிக்மெக்கே'  என்ற இளைய தலைமுறையினருக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் இசையைக் கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு பகுதியாக,  தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளை சேர்ந்திசை நிகழ்ச்சியில் பாட வைத்து வருகிறார்.  இதில் பியானோ கலைஞர் அனில் சீனிவாசனின் பங்கு கணிசமானது.  பாடகர் உண்ணிகிருஷ்ணனின் மகள் உத்தராவும் சர்கம் குழுவில் சேர்ந்து பாடி வருகிறார்.

சுதா ராஜா பள்ளிக்குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் தயங்காதவர்.  அவர் சமீபத்தில் லண்டனில் தம்முடன் அழைத்துச் சென்ற காயர் குழுவை, அதாவது சேர்ந்திசைக் குழுவை, அங்கே பாட வைத்துப் பரிசும் பெற்று வந்திருக்கிறார்.  அங்கே தமிழ்ப் பாட்டுகள் முழங்கின என்பது முக்கியச் செய்தி.  லண்டனில் ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப் புகழ் பெற்ற கலை அரங்கம்.  அங்கே பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடும்,  ஜெயபேரிகை கொட்டடாவும், பாரத சமுதாயம் வாழ்கவேயும், நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் பாடலும் பாடிவிட்டு வந்திருக்கிறார்கள்.  ஜெய பேரிகையும், பாரத சமுதாயமும் எம்.பி. சீனிவாசன் மெட்டமைத்தவை!

இந்த 2017ஆம் ஆண்டு இந்தியா-யு.கே. கலாசார வருடம்.  அதைக் கொண்டாடும் வகையில் செலிப்ரேட் இந்தியா - இந்தியாவைக் கொண்டாடுங்கள் - என்று கோலாகல நிகழ்ச்சியும் நடத்திவிட்டு வந்திருக்கிறார் சுதா ராஜா.

சுதா ராஜாவை லிவர்பூல் பல்கலைக்கழகம் அங்குள்ள குழந்தைகளின்  "சப்ரங்' அமைப்புக்குப் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.  சுதாவின் சர்கமும், சப்ரங் குழந்தைகளுடன் லண்டன் பெக் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியிருக்கிறார்கள்!

வரும் செப்டம்பர் 21ஆம் தேதி, ஒன் டே ஒன் காயர் (ஒரு நாள் ஒரு சேர்ந்திசை) நிகழ்ச்சி உலக சமாதானத்துக்காக நடைபெறவிருக்கிறது.  ஒன்றிசைந்து பாடுவதில் உள்ள ஒற்றுமையின் பலத்தைக் காண்பிக்கும் நிகழ்ச்சியாக அது இருக்கப்போகிறது.

சர்கம் குழுவுக்கு இன்னொரு பொறுப்பும் இந்த ஆண்டு வழங்கப்பட்டது.  கும்பகோணம் அருகே உள்ள மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரசுவதியின் ஹர்ஷ வித்யா குருகுலத்தில் ஜூன் 2017 முதல் 10 மாதங்களுக்கு 100 குழந்தைகளுக்கு சேர்ந்திசைப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.  சர்கம் காயரின் 12 உறுப்பினர்கள் இதில் பயிற்சி அளிக்கிறார்கள்.  
- சித்தார்த்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com